Friday, July 17, 2015

பில்லியனராக " பயத்தை " முதலீடாக கொண்ட சாதனை பெண்ணின் கதை

அமெரிக்க  கலிபோர்னியா  மாநிலத்தின் ப்ரிமொண்ட் என்ற ஒரு நகரில்  வேட்டி (கைலி ) கட்டி வெட்டியாய் கூடி, உண்டு, களித்து, அரசியலும்  சினிமாவும் பேசி,  அலப்பரை செய்ய வென்று ஒரு  வெட்டி சங்கம் இருக்கிறது.

       பெயர் தான் வெட்டி சங்கம்,  உறுப்பினர்கள் வெட்டிகளல்ல.  இடையிடையே  சமயங்களில் சில வெட்டியல்லா விசயங்களும்  மாட்டி  வதை படுவதுண்டு.   நண்பர் ஒருவர்  புதிதாய் ஹை ஸ்கூல் முடித்த  தன  பையனை, கல்லூரியில் சேர்க்காமல்,  சிறிய கடை  ஒன்று வைத்து கொடுத்துவிட்டார், படிக்க அனுப்ப வில்லை. ஆளாளுக்கு அவரை  " படிக்க வைக்காதது தவறு,"  " சின்ன பையனை இப்படி செய்யக்கூடாது " என்று பல குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் சொல்லி  குதறி விட்டார்கள்..

        நண்பர் பொறுமையாக, மற்ற நண்பர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து நீங்கள் என்ன படித்தீர்கள் என்று கேட்டார்.  அவர்களும்  நான், MCA , Btech , civil ,என்று அவரவர் படித்ததை சொன்னார்கள். எல்லாவற்றையும்   கேட்டு விட்டு  பேச  தொடங்கினார் .

 .               படிக்கும் போது என்னென்னவோ கனவுகள் கண்டு, போட்டா போட்டிக்கிடையே  விரும்பி தேர்ந்தெடுத்து   கஷ்டப்பட்டு படித்து விட்டு இப்ப என்ன செய்கிறீர்கள்,   படித்த துறையில் சாதிக்காமல், அந்த துறையையே  கூட  துறந்து விட்டு,  பணம் சம்பாதிக்க வென்று  இரவு பகல் பாராமல் உழைக்கிறீர்கள்.   6 மாதமோ ஒரு வருடமோ செலவு செய்து படித்த கம்ப்யூட்டர் டிப்ளமாவின்  காரணமாக இங்கு  வந்து வேலை செய்கிறீர்கள்,  நீண்ட காலமாக இங்கே இருப்பவர்கள்  சேமித்த   பணத்தை, மளிகை கடையில் முதலீடு செய்வோமா ?, ஹோட்டலில் முதலீடு செய்வோமா ?  என்று சிந்திக்கிறீர்கள்.  தங்கள் படித்த துறையில் ஏதாவது சாதிப்போம் என்று யாராவது நினைக்கிறீர்களா?. உங்களை போன்ற ஆட்களை வைத்து தான் இங்கே பெரிய பெரிய கம்பனி காரர்களெல்லாம் பில்லியன் கணக்கில் சம்பாதிக்கிறான். பொதுவாக எல்லோரும் உங்களை   கம்ப்யுடர் எஞ்சினீர் என்று அழைத்து கொள்கிறீர்கள்.

