Wednesday, August 19, 2015

சொத்து சேர்க்கலாம் வாருங்கள் -பகுதி 8

நாம் இதுவரை பார்த்த முதலீட்டு வகைகளிலே  மிகசிறந்ததாக வல்லுனர்களால் கருதப்படுகிற   ஷேர் மார்கட் பற்றி பார்க்கப்போகிறோம்.   பல்வேறு  வல்லுனர்களின் கருத்தை உறுதிபடுத்துகிற வகையில்  பல்வேறு கால கட்டங்களில் செய்யப்பட  ஆய்வுகளின் முடிவுகள்   காணக்கிடக்கின்றன. எப்படித்தான் புள்ளி விவரங்கள் சொன்னாலும்,  ஆங்காங்கே இது பற்றி யாரிடமாவது பேசினால், நான் அவ்வளவு பணம் இழந்திருக்கிறேன், என் நண்பன் இவ்வளவு இழந்திருக்கிறான்  என்று  பலர்  சொல்வதை கேட்டிருக்கலாம், ஏன்  நீங்களே கூட இழந்திருக்கலாம். இதே அளவிற்கு நான் இவ்வளவு சம்பாதித்தேன்,  என்னுடன் வாருங்கள்  நான் சம்பாதித்து காட்டுகிறேன் என்பதாக சொல்வோரையும்  கண்டிருக்கலாம்.  இன்று  பங்கு சந்தையில் பணம் பண்ணுவது எப்படி என்று சொல்லிக்கொடுக்க போகிறேன் என்று தொடங்கி,  ஒரு 10 கம்பெனிகளின்  ஷேர்களை வாங்கி விற்று   trail & error முறையில்  தாங்களே கற்றுக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கும்,  தளங்களை  தான் அதிகம் காண முடிகிறது,  இது யாரையும் குறைசொல்லும் அல்லது விமர்சிக்கும் நோக்கத்துடன் சொல்வதன்று.  பலரும் தாங்கள் படித்த,  அனுபவத்தில் கற்றுக்கொண்ட விசயங்களை பகிரும் போது எல்லோருமே பயன் பெற்று  கொள்ளலாமே என்ற ஆதங்கம் தான்.   இன்டெர் நெட் மூலமாக பல்வேறு தளங்கள் நடத்தும் நண்பர்கள்,  இதனை படிக்க நேர்ந்தால் கவனம் கொள்வார்களாக என்று வேண்டிக்கொள்கிறேன்.


இப்படி இருவேறு முரண்பாடான கருத்துக்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது, இதில் எது உண்மை என்று குழம்புவோர்க்கு  பதில் சொல்ல வேண்டும் என்றால் பதில் இரண்டுமே சரிதான் என்றே சொல்ல வேண்டும்.  பெரும் பாலும் பணம் பண்ணியோர் விளம்பரம் செய்து கொள்வதில்லை ரகசியமாகவே வைத்திருப்பர்.  நமது நாட்டில் மட்டுமின்றி, உலகம் முழுதுமே அப்படித்தான். நானும் அப்படி பணம் இழந்து, பாடம் படித்ததை, இத்தனை காலமும் பல்வேறு பட்ட புத்தகங்கள், அறிஞர்கள்  எழுதிய கட்டுரைகள் என்று  படித்து அறிந்து பலன் பெற்றவைகளை பகிர்ந்து கொள்ளத்தான்,  இப்படிப்பட்ட பதிவெழுதும் முயற்சி.  பங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க சில அடிப்படையான தன்மைகளும், புரிதல்களும்  வேண்டும், அவைகளை  முடிந்த அளவு தெளிவாக்க முயற்சிக்கிறேன்.

