Saturday, July 4, 2015

பங்குசந்தை வீழ்ச்சி இன்று சீனா, நாளை இந்தியாவா?

ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பும், தற்பொழுதும்  உள்ள நிலைமைகளையும், வசதிகளையும்  யோசித்து பார்தோமானால்,  மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தென்படுகிறது,   3 மணி நேர விமான பயண தூரத்தில்  உள்ள நாடுகளில் உள்ள உறவினர்களுடன், முன்பெல்லாம் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் பல மணி நேரங்கள் ஆகும், சில சமயங்களில், பல நாட்கள் கூட பிடிக்கும். ஆனால் இன்று  தொழில்நுட்ப  வளர்ச்சியால், உலகின் ஒரு முனையில் இருப்பவர் மறு முனையில் இருப்பவருடன் ஒரு சில நொடிகளிலேயே தொடர்பு கொள்ள முடிகிறது,  நாளுக்கு நாள் உலகம் சுருங்கி கொண்டே போவது  போல் தெரிகிறது.
                    உலகின் ஒரு பகுதி உறங்கிக்கொண்டிருக்கும் போது மற்றொரு பகுதி சுறு சுறுப்பாக இயங்கி கொண்டிருக்கிறது.  இதன் காரணமாகவே, தங்க சந்தையும், பங்கு சந்தையும் அதற்கேற்ப மாறிக்கொள்கிறது.  குறிப்பாக வெவ்வேறு நாட்டு  பங்கு சந்தை களின்  ஏற்ற இறக்கங்கள் உடனுக்குடன் மற்ற  நாடுகளின் சந்தைகளில்  தாக்கத்தை  ஏற்படுத்தும் அளவிற்கு நெருங்கி விட்டன.
                    இந்தியாவும், சீனாவும் பொருளாதார ரீதியில் யார் உலகின் இரண்டாவது  இடத்தை பெறுவது என்பதில் மிக மும்முரமாக இருக்கின்றன.  சீனாவை பொறுத்த வரையில் பொருளாதார  தகவல்கள் எளிதில் கிடைப்பதுமில்லை, கிடைத்தாலும் முழுதும் நம்பும்படியும்  இருப்பது இல்லை.  இந்தியாவிலோ. அப்படி இப்படி என்று வெறும் வாய் சவடால்கள் தான்  ஊடகங்களால் பரப்பபடுகின்றன.  பழைய கணக்கீடு முறைகளை மாற்றி, புதிய கணக்கீட்டு முறைகளால் சாதகமான தகவல்கள்  பெறப்பட்டு, வளர்ச்சி அடைவது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. உள்நாட்டில் இருப்பவர்களுக்கு தெரியும், நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று.
              உலக அரங்கில் இவ்விரு நாடுகளை பற்றி  பொருளாதார  வல்லுனர்கள் ( ? ), மேதைகள் ( ?) என்று சொல்லிக்கொள்வோர் பரப்பி வருகிற பல்வேறு ஊடக செய்திகள் கணக்கின்றி  காண கிடக்கின்றன.
               கடந்த ஒரு வருட காலமாக சீனாவின் பொருளாதார செயல்பாடுகள் பற்றி , அந்நாட்டின் அரசு ஊடகங்கள் வேண்டும் என்றே, இட்டுக்கட்டி  பரப்பிய  தகவல்களால், பங்கு சந்தையில், பங்குகளின் மதிப்பு இரண்டு மடங்காகி விட்டது. கடந்த ஜூன் 12 இல் சந்தை உச்சத்தை தொட்டது.  இந்த வெள்ளிகிழமை ( ஜூன் 26 ) அன்று ஒருநாளின் மிகப்பெரிய சரிவான 7 % ஐ சந்தித்திருக்கிறது. கடந்த 10 வருடத்தில் இவ்வாறான சரிவை  சந்தை சந்தித்ததில்லை என்றும் சொல்லப்படுகிறது. கடந்த வருட உச்சத்தில் இருந்து, பங்குகளின் மதிப்பு  சிறுக சிறுக குறைந்து,   இன்று வரை19 % சரிந்திருக்கிறது.  முதலீட்டாளர்கள் சந்தையில் இருந்து வெளியேற வழி தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
                கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் சீன பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளதாக  கணிக்கப்பட்ட போதும். கடந்த காலாண்டில்  பொருளாதார வளர்ச்சி  விகிதம் 7 % ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.  இது  2009 வது வருடத்திற்கு பிறகு ஏற்பட்ட மிக குறைவான காலாண்டு வளச்சி விகிதம் என்று  சொல்லப் படுகிறது.
                பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவாக இருந்தாலும், அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள், பல்வேறு பட்ட பொருளாதார தகவல்களை  பரப்பி, சீன முதலீட்டாலர்களை, பங்குகளில்  முதலீடு செய்ய ஆர்வமூட்டின. பலபேர், பேங்குகளில் கடன் வாங்கி, குறுகிய காலத்தில் லாபமீட்டி விடலாம் எனக்கருதி முதலீடு செய்துள்ளனர்.
                 இதே கால கட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு, புதிய கம்பனிகள் பங்கு சந்தையை  முற்றுகை இட்டுள்ளன. அப்படி திரட்டிய தொகையை, தாங்கள் முன் பெற்றிருந்த கடனை அடைக்க பயன் படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வருடத்தின், முதல் ஆறுமாதங்களில் உலகிலேயே மிக அதிகமான  புதிய  வெளியீடுகள் வெளிவந்து சாங்காய் exchange முன்னணியில் இருந்தது. 78 கம்பனிகள் சேர் வெளியிட்டு $ 16.6 பிலியன் திரட்டி முதலிடத்திலும்,  31 கம்பனிகள் சேர்  வெளியிட்டு  $16 பிலியன் திரட்டி  ஹாங்காங்கு 2 ஆம் இடத்திலும், 112 வெளியீடுகளில்  $ 7 பில்லியன் திரட்டி, ஷென்சென் 5 வது இடத்தையும் பிடித்தன
                இப்படி கணக்கற்று வந்த, புதிய வெளி ஈடு களும், பங்குகளின் விலை சரிவிற்கு ஒரு முக்கிய காரணி  என்று நிபுணர்கள் சொல்கின்றனர்.

