Thursday, July 30, 2015

சொத்து சேர்க்கலாம் வாருங்கள் - தொடர் 7

பகுத்தறிவை முன் வைத்து பணத்தறிவை பெருக்குவோம் !!!!!!.....

செல்வம் சேர்க்க  வேண்டும் என்ற குறிக்கோளுடன்  அதற்கான   வழி முறைகள் என்னவெல்லாம் என்று பார்க்க தொடங்கி  இருக்கிற  நாம்,  முடிந்த  அளவிற்கு தீர சிந்தித்து,  முறையான கட்டுப்பாடான வகையில் செயலாற்ற நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் நமக்குள்   வளர்த்து கொள்கிற ஒழுங்கு முறை தான், நாம் இலக்கை அடைவதை தீர்மானிக்க கூடியதாய் இருக்கும். நம்மில் பெரும்பாலோர்   வீட்டு வாடகை,  செல்போன்  பில், வண்டி டியூ  போன்றவற்றை  சரியான                நேரத்தில் , தலையை அடகு வைத்தாவது  கட்டிவிடுகிறோம் . கட்டவில்லையென்றால் என்ன நடக்குமென்று தெரியும், ஆனால் ஒவ்வொரு முறையும் கட்டாவிட்டால் வரும் விளைவுகளை யோசித்து செய்வதில்லை, அனிச்சையாக செய்கிறோம்.  நம் கையை விட்டு போன இந்த தொகைகள் களால் நமக்கு கிடைக்கும் " சேவைகளுடன் " அவற்றின் உபயோகம் முடிந்து விட்டது, நாம் அதைப்பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது, பார்ப்பதும் இல்லை.  நீங்கள் உங்களுடைய பொருளாதார இலக்கை அடைய வேண்டும் என்றால், உங்களுடைய  சேமிப்பையும் முதலீட்டையும் பற்றி,  இவை நம்முடையவை அல்ல,  என்பது போன்ற பற்றற்ற துறவு  மனப்பான்மையை உருவாக்கி கொள்ள வேண்டும். மேற்கோள் காட்டிய மேற்படி செலவுகள் பற்றி எப்படி மாதம் ஒருமுறை நினைவு கொள்கிறோமோ அப்படி,  3 மாத , 6 மாத இடைவெளிகளில், நம் முதலீட்டின்  ஆரோக்கிய நிலைமைகளை பரிசீலித்து, அதற்கு தக மாற்றங்கள் செய்யவேண்டி இருந்தால் செய்து கொள்ள வேண்டுமே தவிர ,  மற்றபடி அவைகளை மறந்து விட வேண்டும்.

எல்லாவற்றிக்கும் ஒரு விலையுண்டு,  இலவசம் என்பதே கிடையாது.  நாளைய  ஓய்வுகாலத்தில்  யாருக்கும்  பாரமாக இல்லாமல் இருக்கவும், நம் பொறுப்புக்களை  இலகுவான முறையில் நிறைவேற்றவும்,  இப்பொழுதில் இருந்தே நம்மை தயாராக்கி கொள்ளவும், இன்று கடை பிடிக்கின்ற சிக்கனமும், கூடுதல் வருமானத்திற்கு செய்கின்ற உழைப்பும், மனத்தால் கடைபிடிக்கின்ற  உறுதிப்பாடுகளும் தான் நாம் கொடுக்கும் விலை அரசாங்கம்  இலவசமாக  கொடுக்கிறதே என்கிறீர்களா ?. இலவசத்தின் இலட்சணத்தை பாருங்கள்.   நம்மில் சிலருக்கு  கொடுக்கப்பட்ட இலவசத்தின்  விலையை,  நம்  எல்லோரிடம் இருந்தும் ,   பீடி,  சிகரட் ,சர்கரை, வெல்லம்,தேயிலை என்று  அன்றாடம் நம் வாழ்விற்கு அத்தியாவசியமான  எல்லா பொருள்களின் மூலமாகவும், இன்னும்  இவை போன்ற பல நூறு பொருட்கள்  வழியாகவும்,   நாம்  அறியாமல் நம்மிடம் இருந்து, பல பெயர்களில் வரியாக,  சிறுக சிறுக வசூல் செய்யப்படுகிறது.  இதனால் தான் விலைவாசி கூடுகிறது.   இவைகளை  பற்றியெல்லாம்  நாம் சிந்தித்து விடக்கூடாது  என்பதற்காக தான்,  பட்டி தொட்டியெல்லாம்  "  டாஸ்மாக் தீர்த்த  தலங்கள்  "   மேலும் போதைக்கு வலுசேர்க்க உறவு  சொல்லி, சொல்லி தாலாட்ட சொற்சிலம்ப மேடைகள்.

