Tuesday, August 25, 2015

வாறன் பபேயும் நம்மூர் மார்வாரிகளும்.............

 ஒரு தொழிலை தொடங்கும் போது,  நுணுக்கங்கள் தெரியாவிட்டாலும், தொடங்கி  நடத்தும்  போது,  உண்டாகுகின்ற தொடர்புகளை,  தகுதிக்கு  தக உருவாக்கிக் கொள்ளும் போது,  நம்மையும், நம் தொழிலையும் செம்மை படுத்திக்கொள்ளவும் பிற தொழில் வாய்ப்புக்களை இனங்கண்டு கொள்ளவும்  முடியும்.   பிறரிடம் வேலை செய்பவர்களை காட்டிலும்,  தொழில் செய்பவர்களுக்கே  முன்னேற்ற பாதை  எளிதாய் அமையும்.   படிப்பு என்பது  நமது  செயல் பாடுகளை செம்மையாக்கி தரும் ஒரு சாதனம், கருவி  தானே தவிர,  தொழில் செய்ய தேவையே   இல்லை,  அது  இருந்தால் தான் முடியும் என்பதில்லை.

ராஜஸ்தானத்து மக்களிடம்,  அதுதாங்க நாம் சேட் என்றும் மார்வாடி என்று அழைக்கிறோமே,  அவர்கள் தான்.   வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள், தொழில் செய்ய நினைப்பவர்கள், எவ்வாறெல்லாம்  தொழில் செய்து  முன்னேறலாம், தொழில் செய்யலாம்,  உபரி, கூடுதல்  வருமானம் பெற பல தரப்பட்ட வழிகள் என்று, கற்றுக்கொள்ள வேண்டிய பல விசயங்கள் இருக்கின்றன.

வறண்ட பாலைவன பூமி,  அதில் மார்வார் என்ற மலை பகுதியில் இருந்து வந்து,
இந்தியா முழுதும்  பரவி  தொழில் செய்து வருகிறார்கள்.   ஹிந்தி பேசா மாநிலங்கள் இவர்களுக்கு  சொர்க்கபுரி.   சிறிதும், பெரிதுமான  தமிழக  நகரங்களில் எல்லாம் பரவி, ஆங்காங்கே  மொத்த வியாபார கடை வீதிகளில்,   குட்டி குடியிருப்புக்களை  உருவாக்கிக்கொண்டு  வாழ்ந்து,  தொழில் செய்கின்ற இவர்கள், வரும்போது இருக்கும்  நிலைமையை கண்டிருக்கிறீர்களா ?

ஒட்டி உலர்ந்த கன்னங்கள்,  தார்பாச்சி வேஷ்டி, ஜுப்பா,  மஞ்சள் பை, கமண்டலம், கெண்டிசெம்பு  இத்துடன் தான் வருவார்கள்.  சிறிய ஊர்களில்  வீடு வாடகைக்கு பிடிப்பார்கள்.  ரூ  4000, ரூ 5000 முதலீட்டில் அடகு கடை வைப்பார்கள். தொடக்க காலங்களில்  தங்க நகைகளை அடகு பிடிக்க மாட்டார்கள்.   எதையெல்லாம் விற்று காசாக்க முடியுமோ அவைகளை எல்லாம்  அடமானமாக பெற்று கடன் கொடுப்பார்கள்,  மாதத்திற்கு  4 வட்டி (வருசத்திற்கு 48% !!!!! ), 5 வட்டி (வருசத்திற்கு 60%!!!! ).   அண்டா.  குண்டா,  கூலி வேலை செய்வோரின்  கைக்கருவிகள் என்று லிஸ்ட் நீளும்.  கொஞ்ச நாட்களில்  அக்கம் பக்கத்தில் உள்ளோர்,  வீதி ஓரங்களில் குடியிருப்போர்,  வீட்டு வாசலுக்கு நீர் தெளித்து, சாணமிட்டு  உதவி செய்வர்.  வீட்டு காரர்/ தொழில் முனைவர், கடையை திறக்கு  முன்பு   கற்பூரம் கொளுத்தி மணி அடித்து சாமி கும்பிட்டு,  யாரும் அடகு வைத்ததை திருப்ப கூடாது  என்று மனமுருகி வேண்டிக்கொண்டு  ( இது நகைசுவைக்காக எழுதப்பட்டதன்று, முற்றிலும் உண்மை ), திருநீறு  குங்குமதத்துடன்  பிரசாத்தை  எல்லோருக்கும் கொடுப்பார்.  நம் மக்கள் கள்ளம் கபடமின்றி பக்தி சிரத்தையுடன் வாங்கிகொண்டு, தாம் அடகுவைத்த அண்டா குண்டா  எல்லாவற்றையும் மறந்து வட்டியில் மூழ்க விட்டுவிடுவர்.

