Saturday, September 19, 2015

ஷேர் மார்க்கட்டில் நஷ்டமடைந்தவரா நீங்கள் ?.......காரணி தேடி ஒரு அலசல்

நமது நாட்டில் பங்கு சந்தையில் ஈடுபடுபவர்கள் யார் என்று பார்த்தால் பெரும்பாலும் மேல்தட்டுக்காரர்களாக தான் இருப்பார்கள்.  முந்தய தலை முறையினர் யாராவது  நிதித்துறை சம்மந்தப்பட்ட  தொழிலில் ஈடுபட்டவர்களாக இருந்திருப்பார்கள், அவர்கள் மூலமாக இவர்களுக்கு  உந்துதல் கிடைத்திருக்கும்,  என்ன் தகவல்கள் எங்கிருந்து பெறவேண்டும், எப்படி அவைகளை  உபயோகித்து,  கம்பனிகளை தரம் பிரித்து, நாம் எப்படி வாங்குதல்/ விற்றல் முடிவெடுக்க வேண்டும் என்ற அடிப்படை  அறிவு அவர்களால்  போதிக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறாக நம் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வழி இருக்கிறதா ? என்று ஏங்குகிறவர்களுக்கு,   ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் தேவையற்ற, ஆடம்பரமான, தகுதிக்கு மீறிய  பொருள்கள் வாங்குவதில் செலவிடும் காசை  நல்ல கம்பனிகளின் ஷேர்களை,  ஒன்றோ, ஐந்தோ, பத்தோ அவர்கள் பெயரில் வாங்கி வைத்து,  சிறிது விவரம் வந்து, ஹய் ஸ்கூல் போகின்ற வயதில், சேர்த்து அவர்களிடம் கொடுத்தால்,  இயற்கையாக ஏற்படும் ஆவலால் விவரம் அறிந்து கொள்ள முயற்சிப்பார்கள்.  வருடம் இருமுறை வரும் டிவிடன்டையும் காண்பித்து,  அவர்கள் அக்கவுண்டில் போட்டளுமோ  அல்லது இன்னும் குறை காசு போட்டு இன்னொரு ஷேர்  வாங்கி கொடுத்தாளுமோ தங்கள் விருப்பம்.  சிறுக சிறுக இதன் காரணமாக சந்தை மீது ஒரு ஈர்ப்பு ஏற்படும். அவர்களே கற்று கொள்வார்கள்.   நல்ல கம்பனி என்னும் போது, பழம்  பெரும் கம்பனிகள் பல இருந்தாலும், உதாரணத்துக்கு சில்,   TVS குரூப் கம்பனிகள்,  கோல்கேட், ஹிந்துஸ்தான் லீவர் போன்றவை.  ரூ 100 லிருந்து  ரூ 500 க்குள் வாங்கலாம்.

கம்பனிகளுடைய  வருடாந்திர, வரவு செலவு கணக்கை பார்த்திருப்பீர்கள்,  ஏறக்குறைய 7,8 வரிகளில்  பல நம்பர்களை வருசைபடுத்தி எழுதி இருப்பார்கள் .  இவைகளில் இருந்து தான், சில கூட்டல், கழித்தல்களை செய்து, இன்னும் சில தொழில் சூழ்நிலைகள், கால மாற்றங்கள்,  அரசாங்கங்களின் தொழிற்சார் ஆதரவு போன்றவற்றை கருத்தில் கொண்டு, கம்பனிகளை மதிப்பீடு செய்வார்கள்.  சாதாரண, 10 ஆம் கிளாஸ் கணக்கு தான்.  ராக்கட் சயன்ஸ் ஒன்றுமல்ல.  கணக்கிடுதல் சிரமமாக இருந்தாலும், தற்காலத்தில் போனில் கூட கால்குலேட்டர் இருக்கிறது !!!. அதற்கும் மேலே வேலையை இலகுவாக்கி தேவையான விவரங்களை, அக்கு வேறு ஆணிவேராய் பிரித்து, புள்ளி விவரங்கள்  தரக்கூடிய  பத்திரிகைகள் பல வந்து விட்டன!!!!!!.  உதாரணத்திற்கு  தலால் ஸ்ட்ரீட்,  தமிழிலும் வருகிறது என்று நினைக்கிறேன். இதன் காரணத்தால் இன்றைக்கு,  என்ன செய்கிறோம் என்ற புரிதல் உள்ள,   யார் வேண்டுமானாலும் பங்கு சந்தையில் முதலீடு செய்து பொருளீட்டலாம்

90 களின் நடுவில் என்று நினைக்கிறேன், அப்பொழுதுதான் இந்திய சந்தை உலகம் முழுக்க பெயர் பெற்றது,  இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் பாமரனில்  இருந்து படித்தவன் வரை எல்லோராலும் பேசப்பட்டது.  இதெற்கெல்லாம் காரணம் ஹர்ஷத் மேத்தா என்றவர் வங்கி சட்டங்களில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி பல வங்கித்துறை நிபுணர்களின் காதில் பூ சுற்றியும்,  பூ பழம் கொடுத்தும்,  பெரும் பணம் பண்ணியது தான். அதிலிருந்து தான் எல்லா பத்திரிக்கைகளும், வணிகம் / நிதி / பொருளாதாரம்  என்பதாக ஒரு பக்கத்தையே ஒதுக்கி எழுதத்தொடங்கின.   அக்கால கட்டத்தில் தான் ஒவ்வொரு சிறு பெரு  நகரங்களிலும். ஷேர் புரோகிங் கம்பனிகள் தொடங்கப்பட்டன,  இவர்கள் மூலமாக ஆசிரியர், அரசு அலுவலர்கள் என பலர் முதலீடு செய்தார்கள்.  முழுக்க முழுக்க இந்த ஏஜெண்டுகள்  பரிந்துரைத்த கம்பநிகளிலேயே   முதலீடுகள் இருக்கும். ஹர்ஷத் மேதாவுடன்  இவர்களும் காலி. இப்படி பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு   " விட்டதடா ஆசை விளாம் பழத்து ஓட்டோடு  ". என்று சொல்வார்களே அப்படி மிஞ்சியது போதும் என்று ஒதுங்கியவரா ?  இல்லை "துண்டை காணோம் துணியை காணோம் "  என்று எல்லாம் இழந்தவரா ?   கீழே உள்ள நிகழ்ச்சியை படியுங்கள்,  உங்களின் பழைய செயல் பாட்டை நினைவு படுத்துகிறதா என்று பாருங்கள்.