நிதி  நிறுவனங்கள், வங்கிகள்  எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள் ?  நம்மிடம் இருந்து குறைந்த வட்டிக்கு வாங்கி,  மற்றோருக்கும் தொழில்களுக்கும் வியாபாரிகளுக்கும்  அதிக வட்டிக்கு கடன் கொடுத்து, லாபமீட்டுகிறார்கள்.

தொழிலதிபர்களும், வியாபாரிகளும்  எந்த அளவிற்கு வட்டி கொடுத்தால், தங்களால் வட்டியும்  கொடுத்து , மேற்படியாக லாபமும் பார்த்து  கண்ணியமான முறையில் தொழில் நடத்த முடியும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்.  இதனால் தான் வட்டி விகிதம் கூடும்போது  தொழில் துறை பாதிக்கப்படுகிறது, தொழில் வளர்ச்சி இருப்பதில்லை. அறக்க பறக்க பாடுபட்டு  தொழில் செய்து லாபமில்லாமல் இருப்பதற்கு,  இருக்கும் அளவிலேயே இருந்து கொள்ளலாம் என்று இருந்து விடுகிறார்கள். இந்த அளவை ரிசர்வு வங்கி நெறிப்படுத்துகிறது,  இது  9% இல் இருந்து 12% இக்கு இடையில் இருக்கும்.   இப்படி சாதக பாதக விளைவுகளை சீர்தூக்கி பார்க்கும்  அடிப்படை பொருளாதார அறிவு , நம்மை போன்ற கீழ்தட்டு மக்களுக்கு இல்லை.

அதனால் தான் யாரும் ரூ 10,000 முதலீடு செய்யுங்கள், மாதம் ரூ 500, ரூ 1000 தருகிறோம், ஒருவருடம் கழித்து முழு முதல்  ரூ 10000  திருப்பி தருகிறோம்  என்று சொன்னால்,  நம்பி  முதலீடு செய்ய தயாராய் இருக்கிறோம். எத்துனை பேர் பெரிய தேவைகளுக்கென்று சேர்த்து வைத்திருந்த  பணத்தை  அள்ளிக்கொடுத்து விட்டு,  அலையாய்  அலைந்து கொண்டிருக்கிறோம்.  மோசடி செய்தவன்,  சொகுசாக  பாதுகாப்புடன்  உள்ளே இருந்துவிட்டு  சிற்சில வருடங்களில் வெளியே வரப்போகிறான்.  முதல் இழந்தவர்களை .பற்றி கவலை படுபவர் யார் ?......   நாம் தான்   யோசிக்க வேண்டும்,  எப்படி யாராலும்   நடைமுறை  யில்   சாத்தியமில்லாத அளவில் லாபம் தர முடியும்?.   தருகிறேன் என்றால் முதலுக்கே மோசம் என்று நினைத்து கொள்ளுங்கள்.  ஒப்பீட்டிற்கு வங்கிகளில், பெரிய கார்பொரேட் கம்பனிகளில் டெபாசிட்டுக்கு  எத்தனை சதவீத வட்டி கொடுக்கிறார்கள் என்று பார்த்தால் நிலவரம் தெரிந்து கொள்ளலாம்.          

