Saturday, July 25, 2015

சொத்து சேர்க்கலாம் வாருங்கள் - 6

கடந்த சில பதிவுகளில், பணப்புழக்கம் இருக்கின்ற காலங்களில், பெரும்பாலோர் போன்று நாமும் வாழ வேண்டும் என்கின்ற  ஆழ்ந்த சிந்தனை அற்ற நோக்குடன் செயல் படுவதால், நாம் அடைந்திருக்கிற, அடையக்கூடிய  நஷ்டத்தை, எளிய கணக்குகளின் மூலம் விளக்க முயன்று இருக்கிறேன்.

வரவுக்கும் செலவுக்குமே சரியாக இருக்கிறது சேமிப்பது எப்படி என்பவர்களுக்காக, நாம் பிரச்சனைகளை  அணுகுகின்ற முறைகளை, மாற்றி சிந்தித்து  செயல்பட்டால்,  செலவுகளை குறைத்தால், அவைகளை சேமிப்பாக, உபரி வருமானமாக ஆக்கி கொள்ள முடியும் என்பதையும் கோடிட்டு காட்டியிருந்தேன். மேற்கொண்டும் சேமிப்பை நமக்கு வேலை செய்யகூடியதாக  ஆக்கக்கூடிய சில முதலீட்டு முறைகளை சொல்லத்தொடங்கி , தங்கம்,மற்றும் தங்க  நகைகளில் தொடங்கி வைத்தேன்.

மாற்றி சிந்திப்பது என்று எழுத தொடங்கிய போது  நினைவில் ஊடாடிய ஒரு    " சுடச்சுட "   என்று சொல்லத்தக நிகழ்கால  நிகழ்ச்சி ஒன்றை சொல்லி காட்டுகிறேன்.