             என்னை பொருத்தவரை, ப்ரொபெசன்ல் டிகிரி படித்தவர்கள்  எந்த துறையில்  படிக்கிறார்களோ, அத்துறையில்  சாதனை  படைக்க  வேண்டும்,  பெற்றோர்  சிரமப்பட்டு   படிக்க செலவு செய்கின்ற  தொகையை  வீண்   விரயம் செய்யாமல்,  காலா காலத்தில் சம்பாதிக்க தொடங்கி பெற்றோருக்கு உதவுவதே உத்தமம் , நானும் பள்ளிக்கு,  கல்லூரிக்கு போகிறேன் பேர்வழி என்று காலத்தை வீணாக்க கூடாது. என் மகன்   சரியாக    படிக்க வில்லை, இப்பவே  தொழில்  செய்ய  தொடங்கினால்,   நாளடைவில்  புதிய புதிய   உத்திகள்,  அவனுகே  சுயமாக தோன்றக்கூடும்.  அப்பொழுது  அவன்  இருக்கும்  துறையிலேயே  அவன்  பெரியாளாக  வரக்கூடிய  வாய்ப்புக்கள் உண்டு.  டாக்டராகவோ, எஞ்சினியராகவோ அல்லது வேறு பல துறை நிபுணராகவோ ஆக வேண்டும் என்று நினைப்பதின் மூல காரணமே பணம் சம்பாதிப்பது தான் என்றார் . எல்லா  செயல்களுக்கும்   மூல  நோக்கம்  பணம் தான் என்றார்,  அதுதான். சரியாகவும் படுகிறது.

                 மற்ற நண்பர்கள் யாரும் வாயே  திறக்க  வில்லை.படிப்பு  என்பது  மிகவும்  அவசியம்  என்பதில்  மாற்றுகருத்தில்லை, ஆனால் சாதனைக்கு  படிப்பு  அவசியமில்லை . பல எடுத்துக்காட்டுகள் நமக்கெல்லாம் தெரிந்து இருந்தாலும்,  இங்கே சமீபத்திய ஒன்றை  பாருங்கள்.

                 பெற்றோர்களின் வேலை காரணத்தால் பல மாநிலங்களுக்கும், சில நாடுகளுக்கும் சிறு வயதிலேயே சென்று வந்திருக்கும் 30 வயதை தாண்டாத  இளம் பெண், எலிசபெத் ஹோல்மேஸ். இன்றைய  தேதியில்  $4.6 பிலியன்  நிகர  சொத்து மதிப்பு பெற்றுருக்கிறார்.சுய முயற்சியால் உருவான  உலகின் முதல்  இளம் பெண் பில்லியனர் என்ற தகுதியை  அடைந்திருக்கிறார்.

                 சீனாவில் இளம் பெண்ணாக இருந்த காலத்தில்  C++   சாப்ட் வேரை, சீன பள்ளிகளுக்கு சப்ளை செய்து இருக்கிறார். ஒருமுறை  அவரது தந்தைக்கு எழுதிய கடிதத்தில்

      "  நான் வாழ்கையில் எதாவது புதிதாக ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன், அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்றால், மனித சமுதாயமே இதுபோன்ற ஒன்றை கண்டுபிடிக்க  முடியுமா என்று நினைக்கின்ற ஒன்றை கண்டுபிடிப்பது தான்  "  என்பதாக.
                 கிறிஸ்டியன் ஹோல்மேஸ்  என்ற தன தாத்தாவின்  அடியொற்றி  தானும் ஒரு டாக்டராக  வேண்டும் என்ற நோக்கத்துடன் படிக்க தொடங்கிய அவரை,  ஊசியை கண்டாலே குலை நடுங்குகின்ற அவரது மனநிலை,  கெமிகல் எஞ்சினியராக மாற வைக்கிறது. ஆனால் அவரது வாழ்க்கை பாதையையே மாற்றிய  அதே   ஊசி பற்றிய மனநிலைதான்,  ஒரு பெரிய பயோ டெக் கம்பனியை உருவாக்கி  அதன்  மூலம்   பில்லியனர் ஆகும்  வாய்ப்பையும் உண்டாக்கி  இருக்கிறது.

                 2003 இல் உலக புகழ் பெற்ற ஸ்டான்போர்ட்  யுனிவசிட்டியில் முதல் வருடத்திலேயே, பிரசிடன்ட் ஸ்காலர்  என்ற தகுதியுடன்   $  3000  மாத உதவித்தொகை  பெற்று, கெமிகல் எஞ்சிநீரிங்க்கில் ஆய்வை தொடங்குகிறார்.

