நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற, இருக்கிற வாய்ப்புக்கும் வசதிக்கும் கீழ் வாழ பழகிக்கொண்டாலே நமது பிரச்சினைகள் தீர்ந்து விடும். நாம் அன்றாடம் காச்சியாய் வாழ்வதற்கும் அடுத்தவேளைக்கு உணவில்லாமல் இருப்பதற்கும் காரணம், நம் சிந்தனை தெளிவின்மையும், சரிவர திட்ட மிடாததும் தான். அடுத்த வேலை கஞ்சிக்கு வழியில்லை என்பவரகள், எத்துனை பேர் கிடைக்கின்ற கூலியில் பாதிக்குமேல் மதுக்கடைகளில், பீடி, சிகரட், வெற்றிலை பாக்கு என்று செலவழிக்கிறார்கள். பலர் வாழ்கையின் சவால்களை எதிர்நோக்க திராணியற்று வேண்டாமென்று " மறந்து வாழ " என்று சினிமாவையும் டாஸ்மாக்கையும் தஞ்சம் அடைகிறார்கள். இறைவனின் படைப்புகளில் எறும்பு கூட மழை காலத்திற்காக சேமிக்கிறது, வசந்த காலத்தில் பூத்து சிரிக்கும் மலர்களில் இருந்து மதுவை திரட்டி தம் " பஞ்ச " காலத்திற்காக சேர்க்கிறது தேனீ. அழகிய உருவில், செம்மையான அறிவுடன் படைக்கப்பட்ட மனிதன் ஏன் இப்படி இருக்கிறான் ?. சிந்திக்க வேண்டாமா ?
ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருகிறது, தாக மெடுத்த நாய் நக்கித்தான் " மில்லி லிட்டர் " அளவில் குடிக்கிறது, யாரும் நாயிடம் வாய் வைத்து குடிக்கூடாது என்று சொன்னார்களா?....... தேவையானால் யானை தும்பிக்கையால் உறிஞ்சி "லிட்டர் கணக்கில் " தன்மேல் அருவியென பீய்ச்சிகொள்கிறது, விவரமான மனிதன் வண்டிகளிலோ, லாரிகளிலோ, டேங்கர்களிலோ அள்ளிக்கொண்டு போய் பல்வேறு தேவைகளுக்கு உபயோகித்து கொள்கிறான், பணம் பண்ணுகிறான். யாரும் யாரையும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார்களா ?
சிலர் வியாபாரம் செய்து கூட ஒன்றும் செய்ய இயவில்லை, வாழ்கையை ஓட்டுவதே சிரமமாக இருக்கிறது என புலம்புகிறார்கள், சைக்கிளில் மழை காலத்தில் உப்பு வியாபாரம் செய்தால் என்னவாகும் ?, வெயில் காலமாகவே இருந்தாலும் கூட, ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்தில் எவ்வளவு தான் உப்பை உபயோகிப்பார்கள் ?. மாற்றி சிந்திக்க வேண்டும். பாஷையும் தெரியாமல், வட நாட்டில் இருந்து வந்து, புடவைகள், நைட்டிகள் போன்றவற்றை தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் தலையில் சுமந்து வியாபாரம் செய்கிறார்களே ? கண்டதில்லையா ? பழைய கிழிந்த பட்டுபுடவைகளுக்கும், பழைய தேக்கு மர சாமான்களுக்கும் பணம் தருவதாக ஊரெல்லாம் வலம் வருகிறார்களே ?. காலம் காலமாய் பழைய கொலுசை வாங்கிக்கொண்டு புது கொலுசு தருவார்களே? இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவர்களெல்லாம் நாளும் நம்மிடையே தானே வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். யாரும் இவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வில்லை, நம் நிலைமைக்கு நாம் தான் பொறுப்பு என்ற புரிதல், கற்பனை, உழைக்க அஞ்சாமை . நமக்கு பசித்தால் நாம் தான் சாப்பிட வேண்டும், நம்மை தன்னுள்ளே சுமந்து, உண்பதையும், உண்டு உடலில் ஊறியதையும் நம்மிடம் பகிர்ந்து, நம்மை இவ்வுலகில் பெற்று விட்ட தாய் சாப்பிட்டால் கூட நம் பசி தீராது அவரவர் சாப்பிட வேண்டும்.
