Friday, September 4, 2015

ஷேர் மார்கட்டில் பணம் பண்ண பொன்னான வாய்ப்பு !!!!

சோவியத்  யூனியன்  பிளவு படுவதற்கு முன்புள்ள காலத்தில் நடக்கும்     கம்யூனிஸ்ட்  கூட்டங்களுக்கு சென்றால், அடிக்கடி ரஷ்யாவை பார், அமெரிக்காவை பார் என்பதாக  மேற்கோள் காட்டி பேசுவார்கள்.  இங்கு நாமும் கூட அடிக்கடி, உலகில் அதிகம் பேசப்படும் தலைசிறந்த  முதலீட்டு மேதைகள் அமெரிக்காவில் இருந்து வருவதால், அவர்களை பற்றியும்,  அமெரிக்க பங்கு சந்தையை மேற்கோள் காட்டியுமே  பேசக்கூடியவர்களாக  இருக்கிறோம். காரணம்  ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேலாக  அங்கே பங்கு சந்தைகள் இருப்பதாலும்,  அவற்றின்  தினசரி நடவடிக்கைகள் பலதரப்பட்ட சந்தை நிபுணர்களால் பதிவு செய்யப்பட்டு இருப்பதுமே ஆகும்

ஷேர் மார்க்கட்டில் வியாபாரம்  செய்தவர்கள், ஒருவொருக்கொருவர் மேம்பட்டவராக  ஆகவேண்டும் என்பதற்காக,  புதிய புதிய வழிமுறைகளை  உருவாக்கினார்கள்.  தன்  சொந்த முதலீட்டை போட்டு மற்றவர்களை விட மேம்பட்ட கூடுதலான லாபத்தை காண்பிக்கும் போது,  சாதாரண முதலீட்டாளர்கள் அவர்களிடம் தம் பணத்தையும் கொடுத்து நிர்வகிக்க சொல்லுவார்கள். இதன் மூலம் நிர்வாகியும் முதலீட்டாளரும்  நல்ல முறையில் லாபம் பார்க்க முடிந்தது. 1930 களில்  இம்மாதிரியான வழிமுறைகளை  கோர்வைப்படுத்தி,  தானும் ஒரு நிதி நிறுவனத்தை நிர்வகித்துக்கொண்டே,  அம்முறைகளை  பல்கலைகழகங்களில் பாடமாக நடத்தியவர் தான்  பெஞ்சமின் கிரஹாம்.  இவரிடம்  பாடம் பயின்று,  அவரது நிதி நிறுவனத்திலும் பயிற்சியாளராய் இருந்தவர் தான்,   இன்று பெரும் புகழ் பெற்று இருக்கும்  வாறன் பப்பே..  இன்றைக்கும்  கிரஹாம் எழுதிய   THE INTELLIGENT INVESTOR ,  SECURITY ANALYSIS  என்ற இரு நூற்களும்  நிதி நிபுணர்களின்  வேத புத்தகங்களாக கருதப்படுகிறது. மேல் நாட்டாரின் நல்ல பழக்கங்களில் ஒன்று, தம் அனுபவத்தை, அறிவை பிறரிடம் பகிர்ந்து அதனை மேலும் மேம்படுத்தி எல்லோரும் பயன் பட்டுக்கொள்வது.  இப்படித்தான் பல்வேறு துறைகளும் இன்றைய  அசுர வளர்ச்சியை அடைந்து இருக்கின்றன.

நமது நாட்டிலும்  75 ஆண்டுகளுக்கு மேலாக ஐந்து  தலைமுறையாக பங்கு சந்தையில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள்.  டாடா, பிர்லா  போன்றவர்கள் கம்பனியை நிர்வாகம் செய்யும் காலத்திலேயே,  கம்பனியின் வருடாந்திர 
( AGM ) மீட்டிங்களுக்கு 15 வயதில் தகப்பனாருடன் சென்று, பெரியவர்களால் ஓரத்தில் உட்கார்ந்து கவனி  என்று சொல்லப்பட்ட  நாலாம் தலைமுறை காரார்  இன்றும் உயிருடன் இருக்கிறார்.  டாடா கம்பனி குழுமத்தின் அத்துணை பங்குகளும் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கில் இவரிடம் இருக்கிறது.  இவர் இதுவரை ஷேர்களை விற்றதே இல்லை என்கிறார்.