பங்கு சந்தையில் வெற்றி பெற என்று யாரிடமும் கேட்டாலோ, படித்தாலோ  முதலில் சொல்லப்படுவது, நீண்ட கால முதலீடு என்பது தான், அடுத்து  நீண்ட  காலம் என்றால் ஆகக்குறைவாக ஐந்து ஆண்டுகள் என்பதாகவும் சொல்வார்கள்.  எல்லோரும் இதையே சொல்வதால், புதிய விசயமில்லை என்று சுரத்து இல்லாமல் இருப்போம்.  இதையே  இந்த நூற்றாண்டு கண்ட பிரபல்  முதலீட்டு  மேதை  வாரன் பப்பே  சொன்னால் நிமிர்ந்து அமர்ந்து கேட்போம் இல்லையா ?.   அவரிடம் நீண்ட கால முதலீடு  என்றால் எவ்வளவு காலம் ?  என்று கேட்கப்பட்ட போது, அவர் சொன்ன பதில்  பார் எவர் ( FOR EVER ) என்பதாக.   மேலும்  சொல்லும்  போது    பிரிக்சனல்                 ( FRICTIONAL) செலவுகளை எவ்வளவு குறைவாக செய்ய  முடியுமோ அவ்வளவு குறைவாக செய்ய வேண்டும் என்பதாகவும் சொல்வார்.  இது பற்றி கொஞ்சம் விளங்க முயல்வோம்.

சவுதியிலோ, துபையிலோ இருக்கும் நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு கார்வாஷ் தொடங்கினீர்கள்  என்று வைத்துக்கொள்ளுங்கள், மேனஜர் ஒருவர் வைத்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது, எச்செலவும் போக ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ 10,000 கிடைக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள். எவ்வளவு நாளைக்கு நடத்துவீர்கள் ?  நன்றாக யோசனை செய்துகொண்டு, பதிலை மனதில் இருத்திக்கொண்டு, அடுத்த  பத்தியை படியுங்கள்.

வருடக்கடைசியில்  விடுமுறையில் ஊர் வருகிறீர்கள்,  ஏர்போர்டில் உங்கள் பள்ளிக்கூட நண்பரை சந்திக்கிறீர்கள், வெகு காலத்திற்கு பிறகு சந்திப்பதால் பரஸ்பர விசாரணைகளுக்கு பிறகு  என்ன செய்கிறீர்கள் என்று கேட்ட போது  உங்கள் ஊருக்கு பக்கத்தில் உள்ள பெரிய நகரத்தில்  டிரை கிளீனர்ஸ்  வைத்திருப்பதாகவும்,  நேரம் கிடைக்கும் பொது வந்து சந்திக்கும் படியும் சொல்கிறார்.   சில நாட்களுக்கு பிறகு அவரை அவருடைய கடையில் சென்று சந்திக்கும்போது.  தன்னுடன்  பிசினசில் பங்குதாரராக இருந்தவர், அமெரிக்கா  செல்ல இருப்பதால் தன பங்கை விற்பதாகவும், உங்களுக்கு  இதில் பிரியம் இருந்தால் சேர்ந்து கொள்ளலாமே என்று  அது சம்மந்தமாக மேலோட்டமாக சில கணக்குகளை காண்பித்து,  10 வருட காலமாக லாபகரமாக நடத்திக்கொண்டிருப்பதாகவும்,  நல்ல நிரந்தரமான வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும்   உங்களுக்கு பிரியம் இருக்கிற பட்சத்தில், பங்குதாரராக ஆகலாம் என்று சொல்கிறார். யோசித்து சொல்வதாக சொல்லிவிட்டு வந்து விடுகிறீர்கள்.

நீங்கள் ஏற்கனவே ஒரு பிசினஸ் நடத்துவதால் ஓரளவிற்கு வரவு செலவுகள் ஒரளவிற்கு பார்க்க தெரியும, அந்த அடிப்படையில் நல்ல லாபகறமான தொழிலாக தெரிகிறது.  மேலும் விற்பதற்கான காரணமும் தெரிகிறது.  வாங்கலாம் என்ற அபிப்பிராயம் வந்து விட்டால், உங்களை விட விவரமான  ஆடிட்டரிடம் கணக்கு வழக்குகளை காண்பித்து அபிப்பிராயம் கேட்டுக்கொள்ளலாம் என்பதாக நினைக்கிறீர்கள்.  சில நாட்களுக்கு பிறகு, ஆடிட்டரிடமும் அபிப்பிராயம் கேட்டு அவரும், நீங்கள் போடுகின்ற முதலுக்கு, தலைக்கு  ரூ 15000  மாத வருமானம் வருவதாலும்,   50% பார்ட்னர்ஷிப் என்பதாலும்  தாரளமாக வாங்கலாம் என்று சொல்லி விடுகிறார்.  இப்பொழுது சொல்லுங்கள்,  நீங்கள் அந்த பிசினசை  வாங்குவீர்களா மாட்டீர்களா ?.  வாங்கினால் எத்தனை காலம் வைத்திருப்பீர்கள் ?.