நானும்  ந்ம் தேசத்து பெரும்பாலோரை  போன்றவன் தான்.XXXXXX   படித்துக்கொண்டிருந்த காலத்தில்  எண்டமூரி வீரேந்திநாத்  என்ற தெலுகு எழுத்தாளரின், சினிமாவாக்கப்பட்ட கதையின் ஹீரோ,  காதலியின் தந்தையுடன்  போட்ட சபதத்தை நிறை வேற்ற, கம்பனி ஆரம்பித்து  ஷேர் மார்க்கட்டில் ஷேர் வெளியிட்டு இருப்பார்,  இப்படி  தான்  பங்கு சந்தை எனக்கு அறிமுகம்  ஆனது.  இவ்வளவு குறுகிய காலத்துக்குள் பெரும் பணம் ஈட்ட இப்படி ஒரு வாய்ப்பா ?   என்ற பிரமிப்புடன்,  படித்து வெளியேறி,  எதார்த்தம் எதிரில் வர எல்லாம் மறந்து  ஓடோ ஓடென்று ஓடி உழைத்து களைத்து, ஆசுவாசப்படுத்திக்கொள்ள  நின்ற போது தான் மீண்டும் நினைவு வந்தது ஷேர்  மார்கட்,  இதற்கிடையில்  பத்தாண்டுகள் பறந்தோடி இருந்தது.   இது 80 களின் ஆரம்பம்.

என்னுடைய  சர்க்கிளில் உள்ள, படித்த பணக்கார, தொழில் செய்யும், அரசுப்பணியில் இருந்தவர்கள் என்று எல்லோரிடமும், பங்கு சந்தை பற்றி தெரியுமா என்று கேட்டும், அறிந்து கொள்ள புத்தகங்கள் இருக்கிறதா என்றும் கேட்க்காதவர்கள் ஒருவரில்லை.  யாருக்கும் எதுவும் தெரிய வில்லை.  பல மாத முயற்சிக்கு பிறகு சென்னையில் இருந்த ஒரு நண்பரின் நண்பர், புத்தகம் இருக்கிறதென்று சொல்லி  பெயர் சொன்னார்.  அந்த நேரத்தில் தான்  சார்டட் அக்கவுடன்ட் க்கு பயிற்சி நடத்தும் அமைப்பு   C F A  என்ற ஸ்டாக் மார்கட் சம்மந்தப்பட்ட கோர்ஸ் ஆரம்பித்தார்கள், அதன் தலைவர்தான் புத்தகத்தின் ஆசிரியர். 

அன்றைக்கு படித்து புரிந்ததாக நினைத்து கொண்ட, அதே புத்தகத்தை இன்று படிக்கும் பொது, பல புதிய விசயங்கள் விளங்க வருகின்றன. இதை தான் ஆங்கிலத்தில்  Reading the fine lines, என்றும் Read between the lines என்பதாகவும் சொல்கிறார்கள் போலும். மிகத்தெளிவான விளக்கங்கள் தரும் டெக்னிகல் புத்தகம், ஆனால்  நடைமுறை  நுட்பங்கள் அலசப்பட வில்லை, ஒரு வேளை  அக்கால கட்டத்திற்கு தேவையில்லை என்று ஆசிரியர் கருதினாரோ என்னவோ.

அன்றைய சென்னையில் தான், CA, C W A, C F A, Company Secretary போன்ற படிப்புக்களுக்கு பயிற்சி தரும் அமைப்புகள் இருந்தன.  அவற்றில் படிப்பவர்கள் கூடுதலும் தெலுங்கர்கள்,  இன்று கூட நம்மவர்கள் அருகில் கூட செல்லாத, செல்வாக்கு மிக்க, மரியாதைக்கு உரிய, நல்ல சம்பளம் கிடைக்க கூடிய company secretary  படிப்பு.  இந்த மாதிரியான நிதி துறை படிப்பு படிக்கிற ஒருவர் மூலமாக தான், எனக்கு ஒரு சப் ப்ரோகர் அறிமுகம் செய்யப்பட்டார். 

வாரத்திற்கு ஒரு முறையோ, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையோ அவரை சென்று பார்ப்பதுண்டு.  அவர்  இந்த கம்பனி ஷேர்  பலமடங்கு ஏறப்போகிறது  இதை வாங்குங்கள் அதை வாங்குங்க என்பதாக சொல்வார்.  100, 50 என்ற கணக்கில் வாங்குவது உண்டு.  ஆரம்பத்தில் கேஷ் தான் கேட்டார். ஆனால் ரசீது கொடுப்பதில்லை.  அவரை  அறிமுகம் செய்த நண்பரை கேட்டதற்கு. பயமில்லை என்று சொன்னார்.  நான் அதன் பிறகு  செக் தான் கொடுத்தேன்.  காண்ட்ராக்ட் காப்பியோ, என் பெயரில் மாற்ற  சொல்லவோ செய்தால்,  காண்ட்ராக்ட் காப்பிக்கு அந்த இந்தா என்றும்,  நம் பெயரில் ஷேர்  சர்டிபிகேட் வர  3, 4 மாதங்கள் ஆகியது, ஆகுமென்றும் சொல்வார்.  பெயர் மாற்றாமல் இருந்தால் தான், விலை ஏறிய உடன் விற்க வசதியாய் இருக்கு மென்றும் சொல்வார்.