மோசடி பேர்வழிகள்  எந்தெந்த வகைகளில் எல்லாம்   திட்டமிட்டு வருவார்கள் என்று நம்மால் கற்பனைகூட  செய்ய முடியாது .  தேக்கு மர திட்டம், தென்னை மர திட்டம், கீமு கோழி.....  இன்னும் எத்தனை எத்தனையோ. கோவையில் விவசாய பல்கலைகழகம்  இருந்தும்,  கீமு கோழி  பற்றி முன்பே எச்சரிக்கை  செய்யவில்லை  என்று சொல்வோரும் உண்டு .  மற்றவர்களை  குறை சொல்வதை விட, நம் செயல்களுக்கும், பணத்திற்கும் நாமே தான் பொறுப்பு என்ற புரிதல் மனப்பான்மை வர வேண்டும்.  எல்லாம் சரியாகி விடும்.

கடன் பத்திரங்களிலே முதலீடு செய்ய நினைப்பவர்கள,     தமக்கு  நன்கு அறிமுகமான கார்பொரட் கம்பனிகள்  வெளியிடும் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.  கன்வர்டிப்ல் பத்திரங்கள் இன்னும் நல்லது.  அரசாங்கம்  சம்பந்தப்பட்ட,  அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களை  தவிர்ப்பது  நல்லது. கம்பனிகாரர்கள்  வெளியிடும், பத்திரம் சம்மந்தப்பட்ட விவர புத்தகத்தை படித்து புரிந்து கொள்ளவேண்டும். விளம்பரம் வரும் பத்திரிகை  களிலோ, பெரிய பத்திரிகைகளின் வர்த்தக பகுதியிலோ அது பற்றி பேசப்படும் அல்லது எழுதப்படும்.  இவ்விவரங்களை எல்லாம்  உணவுடன்  தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போன்று உபயோகிக்க மனதை பக்குவ படுத்திக்கொள்ள வேண்டும். ஒருவருடைய  அபிப்பிராயத்தை மட்டும் படித்து முடிவு செய்யாமல், மாற்றமான  அபிப்பிராயங்களையும்  அலசி, நீங்களே முடிவு எடுக்க வேண்டும்.  நிதி ஆலோசகர்கள்,  நிதி சம்மந்தமான  கட்டுரைகள் எழுதுவோர் எல்லாம் கூலிக்கு மாரடிப்போரே  என்பதை மனதில் கொள்ளுங்கள்,   இவர்களுக்கு கம்பனிகள் பணம் கொடுத்து சாதகமாக எழுதசொல்வது உண்டு.   இந்த உலகத்தில் உங்கள் நலனையும், பணத்தின் பாதுகாப்பை யும்   பற்றி கவலைப்படுவது  உங்களை தவிர வேறு யாராகவும்  இருக்கமுடியாது.  இதனை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.