அடகு சீட்டில் பின்புறம்  சிறிய எழுத்தில் ஆங்கிலத்தில், அடகு ஒப்பந்த சரத்துக்கள் எழுதப்படிருக்கும், சம்மந்தப்பட்ட இருவருக்குமே படித்து புரிந்து கொள்ளுமளவிற்கு ஆங்கிலம் தெரியாது.  அடகு பிடிப்பவருக்கு எத்தனையாவது மாதத்தில் திருப்பாவிட்டால், பொருள் அவரைசேர்ந்தது  ஆகிவிடும் என்பது மட்டும் தெரியும். தவணை காலம் முடிந்த பொருட்களை  விற்று காசாக்கி திரும்ப  திரும்ப அதிலேயே போட்டு  6 மாதம்,  ஒரு வருடத்தில் பொருளாதார ரீதியில்  ஒரு  ஸ்திர நிலைக்கு வந்துவிடுவார். மேலும் முதலீடு தேவைபட்டால், அவர்களது சமுதாய சங்கங்களில் இருந்து குறைந்த வட்டிக்கு கடன் பெற்று கொள்ளுவார்.

ஓரிரு வருடங்களில் நடையுடைகளில் ஒருமாற்றம், தெளிவு, கம்பீரம்  வந்து விடும்.  ஐந்து விரல்களிலும் மோதிரம் (வட்டியில் மூழ்கியதுதான் ),   கழுத்தில் கனமான முறுக்கு செயினில்  தொங்கும்  புலிப்பல் டாலர் இத்தியாதிகளுடன் இருக்க தொடங்குவார். சிறுக சிறுக தங்க நகைகளையும் அடகு பிடிக்க தொடங்குவார்.  இடுகல், மரத்தடி, தெருமுனை  என்று வஞ்சனை இல்லாமல் எல்லா வகை கோயில்களுக்கும்,  அப்பப்ப பொரிகடலை,  பூஜைக்கு பணம் கொடுப்பார். கோயில் கும்பாபிஷேகம். குடமுழுக்கு முன்னின்று நடத்துவார்.


சில காலங்களில்  இவரின் இந்த தான தரும காரியங்களினால், நம்மவர்க்கு அவர்மேல் மரியாதை மேலோங்கி,  ரெம்ப  பவ்வியமாய்  " சேட் " (முதலாளி)என்று அழைக்க தொடங்குவர்,  நம்மவருக்கு  அதன் அர்த்தம் தெரியாவிட்டாலும், அவருக்கு தெரிவதால்  அவர்  " இன்னாப்பா " ,  " அவன் ",   " இவன் "
என்று  சகலரையும் ஏக வசனத்தில் அழைத்து  பேசி சந்தோஷ படுத்துவார். நம்மவர்களுக்கு  சேட்டு  தமிழ் பேசுகிறார் என்று  ரெம்ம்ம்ம்ம்ப பெருமை !!!!!

இதற்கு பின்னாலே தான் இவர்களது திறமை வெளிப்பட ஆரம்பிக்கும், நம்மவர்களுக்கு  படிப்பினைகள் இருக்கிறது என்று சொன்னால் கூட
மிகையாகாது.  நம்மவர்கள் கொடுக்கின்ற அங்கொன்றும் இங்கொன்றுமான தகவல்களை  பயன்படுத்தி தேவைகளை  இனங்கண்டு தொழில் தொடங்கி,   தமக்கென தொழில் சாம்ராஜ்யங்களை உருவாக்கி, ஒரு ஞாயமான அளவினான இந்திய, தமிழக , பொருளாதாரத்தை தம் கைகளில் வைத்துள்ளனர். எப்படியென்று பாருங்கள்.  