சில காலத்திற்கு பிறகு, வாங்கி விற்றதில்  நான் அடைந்த இலாபத்தை விட, அவருக்கு கமிசனாக நான் கொடுத்தது தான் அதிகமாக இருந்தது, இந்நிலை என்னை அதிகமதிகம் படித்து விவரங்களை தெரிந்து கொள்ள தூண்டு கோளாய் அமைந்தது.  சில கம்பனிகளில் நீண்ட  காலத்திற்கு ( ? ) என்று  ஷேர்  வாங்கி, நேம் டிரான்ச்பரும்  செய்து வைத்திருந்தேன்.  அந்த நேரத்தில்  ரூ 18 க்கு  இம்பால் விற்றது ( இன்று ரூ 740 ),  ரெட்டிஸ் லேப்  ரூ 40 இல் இருந்து ரூ 120 கு போனது ( இன்று ரூ 4000 )  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.  இவைகளை எல்லாம் வாங்குங்கள் என்று சொன்ன தாக ஞாபகம் இல்லை.  சொல்லி இருந்தால் வாங்கி இருப்பேனா ?   சந்தேகம் தான்  ( அறியாமை ). நம் ஷேர்ஐ விற்க சொன்னால்,  விற்க சொன்ன விலையில் இருந்து ரூ 1, 2 குறைவாக இருக்கும்.   பணம் செட்டில்மெண்ட் செய்வதற்கும் 15 நாட்களுக்கு மேலாகும். நாம்  ஷேர்  வாங்க  ஆர்டர் கொடுத்த மூன்றாவது நாள் பணம் கொடுக்க வேண்டும்.  இப்படி பல வகையிலும்  நிழலான விசயங்கள் நடந்தது. கிடைக்கின்ற ஷேர் சர்டிபிகேட் ஒரிஜினல் தானா ?,  விற்றவரின் கையெழுத்து சரிதானா ?, சரி இல்லை என்றால்  சர்டிபிகேட் கிடைக்க  5, 6  மாத மாகும்.  சில  மெய்ன் ப்ரோகர்கள்,  டுப்ளிகட்  ஷேர் புழக்கதில் விட்டதாகவும்  செய்திகள் புழங்கியது. நெறிப்படுத்தப்பட்ட சந்தை கிடையாது. இந்த நேரத்தில் தான், ஹர்ஷத் மேத்தா குழப்பம், சந்தை சரிந்தது,  அவரால் பல புதிய நெறி முறைகள் இயற்றப்பட்டு, முன்பைவிட பாதுகாப்பானதாய்  சந்தை ஆக்கப்பட்டது.   என்னுடைய  சப் புரோக்கர்,  எங்கே போனார் என்றே தெரியவில்லை,  என்னுடைய  பெயர் மாற்றா ஷேர்  களுடன் தான் !!!!!!!.  மேலே குறிப்பிட்ட இரண்டு பழமொழிக்கும்  இலக்கணமாய் ஆனேன்.

இதே காலகட்டதை  சேர்ந்தவர்களும்,  10, 15 ஆண்டுகள் முன்புள்ளவர்களும் கூட,   இன்று பல கோடி பெறுமானமுள்ள  ஷேர்களுடன்,  எனென்ன கம்பனி ஷேர் இருக்கிறது என்று உடனடியாக சொல்ல முடியாதவர்களாய், இன்றும்  மும்பையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  நேரடியாக  J R D டாட்டா, போன்ற முதல் தலைமுறை தொழில் அதிபர்களுடன், A G M இல் கலந்து கொண்டவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலும் நீண்ட கால முதலீட்டில் சம்பாதித்தவர்கள் உயிருடன் உதாரணமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!!!!!!!.  அவர்கள் செய்த ஒரே வேலை,  ஷேர் வாங்கி, பெயர் மாற்றி பத்திரமாக பரணில் வைத்தது தான். ஒருவரின் மனைவி டிவிடன்ட் செக்கை வங்கியில் டெபாசிட் செய்வது சிரமமாக இருக்கிறது என்று சொல்கிறார் !!!!!!!!!!!

10, 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய பங்கு சந்தையின் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தேன்.  2008 சந்தையில்  என் இளைய சகோதரர் ரூ 15 லட்சத்தை இழந்தார்.  ஏன்  அவசரப்பட்டு விற்றாய் ? என்று தொடங்கி,  சந்தையின் பழைய நம்பிக்கையின்மையை போன்ற விஷயங்களெல்லாம் சரி செய்யப்பட்டு,  கம்ப்யுடர் மவுசின்  கிளிக்கிலேயே காரியங்களை நடத்திக்கொள்ளலாம் என்று அறிந்து மீண்டும் வந்திருக்கிறேன்.

யாருக்காவது நினைவுகளை கிளறியதா  ?  அப்படியானால் வாருங்கள் பணம் செய்வோம்




Friday, September 18, 2015

சிங்கப்பூரும், வளர்ந்துவரும் பங்குசந்தையும்

சிங்கபூரைப்பற்றி பலரும் பலவிசயங்கள் எழுதியிருக்கிறார்கள்,  அரை நூற்றாண்டுகளுக்கு முன்னாள், சதுப்பு நிலங்கள் நிறைந்த, சட்டத்துக்கு புறம்பான செயல்பாடு உடையவர்களின் புகலிடமாகவும்,  மலேசியாவால் வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட மீன்பிடி தீவானது,  உண்மையான் தேச பற்று கொண்ட மனிதனின் கரங்களில்  ISLAND NATION  என்று பெயர்பெற்று, வளர்ந்த தேசங்களுக்கு மேலான  GDP  வளர்ச்சி கொண்டு, விரைந்து வீறுநடை போட்டுக்கொண்டு இருக்கிறது.

தேசத்தந்தை, தன்னை தேர்ந்தெடுத்த  மக்களின் முன்பு,  இந்த தேசத்தை நான் எப்படி முன்னேற்ற போகிறேன் என்று கண்ணீர் கரைபுரண்டோட கேட்டது மட்டுமின்றி ,  கண்களை துடைத்துக்கொண்டு, உலகின் எல்லா நாடுகளையும் உதவி வேண்டி,  முதலீடு செய்ய வேண்டி கேட்டு பயணம் செய்தார்.  இஸ்ரேல் தான் முதலில் பச்சை கொடி காட்டியது.  