பெண்பார்த்து பிடித்துவிட்டது என்று சொல்லி,  வரப்போகும் மருமகளுக்கு GRASIM INDUSTRIES,   அன்றைக்கு  ஜவுளி கம்பனி, அதன் 1000 ஷேர்களை  பரிசாக மாமனார் கொடுக்க,  அதிலிருந்து ஆர்வம் ஏற்பட்டு  இன்று 80 வயதாகும் அம்மையார், பல கோடி ரூபாய் மதிப்புள்ள  பல்வேறு கம்பனிகளின் ஷேர் வைத்திருக்கிறார்.  இவர்  பங்கு கொள்ளாத AGM  கூட்டங்களே இல்லை. 1975 ஆம் ஆண்டு  வீடு வாங்குவதற்காக விற்றது தவிர வேறு எதற்காகவும் ஷேர் விற்றதில்லை  என்கிறார். 

சமீபத்தில்  காலமான  சந்திரகாந்த் சம்பத் என்பவர்,  1950 வாக்கில் பங்கு சந்தையில் முதலீடு  தொடங்கியவர்.  இன்றைக்கு  மும்பை சந்தையில் முன்னணி  புரோக்கர் சிலர் உருவாக காரணமாக இருந்தவர்.  இவரும் பலகோடி ரூபாய் சம்பாதித்து  இருக்கிறார்.  இவரை இந்தியாவின்  வாரன் பபே என்பதாக சொல்கிறார்கள். இவரது அறையில்  முதலீடு சம்பந்தமான நூற்களும், இதழ்களும்  நிரம்பி இருக்குமாம்,  இவர் விஞ்ஞான முறைப்படி முதலீடு செய்தவராக அறியப்படிகிறார்.

நமது திருச்சியில்  பெண் சார்டர்ட் அக்கவுண்டன்ட் ஒருவர் குறுகிய காலத்தில் நாலரை கோடி ரூபாய் சம்பாதித்ததாக  சொல்கிறார்.

சிறு முதலீட்டாளர்களின்  நலனுக்கு எதிரான விசயங்கள் பெரிய கம்பனிகளில் நடக்கும் போது அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.  சமீப காலங்களில்  அமெரிக்காவில்,  பல சிறு முதலீட்டாளர்களின் ஆதரவுடன், நிர்வாகத்தின் முடிவுகளை தட்டிக்கேட்க கூடிய  முதலீட்டளர்கள் உருவாகி இருக்கிறார்கள்  இவர்களை  INVESTOR ACTIVIST  என்பதாக அழைக்கிறார்கள். இம்மாதிரியான் முயற்சிகளை  மேற்சொன்ன முதல் மூவரும் இந்தியாவில் செய்திருக்கிறார்கள் !!!!!!

இவர்களைப்பற்றிய சேதி எத்தனை பேருக்கு தெரியும் ?.  சந்தை விவரம் தெரிந்த இவர்கள் எத்துனை பேர் உருவாக காரணமாக இருந்திருக்கிறார்கள் ?
 நம்மவர்கள் இப்படித்தான்.  ஆய கலைகள்  64 கிலும்  பாண்டித்தியம் பெற்றவர்கள், பிறருக்கு சொல்லாமல்  செத்து போனதால்,  பண்டைய  நாகரிகத்தின்  அறிவு திறமைகள் பின் சந்ததியினருக்கு கிடைக்காமலேயே போய்  விட்டது.

பங்குகள் ஒரு நிலை இன்றி ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. நாளை என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. இதற்கு முன்பு ஒரு பதிவு, சீனாவின் சந்தை  சரிவை தொடர்ந்து, இந்தியாவில்  என்ன நடக்குமோ என்று இந்த தளத்தில் வந்திருந்தது   CLICK HERE பாருங்கள். அமெரிக்க சந்தை இறங்க தொடங்குவதற்கு சரியாக 15 நாட்களுக்கு முன்பு  வாரன் பப்பே   37 பில்லியன்   டாலருக்கு  பிரிசிசன் காஸ்ட் பார்ட்ஸ்  என்ற கம்பனியை  ஒரு ஷேர்  $ 235 என்ற கணக்கில் வாங்கினார்.  இன்றைய தேதியில் அந்த பங்கின் விலை $ 225  அதுவும் போனவாரம் 220 இல் இருந்தது. உலக புகழ் பெற்ற முதலீட்டு மேதை,  முன்பே தெரிந்து இருந்தால் இப்படி வாங்குவாரா?.  