நம்முடைய நிலைமை எதுவாக இருந்தாலும் அவைகள் நம் கரங்கள் தேடிக்கொண்டவைகள் தான். பறவையை கண்டு பறந்திட நினைத்தவன் பறக்கிறான், ஆழ கடலில் சஞ்சாரம் செய்யநினைத்தவன் நீர் மூழ்கி கப்பலை கண்டான், விண்மீன்களை கண்டு வியந்தவன், அண்டத்தை துலாவி, இன்னுமோர் உலகம் உண்டென நிறுவிட சுவடுகள் தேடி பயணித்துக்கொண்டே இருக்கிறான். இது மட்டுமா ? நம் கரங்களில், நம்மை சுற்றிலும், உலகை சுருக்கி, வசதியை பெருக்க வந்திருக்கும் எண்ணற்ற, மின்னணு சாதனங்கள். அவைகளை உருவாக்கிய மனிதர்கள் என்ன சிறப்பு படைப்புக்களா ?. நம்மை போன்றவர்கள் தானே. யாரும் அவர்களுக்கு, அடிப்படை தேவைகளுக்கு உதவினார்கள், கொடுத்தார்கள் என்று தயவு செய்து நினைக்காதீர்கள். உலகம் முழுதும் மனிதர்கள் ஒரே மாதரி தான், நீங்கள் நன்றாய் இருந்தாலும், எக்கேடு கெட்டு போனாலும் எனக்கென்ன ?, என்ற மனப்பான்மை தான் அகில உலகத்திலும் பின் அவர்களுக்கான உந்து சக்தி? மாற்று சிந்தனை, கற்பனை, வசதியாக வாழ ஆசை. நமக்கு சோற்றுக்கு சிந்திக்கவே சோம்பல், வசதியாய் வாழ நினைக்க சுயநினைவேது ?.
வழமையான வருமானத்துடன், அனாயசமாக கூடுதல் வருமானம் தேடும் அன்றாடம் காய்ச்சிகளை கண்டிருக்கிறீர்களா, சேலம் பகுதியை சேர்ந்த பழங்குடிமக்கள், தமிழ் நாட்டிலே பரவலாக பரவி, பெரும்பாலும் கட்டுமான துறையிலே கூலிவேலை செய்கிறார்கள். தினசரி 8 மணி நேர வேலைக்கு, ரூ 600, ரூ 700 வாங்குகிறார்கள். ஆங்காங்கே வேலை செய்யும் கட்டிடங்களிலேயே குடும்பத்துடன் தங்கிக்கொண்டு வேலை செய்கிறார்கள். இரவு மட்டும் சமைப்பார்கள். நிறைய சோறு ஆக்கி இரவும் உண்டுவிட்டு, மீதியை நீரூற்றி மறுநாள் பகலிலும் உண்பார்கள். அவர்கள் வேலை செய்யும் கட்டிடங்களுக்கு சாமான்கள் வரும் போது, முழு லோடு கல்லோ, மணலோ எதுவானாலும் சரி. கான்ட்ராக்ட் முறையில் லோடுக்கு ரூ 1500. 2000 என்று பேசிக்கொண்டு, 6 மணிக்கு மேல் , ஒரே குடும்பத்தை சேர்ந்த 2, 3 பேர் சேர்ந்து, 1 மணி ,2 மணி நேரத்துக்குள் இறக்கி முடித்து விடுவார்கள். இதுவும் உபரி வருமானம் தான்.
இன்னும் சிலர் வானம் பார்த்த பூமி, அதிகம் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள், சென்னை போன்ற பெரு நகரங்களில் கட்டிட வேலை செய்கிறார்கள், இவர்களுக்கு கூலி கூடுதல். இவர்களும் மேற்கண்ட முறைகளில் கூடுதல் வருமானம் தேடிக்கொள்கிறார்கள். அவரவர் ஊர்களில், வசதியான வீடுகள், நிலன் புலன்கள் இருக்கிறது. விவசாய நேரங்களில் அவரவர் ஊர்களில் பெண்கள் மட்டும் தங்கி விவசாய வேலைகளை பார்க்கிறார்கள், ஆண்கள் அவர்களுடைய தேவை அங்கு வருமட்டும் நகரங்களில் வேலை பார்ப்பார்கள் . நம் " வெள்ளை சட்டை " முதலாளிகள், நாளை கூடுதலாக வேலை வாங்கிக்கொள்ளலாம் என்ற நினைப்பில் " போனசாக " குடிக்க வாங்கி கொடுத்து " குடி" கெடுக்கிறார்கள்.
இன்னும் சிலர் வானம் பார்த்த பூமி, அதிகம் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள், சென்னை போன்ற பெரு நகரங்களில் கட்டிட வேலை செய்கிறார்கள், இவர்களுக்கு கூலி கூடுதல். இவர்களும் மேற்கண்ட முறைகளில் கூடுதல் வருமானம் தேடிக்கொள்கிறார்கள். அவரவர் ஊர்களில், வசதியான வீடுகள், நிலன் புலன்கள் இருக்கிறது. விவசாய நேரங்களில் அவரவர் ஊர்களில் பெண்கள் மட்டும் தங்கி விவசாய வேலைகளை பார்க்கிறார்கள், ஆண்கள் அவர்களுடைய தேவை அங்கு வருமட்டும் நகரங்களில் வேலை பார்ப்பார்கள் . நம் " வெள்ளை சட்டை " முதலாளிகள், நாளை கூடுதலாக வேலை வாங்கிக்கொள்ளலாம் என்ற நினைப்பில் " போனசாக " குடிக்க வாங்கி கொடுத்து " குடி" கெடுக்கிறார்கள்.