முஸ்லிம்கள் நிறைந்த நாட்டிற்கு, இஸ்ரேல உதவியா?  முதலீடா ?. என்று மூக்கில் விரல் வைத்த உலகத்திற்கு முன்னாள்,  சிங்கப்பூரின் வளர்ச்சியை பாருங்கள்.  இந்தியா போன்ற  பல மத மக்கள் நிறைந்த தீவு தான்.  எந்த  அடுக்குமாடி குடியிருப்பும்,  இதில் முஸ்லிம்கள், இதில் சீனர்கள், இன்னும் இதில் ஏனையற்றோர் என்ற பிரிவினை இல்லை !!!!. எல்லா இடங்களிலும் எல்லா ஜாதியினரும் இருப்பார்கள்.  தேசத்திற்கு தியாகம் செய்யப்போகிறேன், ஏழை எளியவர்களின் கண்ணீர் துடைக்கபோகிறேன் என்பவர்களுக்கு, தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை  தூர வைக்க தெரிந்திருக்க  வேண்டும்

தன்னுடைய மிக நெருங்கிய நண்பன் மற்றும் அமைச்சரவை சகா, குடும்பங்களும் மிக நெருக்கம்.   நாடு வளர்ந்து வருகிற நேரத்தில்,  மிகப்பெரிய பணமோசடி செய்தான், பாரபட்சம் பாராமல்  ஜெயிலில் அடைக்கப்பட்டான்,  நண்பனின் மனைவி வீட்டிற்கு வந்து  அழுது  புலம்பி,   மோசடி என்ற அவபெயரினால்,  சீன சமுதாயத்திலே  எங்களுக்கு இருக்கிற மானம், மரியாதை போய்விடும், உங்களுக்கு தெரியாதது அல்ல,  காப்பாற்றுங்கள்  என்று கேட்க,   எனக்கு நாட்டு முன்னேற்றம் தான் முக்கியம்,  தவறு செய்தவன் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும் என்று தண்டித்த மாமனிதன் . அவர் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டு, மக்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுக்கவில்லை  என்றது தான்.   ஆம்,  தெருவிற்கு ஒரு கட்சி,  மூலைக்கு மூலை மதுக்கடைகள்  நடத்த உரிமையில்லை, வீதிகளில் குப்பை, எச்சில், துப்ப தடை என்று எதெற்கெடுத்தாலும் கட்டுப்பாடு,  சுதந்திரம் என்றால் என்னவென்று விளக்கம் தெரியாதவர்களுக்கு  சுதந்திரம் கொடுத்தால், நம் தேசத்தில் இருப்பது போல்  குரங்கு கை பூமாலை தான்.  அளவான  சுதந்திரத்தின் பலன் இன்று,  வளர்ந்த நாடுகளே பொறாமைப்படும்  வாழ்க்கைதரம், எல்லோருக்கும்  சொந்தமான வீடுகள்.

இன்றும் கூட கம்யூனிஸ்ட் சீனாவில் மக்கள் பணத்தை கொள்ளைஅடித்து, வெளி நாடுகளுக்கு ஓடிப்போய் செட்டில் ஆனவர்களை தேடிப்பிடித்து,  இன்டர் போல் மூலம் பிடித்து கொண்டுபோய், மரண தண்டனை விதிக்கிறார்கள். மரண தண்டனை கொடுத்தால் இனி எவனும் அப்படி செய்வானா ?. கொள்ளைகளுக்கும், கற்பழிப்புகளுக்கும் நாடு வீதியில் வைத்து தலையை  சீவுகிறார்கள்  அரபு நாடுகளில்,   இப்படி இருந்தால் கட்டிய மனைவியை திரும்பி பார்க்கவே, யோசித்து தான் பார்ப்பார்கள்.   நல்லது செய்ய மனதில் உறுதி வேண்டும். அதைவிட மிகவும் தெளிவான சிந்தனை வேண்டும்.   நமது நாட்டில் உள்ள நிலைமையை பாருங்கள்,  எத்தனை வருடங்கள் பழமையான  ஊழல் ஆனாலும், புதிய பொருப்பாளிகளுக்கு பங்குகொடுத்துவிட்டால், எல்லாம் சரியாகி விடும்.

இன்றைக்கும் குடிநீர் மலேசியாவில் இருந்து தான் வருகிறது,  நாளை என்ன நடக்குமென்று யாருக்கும் தெரியாது, தண்ணீர் கிடைக்காவிட்டால் என்னசெய்வது என்ற தொலை நோக்கு பார்வையால் ,  சிங்கப்பூரில் உபயோகமாகிற நீர் அனைத்தும் ரிசைக்ளிங் செய்யப்படுகிறது.  குடிக்க உபயோகிக்கும் தண்ணீரும் ரிசைக்கில் செய்யப்பட்டது  தான் !!!!!.  சிங்கபூர் தண்ணீரை குடிக்கும் எல்லோரும் சிங்கப்பூர் தண்ணீருக்கு ஒரு தனி சுவைதான் என்று சொல்கிறார்கள் !!!!!!!.  நமது நாட்டில் இருக்கிற ஒவ்வொரு அரசியல்வாதியும் பல ஆயிரம் கோடிகளை கொள்ளை அடித்து வைத்து இருக்கிறார்கள்,  ஒவ்வொருவரிடமும் உள்ளதில்  ஒரு சிறு பகுதியை பறிமுதல் செய்து,  நாட்டின் நதிகளை இணைத்து,  போக்குவரத்திற்கும், பாசனத்திற்கும் பயன் படுத்தலாமே ?  அப்படிப்பட்ட தேச தலைவன்/தலைவி  இந்தியாவில்      உண்டா ?  ஒருவேளை  எமெர்ஜென்சி காலத்து இந்திரா காந்தி போன்ற தைரியமிக்க தலைவி/தலைவன்  தோன்றினால் நடக்குமோ என்னவோ ?   எமெர்ஜென்சி  காலத்தில் நாட்டில் இருந்த  ஒழுங்கு,  வேறு எக்காலத்திலும் இருந்ததில்லை.   சாதாரண மக்கள் வாழ்க்கை  சீராய், கவலை இன்றி சென்று கொண்டிருந்தது ,  பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் எல்லாம், மொள்ள மாரியும், முடிச்சவிக்கியும், ஒட்டு பொறுக்கிகளும் தான்.