காசுத்தேவை யாருக்குத்தான் இல்லை,  இவர்கள்  அடகு பிடிக்காத பொருட்கள் என்பதே இல்லை என்பதால் பலதரப்பட்ட தொழில் செய்கிற மக்கள் இவர்களிடம் வருவர். அவர்களிடம் பேச்சுகொடுத்தும், வியாபார பகுதிகளை சுற்றி வந்தும் வியாபாரிகளுக்கு தேவையான பொருட்களை  இனங்கண்டு ,  பம்பாய்,  கல்கத்தா போன்ற ஊர்களில் இருந்து வரவழைத்து வியாபாரிகளுக்கு மட்டும் சப்ளை செய்வார்கள. இதில் நாம் மிக முக்கியமாக  புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால்,  ஒரு குறிப்பிட்ட காலம் வரை  உள்ளூர் வியாபாரிகளுக்கு போட்டியாக  எந்த வியாபாரமும்  செய்ய மாட்டார்கள்.

எடுத்துக்காட்டாக,  கொலுசு உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வியாபாரிக்கு, வெள்ளி, வெள்ளி உருக்க தேவைப்படும் சாதனங்கள், கெமிகல் ஆகியவைகளை சப்ளை செய்வார்கள். பிளாஸ்டிக்  சாமான்கள் உற்பத்தி செய்வோருக்கு அவர்களுக்கு தேவையான  மூலப்பொருள்கள் வாங்கி கொடுப்பார்கள். நம் வியாபாரிகளுக்கு இருக்கின்ற மிகப்பெரிய இடைஞ்சல் என்றால் அது பாஷை தான். பெரும் பெரும்  உற்பத்தி தொழிற்சாலைகளும்,  மொத்த வியாபாரிகளும், பெரும்பாலும் ஹிந்தி பேசும் வட மாநிலங்களில் இருப்பதால், இவர்களுக்கு அது சாதகமாய் விட்டது.
இவர்கள்  மிகக்குறைந்த   அளவில் உடல் உழைப்பு தேவைப்படுகிற வேலைகளில் தான்  ஈடுபடுவார்கள். " நாம் நோகாமல் நுங்கு எடுத்தல் "என்று சொல்லுவோமே அப்படி.  உண்மையில் இதுதான் " வொர்க் ஸ்மார்ட் " என்பது.  இப்படி உற்பத்தியாளர்களுடன்  உள்ள வியாபார தொடர்பு காரணமாக, இன்னும் அதிகமான வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக்கொள்கிற  நுணுக்கத்தை பாருங்கள்.
ஒரே இடத்தில் அமர்ந்து, பல உபரி வருமான வழிகளை உருவாக்க மற்றுமொரு காரணி, வட்டித்தொழிலின் மூலம் வருமானம் நிரந்தரமாக வரத்தொடங்கி விட்டாலும்,  ஒரு அளவிற்கு மேல் அடகு பிடிக்க முடிவதில்லை,  கைகளில் பணகையிருப்பு  கூடுதலாக தொடங்கு கிறது.  இந்த "சும்மா" இருக்கும் தொகையை எப்படி உபயோகிக்கிறார்கள் பாருங்கள்.

பொருள் உற்பத்தி செய்பவர்கள்,  சீசனல் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், சீசன் நெருங்க நெருங்க, ஆர்டர்கள் இருக்கும்  மறு மூலபொருள் வாங்க பணம் இருக்காது.  உற்பத்தி செய்த பொருட்களை வாங்கிக் கொண்டு சில்லறை வியாபாரிகள் உடன் பணம்  கொடுக்க மாட்டார்கள்.   உற்பத்தியாளருக்கு பணம் தேவை,  இந்த சீசனில் பணம் சம்பாதிக்க வில்லை என்றால்  முழு  வருட சம்பாத்தியம் போயவிடும்.  உற்பத்தியாளர்கள்   இவர்களிடம்  உற்பத்தி செய்த பொருட்களை மொத்த விலையில் இருந்து  ரூ 1, ரூ 2 உருப்படிக்கு குறைவாக விற்று  பணம் பெற்று கொள்வார்கள்.  ஒரே ஒரு கண்டிசன், உற்பத்தியாளர்களே இவர்களுக்கு அதே சீசனில் விற்றுகொடுக்க வேண்டும், உற்பத்தியாளர்கள் ஆர்டர் அடிப்படையில் உற்பத்தி செய்வதால், விற்பதில் சிரமம் இருக்காது, இவர்களுக்கு ஒரு உருப்படிக்கு  ரூ ஒன்றோ இரண்டோ கூடுதலாக கிடைக்கும்.  எந்தவிதமான உடல் உழைப்போ,  தொழில் செய்பவருக்கு உள்ள மண்டை காய்ச்சல்களோ, எதுவும் இல்லாத வருமானம்.