இந்த  நிலைமையை கண்ட சீன அரசு, பேங்குகளின்  லோன் கொடுக்கல் வாங்கலுக்கு கடுமையான கெடு பிடிகளை ஏற்படுத்தியுள்ளது.  பங்கு சந்தையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள், இவ்வாறான நேரங்களில் தான் பங்குகளை வாங்கி குவிப்பார்கள்,  அதிலும்  குறிப்பாக வெளிநாட்டு  முதலீட்டாளர்கள்.  கடந்த ஆண்டுதான் சீன அரசு,  வெளிநாட்டவர்களுக்கு, தன பங்கு சந்தையை திறந்தது, அதுவும் நேரடியாக முதலீடு செய்ய முடியாது,  ஹான்காங் வழியாக தான் செய்ய முடியும். அங்கிருந்து முதலீடு செய்ய வேண்டுமானாலும், விசேச அனுமதி பெறவேண்டும்.
               முதலீட்டுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஞாயமான அளவு சீன சந்தையில் அமெரிக்க முதலீடு இருக்கிறது.  கடந்த வருட பங்கு சந்தையின் அபரிமிதமான சுறுசுறுப்பு,  ஏதோ ஏட கூடமாக நடக்கப் போகிறது என்று உணர்ந்தது போல், இந்த வருடத்தில் மட்டும் $ 22 பில்லியன் அளவிற்கு முதலீடு வெளியேறி இருக்கிறது,  அதிலும் குறிப்பாக இந்த மாதத்தில் மட்டும் $ 7 பில்லியன் வெளிஏறி  உள்ளது. என்பதாக இ.பி.எப்,ஆர். குளோபல் என்ற ரிசர்ச் கம்பனி டைரக்டர்  தெரிவிக்கிறார்.
             சீன சந்தையின் இந்த சரிவால் பெரிதும் பாதிக்கபட்டிருப்பது, சிறு முதலீட் டாலர்கள் தான். இந்திய சந்தையும், உண்மையான வளர்ச்சி காரணிகள் இன்றி, ஊகத்தின் அடிப்படையில் உயர்ந்துள்ள சந்தை, எவ்வளவு காலம் சரியாமல் தாக்கு பிடிக்குமோ?. இவ்வாறான நிலைமைகளில் அதிகம் பாதிக்கப்படுவது சிறு முதலீட்டாளர்கள் தான். கடன் வாங்கி முதலீடு செய்தவர்கள் கவனமாக இருக்கட்டும் 

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........