சிங்கப்பூரில் இன்றைக்கு ஒரு சட்டம் இருக்கும்,  சிலநாட்களில் அதுவே தலைகீழாக மாறி இருக்கும்.  யாராவது பழைய சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன் படுத்தி சில்மிஷம் செய்திருப்பார்கள், உடனடியாக ஓட்டையை அடைத்து மாற்று சட்டம் வந்து விடும்.  தெளிந்த சிந்தனை, தேசனலனில் அதீத அக்கறை கொண்ட நிர்வாகிகள். கொண்ட நாடு

மிக சிறந்த கட்டுக்கோப்புள்ள, வளர்நிலையில் உள்ள பங்கு சந்தை,  தமிழகத்தை சேர்ந்த மக்களுக்கு பணம் பண்ண நல்ல வாய்ப்புள்ள இடம். தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் உள்ள ஊர்களில் உள்ளவர்கள் பலர், சிங்கப்பூர் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.  இவர்கள் இந்தியாவை விட  பயமின்றி துணிந்து ஷேர் மார்க்கட்டில் முதலீடு செய்யலாம்.

இந்த தளத்தில் பங்கு சந்தை பற்றி சொல்லப்படுகிற செய்திகள். சிங்கப்பூர் சந்தைக்கும்  பொருந்தும்,  அவ்வப்போது சிங்கப்பூர் சந்தை பற்றிய சிறப்பான செய்திகளும் இடம்பெறும். தமிழும் புழங்குவதால்,  சந்தை பற்றிய தகவல்கள் வரும் பத்திரிகைகளை படித்தும் தெரிந்து கொள்ளலாம் 

வளர, பணம் செய்ய வாழ்த்துக்கள்.

ஷேர் மார்கட், பணம்,முதலீடு, பாதுகாப்பு, வரலாறு

Thursday, September 10, 2015

திருவிளையாடலும், ஐரோப்பிய முஸ்லிம் அடைக்கலமும்

அதிகாரத்திமிர்  தலைக்கேறிவிட்டால், தன்னை வளர விட்டு சகித்துக்கொண்டிருந்த தன் சொந்த மக்களையே கொடுமைப்படுத்தி, சொந்த நாட்டையும் சொத்து சுகங்களையும் விட்டு உயிருக்கு பயந்து ஓடும் நிலைமைக்கு  உருவாக்கி விடும் யதேச்சிகாரியின் கோர தாண்டவத்தை சிரியாவில் கண்டுகொண்டிருக்கிறோம்.

அக்கம் பக்கத்தில் இருக்கிற நாடுகள் சில ஆயிரங்களில் அகதிகளை ஏற்றுக்கொண்டாலும், பல அரபு நாடுகள்  சில ஆயிரம் கோடி பண உதவி செய்தாலும், அகதிகளை ஏற்றுக்கொள்ள தயாராய் இல்லை. ஏற்றுக்கொண்டால் பின்னால் திருப்பி அனுப்புவது என்பது எளிதல்ல  மட்டுமின்றி,  இவர்களின் காரணத்தால் தம் மக்களும்,  கூடுதல் உரிமை வேண்டி போராட தொடங்கினால்,  அதிகார பீடங்களில் இருப்பவர்களின் சொகுசு வாழ்க்கை பறிபோய் விடுமே என்ற உள் உதறல் தான்.

சிறிது, சிறிதாக பல தேசத்து மக்கள்  உயிரை துச்சமாய் மதித்து, பயங்கரங்கள் நிறைந்த வழியாய் இருந்தாலும்,  கடல் பயணம் செய்து  தப்பி பிழைத்து கிரீசையோ, இத்தாலியையோ  அடைந்து விட்டால், அங்கிருந்து  ஐரோப்பிய  யூனியனுக்குள் நுழைவது எளிதென்று  எண்ணி பயணம் செல்வது   புதிதென்று  இல்லாவிட்டாலும்,   சமீப காலங்களில்  மக்கள் வரத்து மிகவும்  அதிகமாகி விட்டது.   அதிலும் சிரியரகளின்  எண்ணிக்கை மிக  அதிக மாகி விட்டது. பல அகதிகள் கண்ணீர் மல்க சொல்லும் கதைகள் கேட்க பரிதாபமாய் இருக்கின்றன.  இந்த  சிரிய அகதிகள் கூட்டத்துடன்,  ஆப்கானிஸ்தான,  ஆப்ரிக்க, பாகிஸ்தானி இன்னும் பல தேசத்து மக்களும் அடக்கம்,  இவர்கள் அகதிகள் என்பதைவிட, பணப்பலன் கருதி, பிழைக்க வழிதேடி வந்தவர்களாகவே தெரிகிறது. சிரிய மக்கள் பால்குடி பச்சிளம் குழந்தைகளை ஏந்தி வருவதை காணும் பொது. நெஞ்சை பிழிவது போலிருக்கிறது,  இம்மாதியான மக்களின் பேட்டி,  பணப்பலன்  என்பதைவிட உயிரச்சம் என்பதையே பறைசாற்றுவதாய் இருக்கிறது.

இத்தாலிய, கிரீசு அரசுகள்  வருகின்ற அகதிகளுக்கு போதுமான அளவிற்கு கழிப்பறைவசதிகளும், உணவு தங்குமிட வசதிகளும் செய்து தரமுடியாத தம் நிலைமையை எடுத்துக்கூறி, மற்ற ஐரோப்பிய கூட்டணி நாடுகளை சுமையை பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொண்டும், அவைகள்  கண்டும் காணாமல் இருந்தன.  ஐரோப்பிய யூனியன் சட்டங்கள், இத்தாலிய, கிரீசு அரசுகளின் வேண்டுகோளுக்கு  எதிராக இருந்தாலும்,  மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகவும், மனிதாபிமான அடிப்படையிலும்,  நிலைமையின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு  ஜெர்மனி தான் அகதிகளை ஏற்றுக்கொள்வதாக சொல்லி ஏற்றுக்கொண்டது.