இதே முறையில் அவரவர் வியாபாரம் செய்கின்ற இடத்தில் இருக்கின்ற தொழில் களுக்கு ஏற்ப செய்து பணம் ஈட்டுகிறார்கள்.  வியாபாரத்தில்  Cash is the King என்பதாக சொல்வார்கள், இவர்களிடம் இருக்கும் பணத்தை வைத்து வட்டி மட்டுமின்றி பல வகைகளிலும், சம்பாதிக்கிறார்கள். இவ்வாறு இவர்களுடன் தொழில் செய்பவர்கள்,  ஸ்கூல் ப்ர்க் உற்பத்தியாளர்கள், சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் போன்றோர்.  இவர்களிடம் கச்சா பொருள்களை பெற்று கூலிக்கு பொருள் உற்பத்திசெய்து கொடுப்பவர்களும் இருக்கிறார்கள.  சில நேரங்களில் பெரும் தொழில்சாலைகளில் உற்பத்தி செய்த பொருட்கள் தேங்கி கிடக்கும்,  கம்பனிகளுக்கு பணம் தேவைப்படும்  நேரங்களில்  சாதாரணமாக விற்கும் விலையை விட  10  %, 20 % அளவிற்கு டிஸ்கவுண்டில்  விற்பார்கள்,  அப்படி பட்ட சரக்குகளை   3, 4 மாதத்திற்காக வங்கி வைத்து பின்னர் விற்பார்கள், கிடைக்கின்ற லாபம் 40 %, 50 %  என்ற அளவில் கிடைக்கும்.  இப்படியான வாய்ப்புக்களை  எதிர்நோக்கி இருக்கும் இவர்களுக்கு,  வெவ்வேறு துறைகளில்  இருப்பவர்கள்  இவ்வாறான  வழிகளை காட்டிக்கொடுத்து கமிஷன் பெற்றுக்கொள்வார்கள்,  இப்படி  நம்மை போன்றவர்களெல்லாம் கற்பனை கூட செய்ய முடியாத வழிகளில் எல்லாம் சம்பாதிக்கிறார்கள்.

இவர்களை போன்று தான்,  வாறன் பப்பேயும், அவருடைய  ஆரம்ப கால மெயின் வருமானம் இன்சூரன்ஸ் கம்பனிகளில் இருந்து தான். பலவகையான இன்சுரன்ஸ் பாலிசிகள்,  மாதா மாதம் தவறாமல் வாடிக்கையாளர்கள் பணம் கட்டி விடுவார்கள். இப்படி சேருகின்ற தொகையையும், ஏற்கனவே முதலீடு செய்த கம்பனிகளில் இருந்து வரும் டிவிடன்ட்களையும்  சேர்த்து  புதிய கம்பனிகள் வாங்குவதற்கு உபயோகிப்பார்.  கிட்டத்தட்ட  50, 60  ஆண்டுகளாக அவரிடம் முதலீடு செய்தவர்களுக்கு டிவிடன்ட் கொடுத் ததே  இல்லை . அவர் வாங்குகின்ற கம்பனிகள் கொடுக்கும் டிவிடன்டையும், மீண்டும் புது கம்பனிகளை வாங்க உபயோகிப்பார். சமயங்களில் பெரிய பெரிய கம்பனிகளின் நெருக்கடியான் நேரத்தில், மற்றவர்கள் கடனோ முதலீடோ தர தயங்கும் நேரத்தில், மார்க்கட்டில் ஷேர் விற்கும் விலையை விட குறைவாக கொடுத்து வாங்குவார். இவர்  முதலீடு  செய்கின்ற துறைகள்  90 சதவீதத்திற்கு மேல் லாபமீட்டு தருவதாகவே உள்ளன.

Great minds think alike என்பதாக சொல்வார்கள், சாதனையாளர்கள் எல்லோருமே ஒன்று போல் சிந்திப்பார்கள் போலும்,  நம் மார்வாரிகளும் வாறன் பபெக்கு சளைத்தவர்கள் அல்ல!!!!!!. " குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஓட்ட வில்லை ". என்பது போல் நாம் நம்மவர்கள் என்று பெருமை பட்டுக்கொள்வோம்.   மார்வாடியும், வாறன் பப்பேயும் சம்பாதித்து நமக்கென்ன ஆக போகிறது ?  இவர்களுடைய வாழ்கையில் இருந்து நாமென்ன கற்றுக்கொள்ள போகிறோம் ?   இது தான் என் மில்லியன் டாலர் கேள்வி

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........