நாட்டில் நீதி நேர்மை என்பதெல்லாம் இல்லை, ஒருசில  இடங்களில் நோய் படுக்கையில் படுத்து டிரிப் ஏற்றிக்கொண்டிருக்கிறது.  பணம் இருந்தால்  எதனையும்  சாதித்து   விடலாம்   என்ற  நிலை இருக்கிறது. உங்களுடைய  பொருளாதாரத்தையோ, பொருளாதார விஷயங்களையோ, கூடியவரை  யாருடனும் விவாதிக்காமல்  இருப்பது நல்லது.  முதலீடு  சம்மந்தமான ஆலோசனைகளுக்கு  " மகோஉபாத்தியாய "  கூகிள்  இருக்கிறார்.  எந்த விசயமாக இருந்தாலும் கூகிள்லில்  பதில் கிடைக்கும்.   வங்கிகளில் வேலை செய்வோர்,  கல்லூரி படிப்பு படித்தோர் என்று எண்ணி யோசனை  கேட்காதீர்கள்,  நீங்கள் கேட்கும் விஷயம் பற்றி தெரியாவிட்டாலும்,  எனக்கு தெரியாது என்று சொல்லாமல் தவறான தகவல் தந்து திசை திருப்பி விட கூடும்.  எனக்கு தெரியாது, அல்லது  தெரிந்தவர்களிடம் கேட்டு சொல்கிறேன் என்று சொல்லும்  பக்குவப்பட்ட மனிதர்கள் மிகவும் குறைவு.  எனக்கு  ஓரளவுக்கு தெரிந்த  விஷயத்தை,  இறை அச்சத்தால் உறுதி படுத்தி கொள்ள வேண்டி மார்க்க கல்வி பெற்று சிலகாலமான  ஒரு சகோதரரிடம் கேட்ட போது, " கூடாது ", என்று சொல்லி விட்டார்,  நான் என்ன விஷயம் பற்றி பேசுகிறேன் என்று தெரிகிறதா ?,  என்று கேட்ட போது,  ஷேர்  என்றால் என்ன என்று கேட்டடார்.   ஆகவே யாரிடம் கேட்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். கணினி இல்லாதவர்களுக்கு போன்  இருக்கவே இருக்கிறது.  ஒரு  சிறிய கட்டணத்திற்கு பிரவுசிங் சென்டர்களிலும் ,  குறிப்பிட்ட  சில நூலகங்களில்  கட்டணமின்றி  கணினி உபயோகித்து கொள்ளலாம்.

இன்றைய கால கட்டத்தில் மிக அதிகமாக மோசடி நடக்க கூடிய தொழிலாக  ரியல் எஸ்டேட் தான் இருக்கிறது.  அவரவர் ஊர்களிலேயே  பார்த்து வாங்குவது தான் சாலச்சிறந்தது. மனையாக வாங்குவதை விட வீடாக வாங்குவது சிறந்தது.  பெரு நகரங்களில், நமது பட்ஜெட்டுக்குள்  கிடைக்க வில்லை என்பதற்காக  பெருநகரை சுற்றியுள்ள ஊர்களில் வாங்கி ஏமாந்தவர்கள் இருக்கிறார்கள்.  ஒரே மனையை பலருக்கும் பத்திரம்  முடித்து கொடுத்த  நிகழ்சிகளும் நடந்திருக்கின்றன. இம்மாதிரியான  நிகழ்சிகளின்  அடிப்படையில் ஒன்றிரண்டு  திரைப்படங்கள் கூட வந்ததாக ஞாபகம்.

எனக்கு நேரிடையாக தெரிந்த ஒரு நிகழ்ச்சி,  அவர் ஒரு அரசு அலுவளர் ,   அலுவலகத்தில்  வேலை பார்த்த எல்லோரும் சேர்ந்து,  ( 40 ,50 பேர் )  ஒரே இடத்தில் மனையை வாங்கி,  சம்மந்தப்பட்ட  அலுவலக ஊழியர்  காலனி என்பதாக பெயரும் வைத்தார்கள்,  ஒவ்வொருவராக  வீடுகள் கட்டினார்கள்.  ஒரு சில வீடுகளே கட்டப்பட  வேண்டிய நிலையில் இருக்கும் போது,  வீடுகளுக்கு செல்லும் பொது வழியை விற்றவர் அடைத்து விட்டார், அது பற்றி  அவரிடம்  கேட்ட  போது  உங்களுக்கு  மனையை மட்டும் தான் கிரயம்செய்து தந்திருக்கிறேன்,  பொது வழிக்கு என்று உள்ள இடத்தை நான் விற்கவே இல்லை என்று சொல்லிவிட்டார். பத்திரத்திலும் அப்படியே இருந்தது,   இத்தனைக்கும்   லேயவுட் போட்டு,  பாதைக்கு இடம் விட்டு இருப்பதாக  காட்டப்பட்ட  இடம் தான். அப்ரூவல் வாங்கவில்லை.   பெரும் போராட்டத்திற்கு பிறகு,  ஏற்கனவே  சதுர அடிக்கு கொடுத்த  விலையை விட கூடுதலாக கொடுத்து  கிரயம் செய்து  வாங்கினார்கள். எல்லோருமே படித்து  அரசு  வேலையில்  இருந்தவர்கள் தான் !!!. இதே போல் சென்னை  நகருக்குள்ளேயே  1980, 1985 களில் என்று ஞாபகம் ,  அரசு வங்கி ஊழியர்கள் சேர்ந்து  2400 சதுர அடி மனை  ரூ 25 லட்சத்துக்கு வாங்கி, 10,15 லட்சம் செலவு செய்து வீடு கட்டினார்கள். இன்று அம்மனையும் வீடும்  85,90 லட்சம்  அளவிலேயே  மதிக்கப்படுகிறது,  இதே தொகையை வேறு வகையில் முதலீடு செய்திருந்தாலோ,   வேறு ஏரியாவில்  இருந்திருந்தாலோ,  25,30 வருட காலத்தில் எத்தனையோ மடங்கு விலை கூடி இருக்கும்.   ஆகவே  எவ்விடத்தில், யாரிடம்  வாங்குகிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். நல்ல விவரம் அறிந்தவர்களிடம் ஆலோசனை செய்து   வாங்குவது நல்லது.  பெரிய ட்ரான்ஸாக்சன் என்றால் , செலவை பார்க்காமல்  வக்கீல் வழியாக செய்வது நல்லது.