இதில் மிகவும் சிலாகிக்கவேண்டிய விஷயம் என்ன வென்றால், ஜெர்மானிய அரசு மட்டுமின்றி, ஜெர்மன் மக்கள் பலரும் தத்தமது வீடுகளிலும் அடைக்கலம் கொடுப்பது தான்.  இம்மக்களின்  முந்திய தலைமுறையினரா, பல லட்சம் யூத இனமக்களை கொத்துக்கொத்தாய் கொன்று ஒழித்தார்கள் என்று !!!.  இன்றும் கூட இவர்களிடையே,  அக்கொடுமை யில்  பங்கேற்ற ஓரிருவர் வேறுபெயர்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் !!.  பிடிபட்ட சிலரின் வாக்கு மூலங்கள்,  பொது மக்களும்  ஈடுபாட்டோடு  அக்கொடுமைகளை சகித்துக்கொண்டிருந்தார்கள் என்பதை உறுதிபடுத்துவனபோல் இருக்கிறது.   இந்த இடத்தில் ஒரு நெருடலான விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும்.

ஆதரவற்ற யூத மக்களுக்கு உலகமே ஒன்று திரண்டு, அதிகார பீடத்தில் இருந்த ஹிட்லரை கொன்றொழித்து,  யூதர்கலுக்கென்று  ஒரு  தேசத்தையும், அரபு நாடுகளிடம் இருந்து பிடுங்கி,  உருவாக்கி  கொடுத்தன. உலகெங்கும் அடைக்கலமும் கொடுத்து, பயமின்றி வளர வாழ வகை செய்து கொடுத்தன. இன்று,  அன்று  ஹிட்லரிடம் இருந்தது போன்று அதிகாரம்,  யூதர்களிடம், இஸ்ரேலிடம்.   இஸ்ரேல் உருவான காலத்தில் இருந்து இன்றுவரை, தினமும் சிறுவர், வயோதிகர், பெண்கள் என்று பாராமல் பாலஸ்தீனியர்களை கொன்று ஒழித்து கொண்டிருக்கிறார்கள் !!!!.  கணக்கிட்டால்  ஹிட்லர் கொன்றதை விட, இவர்கள் கூடுதலாக கொன்றிருப்பார்கள் போலிருக்கிறது.  சில நேரங்களில், இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களுக்கு செய்யும்  கொடுமைகளை பார்க்கும் போது,  ஹிட்லர் செய்தது சரிதான் என்று எண்ணத்தோன்றுகிறது.!!!!!   இறைவனின் திருவிளையாடல் இப்படித்தான் உடனடியாக புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும்  போலிருக்கிறது !!!!!!!

முஸ்லிம்களின் இறை  நம்பிக்கை,  என்நிலைமையிலும் மார்க்க நெறிமுறைகளை பேணும் உறுத்திப்பாடு உலகறிந்தது.  அவர்களின் உறுதிப்பாடே சில பெரிய  ஐரோப்பிய  ஊடகவியலார்களின் மத மாற்றத்திற்கு காரணமாய் இருந்திருக்கிறது. ஒருபுறம் கலாச்சார அழிவின் விளிம்பில் இருக்கிற ஜெர்மனி,  முஸ்லிம்களுக்கு  அடைக்கலம் கொடுக்கிறது.  ஜெர்மனியின் பொருளாதாரமோ,  மற்ற  ஐரோப்பிய நாடுகள்  ஜெர்மனியின் சொல்லை செவிசாய்த்து கேட்குமளவில் வைத்திருக்கிறது.  ஒரு சில  முஸ்லிம் அகதிகள்,  ஜெர்மனி திருப்பி அனுப்பிவிடாமல் இருப்பதற்காக  கிறித்துவத்திற்கு மாறி இருக்கிறார்கள், காரணம் இஸ்லாமிய நாடுகளில்  கிறித்துவத்திற்கு மாறினால் மரண தண்டனை கிடைக்கும் என்பதை காரணம் சொல்லி அடைக்கலம் பெறுவதற்காக.  அவர்களை கிருத்துவத்திற்கு மாற்றிய பாதிரியார்,  மதம் மாறியவர்கள், முதல் முறைக்கு பிறகு சர்ச்சுக்கு வருவதே இல்லை என்றும், தான் அதைப்பற்றி கவலை படுவதில்லை என்றும் தெரிவிக்கிறார்.  இந்நிகழ்ச்சிகளின் பின்னணியோ என்னவோ, ஜெர்மன் அதிபர்,  அகதிகளை திருப்பி அனுப்ப மாட்டோம் என்பதாக உறுதி கூறுகிறார். இந்த நிகழ்வுகள் உலகத்தின் என்ன மாற்றத்திற்கு முன்னோட்டமோ ?   எதுவாய் இருந்தாலும் நலமே நடக்கட்டும் 

இறைவா !,  இதயங்களின் அதிபதியே !!,  சர்வத்தின் மீதும் ஆளுமை உடையவனே !!!,  உனது  திருவிளையாடல்கள் யாராலும் அறிந்து கொள்ள முடியாது, ரட்சகனே உலக மக்களையெல்லாம் நன்மையின் பக்கம் நடத்து  வாயாக என்று நானும் வேண்டி, உங்களையும் வேண்ட வேண்டி கொள்கிறேன்.
 

Friday, September 4, 2015

ஷேர் மார்கட்டில் பணம் பண்ண பொன்னான வாய்ப்பு !!!!

சோவியத்  யூனியன்  பிளவு படுவதற்கு முன்புள்ள காலத்தில் நடக்கும்     கம்யூனிஸ்ட்  கூட்டங்களுக்கு சென்றால், அடிக்கடி ரஷ்யாவை பார், அமெரிக்காவை பார் என்பதாக  மேற்கோள் காட்டி பேசுவார்கள்.  இங்கு நாமும் கூட அடிக்கடி, உலகில் அதிகம் பேசப்படும் தலைசிறந்த  முதலீட்டு மேதைகள் அமெரிக்காவில் இருந்து வருவதால், அவர்களை பற்றியும்,  அமெரிக்க பங்கு சந்தையை மேற்கோள் காட்டியுமே  பேசக்கூடியவர்களாக  இருக்கிறோம். காரணம்  ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேலாக  அங்கே பங்கு சந்தைகள் இருப்பதாலும்,  அவற்றின்  தினசரி நடவடிக்கைகள் பலதரப்பட்ட சந்தை நிபுணர்களால் பதிவு செய்யப்பட்டு இருப்பதுமே ஆகும்