மேற்கண்ட இரண்டு தொழிலுமே, உங்களுடைய நேரடி உழைப்பின்றி உங்களுக்கு வருவாய் ஈட்டி தரக்கூடியது, மேலும் உங்களுக்கு முழு நேர தொழிலாக வெளிநாட்டு வேலை இருக்கிறது.  ஏற்கனவே நீங்கள் ஈட்டிய தொகை பேங்கில்  உறங்காமல் உங்களுக்காக வேலை செய்யப்போகிறது.  இதிலிருந்து வரக்கூடிய வருமானத்தை வைத்து தான் உங்களுடைய குடும்பத்தை ஓட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை, தொழிலில் இருந்து வருகிற வருமானத்தை வேறு தொழில்களிலோ,  முதலீடுகளிலோ ஈடுபடுத்தி மேலும் வருவாய்க்கு வழி  செய்து கொள்ளலாம் .

இப்பொழுது கேள்விக்கு வாருங்கள்,  இரண்டு தொழிலுக்கும் பொதுவான கேள்வி எவ்வளவு காலம் வைத்திருப்பீர்கள ? என்பது,  டிரைகிளீனர்ஸ்  தொழிலுக்கு மட்டும். இந்த தொழிலை வாங்குவீர்களா ?  என்ற கூடுதல் கேள்வி. இப்பொழுது பதில் என்னவென்று பார்ப்போம்.

எல்லோருமே முதலில் சொல்வது,  இது என்ன முட்டாள் தனமான கேள்வி, தொழில் நடத்திக்கொண்டு இருந்தாலோ, புதிதாக வாங்கினாலோ  கால வரம்பு என்ன இருக்க முடியும்?  தொழில் என்பது எக்காலத்திற்கும்   தானே ?.   அடுத்தது   டிரைகிளீனர்சை பொருத்தவரை முதலீடு இருக்கும் பட்சத்தில்,  இம்மாதிரியான வாய்ப்பு கிடைப்பதே அரிது,  கிடைத்தால் விடுவோமா என்பது தான்.

ஆக தொழில் அதிபர் என்றாலோ ,  தொழிலில்  பங்குதாரராக   என்றாலோ  அதற்கு கால வரையறை என்பது கிடையாது. சம்பந்தப்பட்ட தொழில் லாபமீட்டி தந்து கொண்டிருக்கும் வரை.  சில தொழில்கள் பல           பரமபரைகள் தாண்டியும் கூட நடக்கும்.