வாழ்கையில் முன்னேற என்ற எண்ணம் வேண்டும், மனமிருந்தால் மார்க்க முண்டு.
வேலை இல்லை, வேலை இல்லை என்று புலம்பி திரிபவர்களுக்கு, படிப்பில்லை என்பவர்களுக்கு, உள்நாட்டில் வாய்ப்புக்கள் இல்லை என்போருக்கு, தேடலுடன் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களை கவனித்தாலே போதும், கொட்டிக்கிடக்கும் வாய்ப்புக்கள் தெரியும். தொழில் செய்பவர்களுக்கே முன்னேற்ற பாதை எளிதாய் அமையும். படிப்பு என்பது நமது சிந்தனையை செம்மையாக்கி தரும் ஒரு சாதனம் தானே தவிர, தொழில் செய்ய தேவையே இல்லை, அது இருந்தால் தான் முடியும் என்பதில்லை.
நமதூர் வாணியசெட்டியார்களை கவனித்திருக்கிறீர்களா ?, நாலுமுழ வேட்டி, கதர் அரை கை சட்டை, ஒரு துண்டு இவை மட்டும் தான் தான். வாரச் சந்தைகளிலும், வியாபாரத்திற்க்காக மக்கள் கூடு மிடங்களிலும் இவர்கள் எண்ணை வியாபாரம் செய்வார்கள். சந்தைக்கு வரும் போது துண்டால் சும்மாடு கட்டி, பித்தளை பாத்திரங்களில் எண்ணையை தலையில் சுமந்து வருவார்கள். அத்துடன் ரூ 1000, ரூ 2000 இக்கு சில்லறை மாற்றி வைத்திருப்பார்கள். சிறு சிறு வியாபாரிகள் தங்களிடம் சாமான் வாங்குபவர்களிடம், 20, 50, போன்ற பெரிய நோட்டிற்கு, சில்லறை இருக்காது, அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை, செட்டிமார்களிடம் சென்று, சில்லறை பெற்று கொள்ளுமாறு சொல்லி அனுப்புவார்கள். ஒரு ருபாய்க்கு சில்லறை வேண்டும் என்றால் 95 பைசா தான் கொடுப்பார். அதாவது 5%கமிசன் , இன்னும் பொடி சில்லறை வேண்டும் என்றால் ரூபாய்க்கு 10 பைசா அதாவது 10%கமிசன் , இது நாம் நம்முடைய வசதிக்காக, அவசரத்திற்காக கணக்கு பார்க்காமல் செலவு செய்வது, சாதரணமாக ஒரு ஏரியாவில் ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று சந்தை நடக்கும். ரூ 1000 த்தை வைத்து ஒரு சந்தையில் ரூபாய் 50 லிருந்து 100 வரை கமிஷன் பார்த்து விடுவார். ஒரு மாதத்தில் 200 லிருந்து 400 வரை கிடைப்பதாக கொண்டால் . 2 லிருந்து 5 மாதத்திற்குள், புரட்டிய ரூ 1000 த்தை, இரண்டு மடங்காக்கி விடுவார். இந்த கூடுதல் வருமானம், எந்தவிதமான கூடுதல் உழைப்போ, பிரயாசையோ, இன்றி......., இதற்கு என்ன தேவை என்று நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள். எண்ணை வியாபாரத்தில் இருந்து வருவது தனி. வங்கிகளில் இதே தொகையை போட்டால் இரண்டு மடங்காக ஐந்தரை ஆண்டுகளாகும். இதை தான் வொர்க் ஸ்மார்ட் என்கிறார்களோ !!!!!!! செட்டி பிள்ளை கெட்டி பிள்ளைதான் போங்கோ !!!!!
இதே சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே தான் மேல் நாடுகளில், கண்வினியன்ஸ் ஸ்டோர் என்பதாக சொல்லி திறந்திருக்கிறார்கள், இவைகள் 24 மணிநேரமும் 365 நாட்களும் திறந்திருக்கும், இவற்றில் இல்லாத பொருள் என்பதே இருக்காது , ஆனால் சாதாரண கடைகளில் கிடைப்பதை விட 25% லிருந்து 50% வரை விலை கூடுதலாக இருக்கும். சிங்கப்பூர் சென்றவர்கள் 7 -11 ஸ்டோர் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், அது இவ்வகை கடை தான்.
இதுவரை நான் கதைத்தேன். இனி நீங்கள் சொல்லுங்கள், நம்முடைய் நிலைமைக்கு யார் காரணம, நம்மால் முடியாதா ?. வேலையில்லை என்பது நொண்டிசாக்கா ? சிந்திப்போம் சகோதரர்களே!!!!! நம்மாலும் முடியும் சாதிப்போம்.
No comments:
Post a Comment
தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........