ஷேர் மார்க்கட்டில் வியாபாரம்  செய்தவர்கள், ஒருவொருக்கொருவர் மேம்பட்டவராக  ஆகவேண்டும் என்பதற்காக,  புதிய புதிய வழிமுறைகளை  உருவாக்கினார்கள்.  தன்  சொந்த முதலீட்டை போட்டு மற்றவர்களை விட மேம்பட்ட கூடுதலான லாபத்தை காண்பிக்கும் போது,  சாதாரண முதலீட்டாளர்கள் அவர்களிடம் தம் பணத்தையும் கொடுத்து நிர்வகிக்க சொல்லுவார்கள். இதன் மூலம் நிர்வாகியும் முதலீட்டாளரும்  நல்ல முறையில் லாபம் பார்க்க முடிந்தது. 1930 களில்  இம்மாதிரியான வழிமுறைகளை  கோர்வைப்படுத்தி,  தானும் ஒரு நிதி நிறுவனத்தை நிர்வகித்துக்கொண்டே,  அம்முறைகளை  பல்கலைகழகங்களில் பாடமாக நடத்தியவர் தான்  பெஞ்சமின் கிரஹாம்.  இவரிடம்  பாடம் பயின்று,  அவரது நிதி நிறுவனத்திலும் பயிற்சியாளராய் இருந்தவர் தான்,   இன்று பெரும் புகழ் பெற்று இருக்கும்  வாறன் பப்பே..  இன்றைக்கும்  கிரஹாம் எழுதிய   THE INTELLIGENT INVESTOR ,  SECURITY ANALYSIS  என்ற இரு நூற்களும்  நிதி நிபுணர்களின்  வேத புத்தகங்களாக கருதப்படுகிறது. மேல் நாட்டாரின் நல்ல பழக்கங்களில் ஒன்று, தம் அனுபவத்தை, அறிவை பிறரிடம் பகிர்ந்து அதனை மேலும் மேம்படுத்தி எல்லோரும் பயன் பட்டுக்கொள்வது.  இப்படித்தான் பல்வேறு துறைகளும் இன்றைய  அசுர வளர்ச்சியை அடைந்து இருக்கின்றன.

நமது நாட்டிலும்  75 ஆண்டுகளுக்கு மேலாக ஐந்து  தலைமுறையாக பங்கு சந்தையில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள்.  டாடா, பிர்லா  போன்றவர்கள் கம்பனியை நிர்வாகம் செய்யும் காலத்திலேயே,  கம்பனியின் வருடாந்திர 
( AGM ) மீட்டிங்களுக்கு 15 வயதில் தகப்பனாருடன் சென்று, பெரியவர்களால் ஓரத்தில் உட்கார்ந்து கவனி  என்று சொல்லப்பட்ட  நாலாம் தலைமுறை காரார்  இன்றும் உயிருடன் இருக்கிறார்.  டாடா கம்பனி குழுமத்தின் அத்துணை பங்குகளும் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கில் இவரிடம் இருக்கிறது.  இவர் இதுவரை ஷேர்களை விற்றதே இல்லை என்கிறார்.

பெண்பார்த்து பிடித்துவிட்டது என்று சொல்லி,  வரப்போகும் மருமகளுக்கு GRASIM INDUSTRIES,   அன்றைக்கு  ஜவுளி கம்பனி, அதன் 1000 ஷேர்களை  பரிசாக மாமனார் கொடுக்க,  அதிலிருந்து ஆர்வம் ஏற்பட்டு  இன்று 80 வயதாகும் அம்மையார், பல கோடி ரூபாய் மதிப்புள்ள  பல்வேறு கம்பனிகளின் ஷேர் வைத்திருக்கிறார்.  இவர்  பங்கு கொள்ளாத AGM  கூட்டங்களே இல்லை. 1975 ஆம் ஆண்டு  வீடு வாங்குவதற்காக விற்றது தவிர வேறு எதற்காகவும் ஷேர் விற்றதில்லை  என்கிறார். 

சமீபத்தில்  காலமான  சந்திரகாந்த் சம்பத் என்பவர்,  1950 வாக்கில் பங்கு சந்தையில் முதலீடு  தொடங்கியவர்.  இன்றைக்கு  மும்பை சந்தையில் முன்னணி  புரோக்கர் சிலர் உருவாக காரணமாக இருந்தவர்.  இவரும் பலகோடி ரூபாய் சம்பாதித்து  இருக்கிறார்.  இவரை இந்தியாவின்  வாரன் பபே என்பதாக சொல்கிறார்கள். இவரது அறையில்  முதலீடு சம்பந்தமான நூற்களும், இதழ்களும்  நிரம்பி இருக்குமாம்,  இவர் விஞ்ஞான முறைப்படி முதலீடு செய்தவராக அறியப்படிகிறார்.

நமது திருச்சியில்  பெண் சார்டர்ட் அக்கவுண்டன்ட் ஒருவர் குறுகிய காலத்தில் நாலரை கோடி ரூபாய் சம்பாதித்ததாக  சொல்கிறார்.

சிறு முதலீட்டாளர்களின்  நலனுக்கு எதிரான விசயங்கள் பெரிய கம்பனிகளில் நடக்கும் போது அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.  சமீப காலங்களில்  அமெரிக்காவில்,  பல சிறு முதலீட்டாளர்களின் ஆதரவுடன், நிர்வாகத்தின் முடிவுகளை தட்டிக்கேட்க கூடிய  முதலீட்டளர்கள் உருவாகி இருக்கிறார்கள்  இவர்களை  INVESTOR ACTIVIST  என்பதாக அழைக்கிறார்கள். இம்மாதிரியான் முயற்சிகளை  மேற்சொன்ன முதல் மூவரும் இந்தியாவில் செய்திருக்கிறார்கள் !!!!!!