அதிகமாக வெளிநாடுகளில் வேலை பார்ப்போர் உள்ள ஊர்களில் எங்கள் ஊரும் ஒன்று. பக்கத்து பெரிய நகரில்,  பின்னால் விலை கூடியதும்  விற்கலாம் என்ற எண்ணத்தில் பலர் வீடுகள் வாங்கி போட்டனர், விலையும்  தாறு மாறாக ஏறியது, இன்று எல்லோரும் விற்க நினைக்கிறார்கள், யாராலும் விற்க முடியவில்லை,  முதலீடு  அப்படியே தேங்கி  நிற்கிறது,  விலை குறைத்து கொடுக்கவும் யாரும் தயாராக  இல்லை. இம்மாதிரியான விசயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலீட்டு வகைகளில்  உடனடியாக நம் தேவைக்கு விற்க முடியாத வகையில்  ரியல் எஸ்டேட் தான் இருக்கிறது ஆகையால் நிரந்தரமான முதலீட்டிற்காக மட்டுமே செய்வது சிறந்தது.

விற்று லாபம் பார்க்கவேண்டும், அதே நேரத்தில் பாதுகாப்பாகவும்  இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தம்முடன், வாங்க நினைக்கும் சொத்தின் மதிப்பிற்கு ஏற்ப,  4,5 பேரோ, 10 பேரோ சேர்ந்து வருமானம் வரக்கூடிய நகருக்குள் இருக்கிற  கட்டிடத்தில் முதலீடு செய்வதை பற்றி யோசிக்கலாம். வைத்திருக்கும்  காலம் வரை உபரி  வருமானமும் வரும், விற்கும் போது  கணிசமான லாபம் கிடைக்கவும் வாய்ப்பு  உண்டு.

அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்க நினைக்காதீர்கள், பட்டப்பகலில், உங்களை எமாற்றப்போகிறேன் என்று சொல்லியே ஏமாற்றும் வேலை, முழு விவரத்தையும் எழுதினால், இப்பதிவு மிக மிக நீளமானதாகி  விடும். இவ்வகையான முதலீட்டை  தவிர்ந்து  கொள்ளுங்கள் என்பதே போது மானதாய்  இருக்கும்.

அடுத்த பதிவில் இறைவன் நாடினால், இதுவரை பார்த்த எல்லாவற்றையும் விட கூடுதல் வருமானம் தரக்கூடியது என்று  புள்ளி விவரங்களுடன் நிறுவப்பட்டுள்ள பங்கு முதலீட்டை பற்றி பார்க்க தொடங்குவோம் ........

உபரி வருமானம்

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........