பங்கு மார்க்கட்டில்  இருக்கும் பெரிய பெரிய கம்பனிகள் எல்லாம் தங்களுடைய ஆரம்ப கால முதலீட்டை, 10 லட்சம், கோடி என்ற அளவினான சிறு சிறு பங்குகளாக பிரித்து, ஒவ்வொரு பங்கின் பொருமதியும்  ரூ 10, ரூ 50, ரூ 100 போன்ற  ஏதாவது ஒரு மதிப்பில் இருக்குமாறு பிரிப்பார்கள்.  ஒவ்வொரு பங்கின் மதிப்பையும், பிரித்த மொத்த ஷேர்களின்/பங்குகளின் எண்ணிக்கையையும் பெருக்கினால் வரும்  தொகை, கம்பனியின் ஆரம்ப முதலீட்டுக்கு சமமாக இருக்கும்.  இதில் கிட்டத்தட்ட 50 %  கம்பனி ஆரம்பித்தவர்களுக்கும், மீதி இருக்கும் ஷேர்கள், நம்மை போன்றவர்களுக்கும், பெரிய பெரிய நிதி  நிறுவனங்களுக்குமாக என்று விற்கப்படும் .  கிடைக்கின்ற லாபத்தின் ஒரு பகுதியை,  எத்தனை பங்குகள் இருக்கின்றவோ, அத்தனையாக பிரித்து கொடுக்கப்படும்.  ஒருவர் எத்தனை பங்குகள் வேண்டுமானாலும் வாங்கலாம்.  ஒரு பங்கு வைத்திருந்தாலும் பங்கு தாரர் தான்,  5000, 10000 வைத்திருந்தாலும் பங்கு தாரர் தான்.  லாப பங்கு  ( டிவிடண்ட் ) நீங்கள் வைத்திருக்கும் பங்கின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் குறைவாக கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலாக  இருந்தால்,  கம்பனி நிர்வாகத்தில் யோசனை சொல்லக்கூடிய போர்டில் கூட அமரலாம். ஒரு காலத்தில் அந்த கம்பனியை நடத்த முடியவில்ல, வேறு துறையிலும் ஈடுபட தெரியாத நிர்வாகம், இப்படிப்பட்ட பல பிரச்சினைகளால் கம்பனியை மூடிவிட முடிவு  செய்தால்,  அரசாங்க தரப்பில் இருந்து  ஒரு சிறிய கமிட்டி அமைக்கப்பட்டு, கம்பனிக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் ஏலமிட்டு விற்கப்படும். விற்ற தொகையில், கடன் கொடுத்தவர்களுக்கு எல்லாம் முதலில் பட்டுவாடா செய்யப்படும். பிறகு மிஞ்சுவதை, அந்த நேரத்தில் யார் யாரெல்லாம் பங்கு தாரராக ( share holder ) இருக்கிறார்களோ அவர்களுக்கு, அந்த தொகை ஒரு ஷேர் இக்கு இவ்வளவு என்று சரி சமமாக பிரித்து கொடுக்கப்படும்!!!!!!. சில நேரங்களில் ஷேர் கடைசியாக விற்ற விலையை விட கூடுதலாக கூட கிடைக்கும் வாய்ப்பு உண்டு. பம்பாயில் பழைய ஜவுளி மில்கள் விற்கப்பட்ட போது, இவ்வாறு கூடுதலாக கிடைத்தது, காரணம்  அம்மில்களிடம் இருந்த நிலங்களின் சந்தை மதிப்பு.            

இப்பொழுது சொல்லுங்கள்,  நீங்கள் வாங்கும் ஷர் உங்களை  அந்த கம்பனியின் பங்குதாரராக ஆக்குகிறது,  எவ்வளவு நாளைக்கு பங்குதாரராக இருப்பீர்கள் என்று கேட்டால் பதில் என்ன சொல்வீர்கள்.  இதைத்தான்  வாறன் பப்பே, For Ever என்று சொன்னார், நம்முடைய முதலீடும் அப்படித்தான் இருக்க வேண்டும்.  வாங்கும் முன், வரவுசெலவு, லாப நஷ்டம், எதிர்கால திட்டம், வளர்ச்சி, எவ்வளவு காலமாக தொடர்ச்சியாக லாபம் கொடுத்திருக்கிறார்கள் என்பது போன்ற விசயங்களை கவனித்து வாங்க வேண்டும். தரமான  கம்பனிகளின் பங்குகளை வாங்கும்  போது ,  அதனுடைய  அசல் மதிப்பிற்கும் கீழ் எவ்வளவு குறைவாக வாங்க முடியுமோ அவ்வளவு குறைவாக வாங்குதல் நலம. பிறகு அவற்றை எக்காலத்திலும் சரியான காரணமின்றி விற்க கூடாது.

பிரிக்சனல் செலவு   என்பதாக் ஒரு விஷயத்தை  பபே  சொன்னார்,  பங்குகள் வாங்கும் பொது செய்கின்ற, கமிசன், வட்டி இன்னும் இவை போன்ற  செலவுகளையே அப்படி குறிப்பிட்டார். நீண்ட கால முதலீடுகள் செய்யும் போது,  சிறு சிறு தொகையாக செய்யும் செலவெல்லாம், 10, 20, 30 வருடங்களில் மிகப்பெரிய தொகையாக மாறக்கூடிய வாய்ப்புள்ளவை, இதை படித்து பாருங்கள் அத்தனையும் நஷ்டமாகி விடும் என்று தான். இதனுடைய நேரடி விளக்கம்  என்ன வென்றால் அடிக்கடி பங்குகளை வாங்கி விற்காதீர்கள்,  டிரேடிங் செய்யாதீர்கள், அதில் நீங்கள் அடையும் லாபத்தை விட, புரோக்கர் தான் அதிக லாபம் அடைவார் என்பது தான் 

இறைவன் நாடினால் இன்னும் பல விசயங்களை தொடர்ந்து பார்ப்போம்..........

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........