இவர்களைப்பற்றிய சேதி எத்தனை பேருக்கு தெரியும் ?.  சந்தை விவரம் தெரிந்த இவர்கள் எத்துனை பேர் உருவாக காரணமாக இருந்திருக்கிறார்கள் ?
 நம்மவர்கள் இப்படித்தான்.  ஆய கலைகள்  64 கிலும்  பாண்டித்தியம் பெற்றவர்கள், பிறருக்கு சொல்லாமல்  செத்து போனதால்,  பண்டைய  நாகரிகத்தின்  அறிவு திறமைகள் பின் சந்ததியினருக்கு கிடைக்காமலேயே போய்  விட்டது.

பங்குகள் ஒரு நிலை இன்றி ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. நாளை என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. இதற்கு முன்பு ஒரு பதிவு, சீனாவின் சந்தை  சரிவை தொடர்ந்து, இந்தியாவில்  என்ன நடக்குமோ என்று இந்த தளத்தில் வந்திருந்தது   CLICK HERE பாருங்கள். அமெரிக்க சந்தை இறங்க தொடங்குவதற்கு சரியாக 15 நாட்களுக்கு முன்பு  வாரன் பப்பே   37 பில்லியன்   டாலருக்கு  பிரிசிசன் காஸ்ட் பார்ட்ஸ்  என்ற கம்பனியை  ஒரு ஷேர்  $ 235 என்ற கணக்கில் வாங்கினார்.  இன்றைய தேதியில் அந்த பங்கின் விலை $ 225  அதுவும் போனவாரம் 220 இல் இருந்தது. உலக புகழ் பெற்ற முதலீட்டு மேதை,  முன்பே தெரிந்து இருந்தால் இப்படி வாங்குவாரா?.  

ஒரு விஷயம் என்னால் மிக நிச்சயமாக சொல்ல முடியும்,  சந்தை ஏறிக்கொண்டே தான் இருக்கும், இறங்கவே இறங்காது, ஏறிக்கொண்டே தான் இருக்கும். இன்றைக்கு அல்ல, நாளைக்கு அல்ல, அடுத்த மாதம் அல்ல,  ஏன் அடுத்த வருசமும் அல்ல  ஆனால் ஏறிக்கொண்டே தான் இருக்கும். என்ன கிறுக்கு தனமா இருக்குன்னு நினைக்கிறீர்களா?.

நம்ம சென்செக்ஸ் மாதிரி  டொவ்ஜோன்ஸ் ஒன்னு கேள்விப்பட்டு இருப்பீங்க, அதை கிட்ட தட்ட  1900 திலிருந்து 2012 வரை  நடந்த ஏற்ற இறக்கத்தை  கிராப் போட்டு இருக்காங்க,  அதை பாருங்க 
 https://jlcollinsnh.files.wordpress.com/2012/04/djia1900-2012.png
ஒன்னும் புரியவில்லை என்று கவலைப்படாதீர்கள் 
கீழே இருப்பதெல்லாம் 1901, 1902.....2012 என்ற வருசங்கள். வலது கை பக்கம் இருப்பதெல்லாம்  இந்த இன்டெக்ஸ் ஏறிய  அளவுகள் 62.5 இல் இருந்து 13500 வரை பல்வேறு வருடங்களில்.


உதாரணத்திற்கு பாருங்கள்,  ஒரு வருடத்தில் 381.17 இருந்தது, அடுத்தடுத்த வருடத்தில் 50.16 கு போய் விட்டது,  அதாவது கிட்டத்தட்ட எட்டில் ஒரு பங்கு. அடுத்து 14164 லிருந்து  சரி பாதியாக 6547.5 ஆகி இருக்கிறது,  எவ்வளவு பேர் நிம்மதி இழந்து இருப்பார்கள், ஹார்ட் அட்டாக் கால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.  தற்கொலை கூட செய்திருப்பார்கள் என்று யோசனை செய்து பாருங்கள்.

சார்ட்டை  கவனமாக பார்த்தால், எவ்வளவு தான் விழுந்தாலும் தொடர்ந்து ஏறிக்கொண்டே தான் இருந்திருக்கிறது என்பது விளங்கும். ஆனால் ஏற்றம் என்பது ஒரே சீராக இருப்பதில்லை, மழை காலத்தில் செம்மண் ரோட்டில் மாட்டு வண்டியில் பயணம் செய்வது போல்  தான். இந்த சார்ட்டை  காண்பித்ததின் நோக்கம்,  இருண்ட குகைக்குள் தனியே போகும் போது, வவ்வால்கள் இருக்கும், சின்ன சின்ன பள்ளங்கள் இருக்கும், ஆங்காங்கே கற்கள் துருத்திக்கொண்டிருக்கும் என்று சொல்லி அனுப்பினால், இப்படிப்பட்ட ஆபத்துக்களை எல்லாம் எதிர்  பார்த்து செல்பவர், அவை எதிர்ப்படும் போது எப்படி பயப்படாமல் எச்சரிக்கையாக இருப்பாரோ? அப்படி இருக்கத்தான்.

இம்மாதிரியான காலங்கள் தான்,   "  எல்லோரும் பயந்து நடுங்கும் போது  பேராசை கொள்ளுங்கள், எல்லோரும் பேராசை படும்போது பயந்து கொள்ளுங்கள்  "  என்று  வாரன் பப்பே சொன்னது. உண்மையில் இம்மாதிரியான வாய்ப்புக்கள் அடிக்கடி கிடைக்காது.  நல்ல கம்பனிகள்  குறைந்த விலையில் கிடைக்கும்  காலமிது.

சிறுக சிறுக வாங்குங்கள்,  25 %,  30 %  குறைந்து இருக்கும் போது சிறிதும், அப்படியே இன்னும் குறையும் போது  சிறிதுமாக வாங்குங்கள்.  ஒரேயடியாக குறையும் என்று இருக்காதீர்கள்.

அமெரிக்க மார்கட் சார்ட் தானே என்று சொல்பவர்களுககாகத்தான், இந்திய முதலீட்டாளர்கள் பற்றி அறிமுக படுத்தியது,  பல மாமாங்க காலங்கள் விற்காமல் இருந்திருக்கிறார்கள் என்றால், எத்தனை ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருப்பார்கள்.  மக்களே  உங்கள் சமத்து. வாழ்த்துக்கள்