நான் முக்குளிக்காமல் பள்ளி இறுதிதேர்வு  முடித்து கல்லூரியில் சேர்ந்து விட்டோம் என்ற வெற்று  ( அன்றைக்கு தெரியாது ) பெருமையில் இருந்த காலம்.  அருகில்  13  KM  தூரத்தில் உள்ள ஊரிலிருந்து பழைய இரும்பு வாங்க வென்று எங்களூருக்கு வந்து  ஒருவர்  சைக்கிளில் தெரு தெருவாக சுற்றி வருவார். துரு  பிடித்த  பழைய சைக்கிள், காரியரில்  ஒரு அரை கள்ளிப்பெட்டி, அதில்  ஒரு பெரிய அமுல் பால் டின் டப்பாவில்  வேர்கடலை, திராசு படிக்கல், இவை தான்  அவரின் தளவாடமும் ,.முதலீடும்.  சின்ன சின்ன சாமான்களுக்கு வேர்கடலை, பெரிய சாமான்களுக்கு  காசு.  வெயில் மழை பாராமல் தினமும் வருவார். பெரும்பாலான நாட்களில் எங்கள் தெருவில்  எதுவும் கிடைக்காது,  இருந்தும்  காலை மாலை இருவேளையும் வருவார். சில நாட்களுக்கு பிறகு அவருடன் பேச்சு கொடுத்து அறிந்து  கொண்ட விஷயம், அவருடைய                    " தளவாட "  சாமான்கள் எதுவும் அவருடையது அல்ல,  எல்லாம் அவருடைய     " முதலாளி " வுடையது, வாங்கு கின்ற  சாமான்களை முதலாளி விலை கொடுத்து வாங்கி கொள்வார். கொள்முதலுக்கும், விற்ற விலைக்கும் உள்ள வித்தியாசம் அவருடைய லாபம்.இவரை போல் பலர்  சுற்று வடடார ஊர்களில்  தொழில் செய்வதாக சொன்னார்.  கல்லூரி முடித்து சென்னை சென்ற பின்பு அறிந்து கொண்ட செய்தி,  திருச்சி , மதுரை ,கோவை போன்ற பெருநகரங்களிலும் கூட இப்படிதான் நடக்கிறது என்று.        இது தான்                     " பிரான்சைசிங் "  என்பதற்கு அடிப்படை போலும். இரண்டாம் உலகப்போருக்கு பின்பு  ஐரோப்பாவில் இருந்து  புலம் பெயர்ந்து வந்த யூத இனமக்கள், அமெரிக்காவின் பெரு நகரங்களில்,  குறிப்பாக  நியூயார்க்கில் பிழைப்பு நடத்தியதும்  இவ்வாறுதான்.   பல ஆண்டுகளுக்கு  பிறகு கடந்த ஆண்டு அவரை பற்றி விசாரித்த போது,  அவர் பெரிய ஹோல்சேல் இரும்புக் கடையும், பழைய இரும்பு கடையும்  வைத்துக்கொண்டு,  லட்ச கணக்கில் பெறுமதியுடைய  வீடுகளுடன் வசதியாக இருப்பதாக கேள்விப்பட்டேன். இப்பொழுது அவரிடம் வேலை பார்பவர்களுக்கு  " கவரேஜ் ஏரியா " வை கூடுதலாக்குவதற்காக   சைக்கிளுக்கு பதிலாக   டிவிஎஸ்  50  வாங்கி கொடுத்து தொழில் செய்வதாக சொன்னார்கள் !!!!!!!!!. இது போன்றே இன்னும் பேப்பர் தொழில் செய்து பணம் பண்ணிக்கொண்டிருப்பவர்களை பற்றியும் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த  தொழில் மாடல் 30, 40 ஆண்டு பழமையானது என்றாலும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 மேற்கண்ட முறையையே, போட்டியின் காரணமாக வருமானம் குறைவாக கிடைப்பதை ஏற்றுகொள்ள மறுத்த ஒரு தொழில் முனைவர், மாற்றி சிந்தித்து மாதம், ரூ 2,40,000/ சம்பாதிக்கிறார். நெடுந்தூர ரயில்களில் தானும் இன்னும்,அறுவரும் பயணம் செய்கின்றனர், வண்டி நிற்கும் இடங்களிலெல்லாம் இறங்கி, பயணிகள் வீசும்  அலுமினிய குப்பைகளை மட்டும் பொறுக்கிக்கொண்டு வண்டியில் ஏற வேண்டியது.   ரயில்  சென்று திரும்பி வர  எடுக்கும் 4 நாட்களுக்கான  சாப்பாட்டு செலவு, ரயில் டிக்கட் செலவு எல்லாம் தொழில் முனைவரை சேர்ந்தது.   ஒவ்வொரு தொழிலாளிக்கும்  4 நாட்களில் 100 கிலோ குப்பை சேகரிக்க வேண்டியது என்பது இலக்கு. (போக, வர) பயணத்தில் ஒரு வேலை ஆள் மூலம் கிடைக்கும் லாபம் ரூ 4,000/ !,  8 பேரின் சம்பாத்தியம் ரூ 32,000/ !!, மாத சம்பாத்தியம் ரூ 2,40,000/ !!! ,செலவு ரூ 40,000/ !!!!, வருமானம் ரூ 2,00,000/ !!!!!, வருட வருமானம் ரூ 24,00,000 !!!!!!.  நம்ப முடிகிறதா ?.  இது  அமெரிக்காவிலோ,  ஜப்பானிலோ , ஆஸ்திரேலியாவிலோ இல்லை சகோதரர்களே !!!!!!.  நம் தமிழ் நாட்டில் தான். 
இன்று அவர் வருமானத்தை எதில் முதலீடு செய்வது என்று யோசித்து கொண்டிருக்கிறார்.  சரியான முறையில் சிந்தித்து முதலீடு செய்தால் ஐந்து வருடங்களில் எங்கோ போய்விடுவார்.