                 முதல் செமஸ்டர் முடியுமுன்பே  அவரது பேராசிரியர் சந்நிங் ராபர்ட்சன்  என்பவரிடம்,  ஒரு கம்பனி  ஆரம்பிக்கலாம் வருகிறீர்களா ? என்று அழைப்பு விடுத்து, அவரது  வழிகாட்டுதலுடன் கம்பனியை ஆரம்பிக்கிறார். இன்று " தேரநோஸ் "என்ற  பெயரில் பிரபலமாக இருக்கிறது.   அதே கால கட்டத்தில்  இரத்தத்தில் செலுத்தப்படுகிற மருந்தின் அளவை கணக்கிடுகிற,  அணிந்து கொள்கிற கருவி ஒன்றை கண்டுபிடித்து, காப்புரிமைக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

                  நம்மை போன்ற சாதாரண ஆட்கள் புரிந்து கொள்வது மாதிரி ஒன்றை சொல்வதென்றால் டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்ய சொல்லும்போது,  கிளினிகல் லேப் களில் இரத்தம் எடுக்கின்ற அளவைத்தான் பார்த்திருப்பீர்களே. பல சோதனைகள் என்றால் எவ்வளவு இரத்தம் எடுக்க வேண்டியிருக்கும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.  எலிசபெத் உருவாக்கியிருக்கும் முறையில் எந்த சோதனையாக இருந்தாலும், எத்தனை சோதனையாக இருந்தாலும் அதற்கு  ஒரு சொட்டு இரத்தம் போதும், அதுவும் கூட ஒரு " பின் "  குத்துவதால் வரும் இரத்தமே போதுமானது. இது கிளினிகல் டெக்னாலஜியில் மைல் கல் என்பதாக சொல்கிறார்கள்.

                   சோதனைக்கு ஆகும் நேரம், இரத்த அளவு, செலவு எல்லாமே தற்பொழுது நடைமுறையில் உள்ளதை விட  4, 5 மடங்கு குறைவு. இம்முறை இன்னும் எல்லா இடங்களிலும் வர வில்லை காரணம்,  விஞ்ஞானிகள்  எல்லோரும் எப்படி சோதனை செய்கிறாய் என்று எங்களுக்கு  சொல் நாங்கள் அங்கீகாரம் தருகிறோம் என்கிறார்கள், எலிசபெத்தோ  உங்கள் அங்கீகாரம் எனக்கு தேவையில்லை, FDA வில் விவரம் சொல்லி இருக்கிறேன், அவர்களின் அங்கீகாரம்  இருக்கிறது அது போதும் என்கிறார்.  தற்பொழுது அமெரிக்காவின்  56 மாநிலகளில்  செயல் பட  " தேரநோஸ் " க்கு   அனுமதி கிடைத்திருக்கிறது. இந்தியாவிற்கு வர சில காலம் பிடிக்கும் என   நினைக்கிறேன் .

                  தள தள வென பொன்னிறத்துடன், அறிவு பளிச்சிடும் கண்களுடன் விளங்கும் எலிசபெத்  தான் ஒரு " வேகன் "என்பதாக சொல்லிக்கொள்கிறார். மணிக்கொருமுறை  காய்கறி, கீரை சாரு அருந்துகிறார்.     

                  அமெரிக்க மண்ணிலே பிறந்து,   டேடிங் போகாமல், டிவி இல்லாமல், பத்தாண்டுகளாக விடுமுறையே எடுக்காமல் இருப்பதாக சொல்கிறார்.  பயோ டெக் கம்பனி ஆரம்பித்து, 10 ஆண்டுகளுக்கு உள்ளாக  இன்றைய தேதிக்கு 84 காப்புரிமைகளை பெற்று இருக்கிறார்.   இப்படி ஒரே குறிக்கோளுடன், இலக்கை தவிர வேறொன்றையும் எண்ணாததாலொ  என்னவோ இவ்வளவு  குறுகிய காலத்தில் இமாலய சாதனையை செய்ய முடிந்தது போலும்.


            

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........