ஒரு விஷயம் என்னால் மிக நிச்சயமாக சொல்ல முடியும்,  சந்தை ஏறிக்கொண்டே தான் இருக்கும், இறங்கவே இறங்காது, ஏறிக்கொண்டே தான் இருக்கும். இன்றைக்கு அல்ல, நாளைக்கு அல்ல, அடுத்த மாதம் அல்ல,  ஏன் அடுத்த வருசமும் அல்ல  ஆனால் ஏறிக்கொண்டே தான் இருக்கும். என்ன கிறுக்கு தனமா இருக்குன்னு நினைக்கிறீர்களா?.

நம்ம சென்செக்ஸ் மாதிரி  டொவ்ஜோன்ஸ் ஒன்னு கேள்விப்பட்டு இருப்பீங்க, அதை கிட்ட தட்ட  1900 திலிருந்து 2012 வரை  நடந்த ஏற்ற இறக்கத்தை  கிராப் போட்டு இருக்காங்க,  அதை பாருங்க 
 https://jlcollinsnh.files.wordpress.com/2012/04/djia1900-2012.png
ஒன்னும் புரியவில்லை என்று கவலைப்படாதீர்கள் 
கீழே இருப்பதெல்லாம் 1901, 1902.....2012 என்ற வருசங்கள். வலது கை பக்கம் இருப்பதெல்லாம்  இந்த இன்டெக்ஸ் ஏறிய  அளவுகள் 62.5 இல் இருந்து 13500 வரை பல்வேறு வருடங்களில்.


உதாரணத்திற்கு பாருங்கள்,  ஒரு வருடத்தில் 381.17 இருந்தது, அடுத்தடுத்த வருடத்தில் 50.16 கு போய் விட்டது,  அதாவது கிட்டத்தட்ட எட்டில் ஒரு பங்கு. அடுத்து 14164 லிருந்து  சரி பாதியாக 6547.5 ஆகி இருக்கிறது,  எவ்வளவு பேர் நிம்மதி இழந்து இருப்பார்கள், ஹார்ட் அட்டாக் கால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.  தற்கொலை கூட செய்திருப்பார்கள் என்று யோசனை செய்து பாருங்கள்.

சார்ட்டை  கவனமாக பார்த்தால், எவ்வளவு தான் விழுந்தாலும் தொடர்ந்து ஏறிக்கொண்டே தான் இருந்திருக்கிறது என்பது விளங்கும். ஆனால் ஏற்றம் என்பது ஒரே சீராக இருப்பதில்லை, மழை காலத்தில் செம்மண் ரோட்டில் மாட்டு வண்டியில் பயணம் செய்வது போல்  தான். இந்த சார்ட்டை  காண்பித்ததின் நோக்கம்,  இருண்ட குகைக்குள் தனியே போகும் போது, வவ்வால்கள் இருக்கும், சின்ன சின்ன பள்ளங்கள் இருக்கும், ஆங்காங்கே கற்கள் துருத்திக்கொண்டிருக்கும் என்று சொல்லி அனுப்பினால், இப்படிப்பட்ட ஆபத்துக்களை எல்லாம் எதிர்  பார்த்து செல்பவர், அவை எதிர்ப்படும் போது எப்படி பயப்படாமல் எச்சரிக்கையாக இருப்பாரோ? அப்படி இருக்கத்தான்.

இம்மாதிரியான காலங்கள் தான்,   "  எல்லோரும் பயந்து நடுங்கும் போது  பேராசை கொள்ளுங்கள், எல்லோரும் பேராசை படும்போது பயந்து கொள்ளுங்கள்  "  என்று  வாரன் பப்பே சொன்னது. உண்மையில் இம்மாதிரியான வாய்ப்புக்கள் அடிக்கடி கிடைக்காது.  நல்ல கம்பனிகள்  குறைந்த விலையில் கிடைக்கும்  காலமிது.

சிறுக சிறுக வாங்குங்கள்,  25 %,  30 %  குறைந்து இருக்கும் போது சிறிதும், அப்படியே இன்னும் குறையும் போது  சிறிதுமாக வாங்குங்கள்.  ஒரேயடியாக குறையும் என்று இருக்காதீர்கள்.

அமெரிக்க மார்கட் சார்ட் தானே என்று சொல்பவர்களுககாகத்தான், இந்திய முதலீட்டாளர்கள் பற்றி அறிமுக படுத்தியது,  பல மாமாங்க காலங்கள் விற்காமல் இருந்திருக்கிறார்கள் என்றால், எத்தனை ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருப்பார்கள்.  மக்களே  உங்கள் சமத்து. வாழ்த்துக்கள் 












No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........