முக்கியமான செய்தியை சொல்லாமல் விட்டுவிட்டேன், உலகிலும் சரி, நம் நாட்டிலும் சரி பெரிய பெரிய பணக்காரர்கள் தங்களுடைய சொத்து மற்றும் பண விவகாரங்களை  யாரிடமும் பகிந்து கொள்ளாமல் தமக்குள் ரகசியமாகவே வைத்திருக்கின்றனர்.   தன மக்கள், மனைவியர் கூட அறியாத அளவிற்கு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். உர்து / ஹிந்தி பேசுகின்ற வட மாநிலங்களில்  ஒரு சொல்லடை  "  தௌலத்  ஔர்  அவுரத் கே பாரே மேம் பாத் நஹின் கர்ணா "  என்பதாக , அதாவது  சொத்தை பற்றியும் மனைவியை பற்றியும் யார்டமும் எதுவும் பேசாதே !!!!!

எங்களூரில் வெளிநாடுகளில் வேலை செய்யக்கூடியவர்கள் அதிகம். பெண்கள்  பிரசவ நேரத்தில்,  அம்மம்மா......இந்த வேதனையை என்னால் தாங்க முடியாது......  இதுபோதும், இனிமேல் பிள்ளையே வேண்டாம் என்று பிரசவ " சங்கல்பம் "  எடுத்து கொல்வார்களாம்..  குழந்தையின் முகத்தை பார்த்ததும் " பேறுகால " சிரமங்களையெல்லாம் மறந்து, சிற்சில மாதங்களில்  மறு குழந்தைக்கு தயாராகி விடுவார்களாம்.   அப்படி, இனி வெளிநாட்டு வாழ்க்கையே வேண்டாம் என்று  விரக்தியாய்  ஊர்  திரும்பியவர்கள்.  சரியான  திட்டமிடல் இல்லாததால் ஓரிரு மாதங்களிலேயே,  புத்தம் புது சட்டை துணிமணிகளின்  " புதுக்கருக்கு "  மாறுமுன்பே   " அட்டையை " தூக்கிக்கொண்டு   " புதிய மேய்ச்சல் நிலங்கள்   "  தேடி அலைய ஆரம்பிப்பார்கள்.  இம்மாதிரியானவர்கள் கூடி குதுகளிக்கவும், ஊர்நிலவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் ஊரின் நிரந்தர பிரஜைகள் இவர்களுடன்,  ஊடாடவும்  செககடிகுளத்து  மேடு என்ற ஒரு வசதியான              " வெட்டியரங்கம் " அமைந்திருக்கிறது.  முதல் நாள் இரவு  நடுநிசி  வரை கூட கூடி பேசிக்கொண்டு இருந்திருப்பார்கள், யாருக்கும் என்னவென்று  தெரியாது, அடுத்த  இரெண்டொரு நாட்கள் காணாமல் போயிருப்பார்கள், மூன்றாம் நாள் யாருக்காவது போன் வரும்,  இன்ன நாட்டிலே இருக்கிறேன் என்று. அவ்வளவு ரகசியம்.  வெட்டியரங்கத்திலோ   சென்ற  மாட்டை தேடுவாருமோ,  வந்த மாட்டை கட்டுவாருமோ  இருப்பதில்லை. இப்படி சென்றவர்கள் உலகின் பல நாடுகளில் வாழ்கிறார்கள்.

உலக அரங்கிலே ஆங்காங்கே தினமும் விவரம் வெளிவருகிற பில்லியனர், மில்லியனேர் பற்றிய செய்திகள்,  அவர்களின் இந்த இரகசியத்தையே  வெளிக்காட்டுகின்றன.  இது ஏன் எப்படி என்று  யாரும் கேட்கவும் இல்லை, எல்லோரும் இவ்வாறே நடந்திருக்கிறார்கள். யாருக்கு விளக்கம் தெரியவில்லை, எனக்கும் சொல்லத்தெரியவில்லை, அது அப்படித்தான்.  அடுத்த பதிவில், கடன் பத்திரங்கள், ரியல் எஸ்டேட்டு பற்றியும் இறைவன் நாடினால் காணலாம்


     

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........