Saturday, August 8, 2015

இன் செர்ச் ஆப் கைடன்ஸ் அண்ட் லைட்.........

மனித இனம் தோன்றிய காலம் தொட்டே,  மனிதன் தான் தனக்கு என்ற சுயநலத்தை கொண்டவனாகவே வாழ்ந்து வந்ததாக வே தோன்றுகிறது.  எண்ணற்ற தீர்கதரிசிகள் இவ்வுலகத்தே தோன்றி, அவர் தம் கால மக்களுக்கு வழிகாட்ட முயன்று  இருக்கிறார்கள். சிலர் வெற்றி  பெற்று இருக்கிறார்கள்,  சிலகாலம் அவர்களை பின்பற்றுகின்ற மனிதன். அவர்கள் காலத்திற்கு பின்னால்,  புதியன விரும்பி,  தனக்கு  உகந்தவற்றை ஏற்றும், இயலாதவற்றை விட்டும்  நடக்க தொடங்கியதால்,  இன்று உலகத்தில்,  பல்லாயிரக்கணக்கான  மதங்கள், சமயங்கள். பல்கி பெருகி இருக்கின்றன.

இன்று வானளாவ வளர்ந்து, கற்பனைக்கு எட்டா  காரியங்களையெல்லாம்  சாதித்து, சாதனை புரிந்து கொண்டிருக்கிற கால கட்டத்தில்,  சார்பின்றி சிந்திக்கின்ற, சாதாரண மனிதனுக்கு விளங்கக்கூடிய விசயங்களை ஒட்டுமொத்தமாக விலக்கி வைத்து, கற்கால  மனிதன் போல் சிந்திக்ககூடியவனாக இருக்கிறான்.  பெற்றோர் எப்படி தன்குழந்தையை பிறரிடம் எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்களோ அப்படி,  தான் கொண்ட கொள்கையை, பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்பதாக நடந்து கொள்கிறார்கள்.  இதில் பள்ளியில் மழைக்காக கூட ஒதுங்காதவர்களில்  இருந்து  பல்கலைகழகங்களில் படித்தவர்கள் வரை அடக்கம்.

தோன்றிய தீர்க்க தரிசிகளின்  உபதேசங்கள் எல்லாம் இன்று காணக்கிடைக்கின்றன்வா என்றால், உறுதியாக சொல்லமுடியாத நிலைமை தான்.  பெரும்பாலும் கரண பரம்பரை செய்திகள் தான். பதிவு செய்யப்பட்டோ, செய்யப்படாமலோ காலப்போக்கில் அழிந்து பட்டு போயிருக்கலாம். எழுத்துருக்களும், எழுதுகோல்களும் தோன்றிய  காலங்களை அறுதியிட்டு சொல்ல முடியா நிலைமை.

இன்றைய அறிவியல் வளர்ச்சியால் ஒரு 2000 3000 ஆண்டுகளுக்கு முந்தய ஏடுகள் கிடைக்கப்பெற்றால் கூட,  அவைகளின்  தொன்மை  தன்மையை  நூற்றுக்கு நூறு சதம் என்றில்லாவிட்டாலும், தொண்ணுறு சதத்திற்கு மேல் உறுதியாக சொல்லக்கூடிய நிலைமையை எட்டி இருக்கிறோம்.

இன்று நம்மிடையே புழக்கத்தில் இருக்கிற, பெரும் தொகையினரால் பின்பற்ற பட கூடிய சமயங்களின்  ஆதாரமாக  இனங்காட்ட படுகிற கிரந்தங்கள், ஒரு சில வருட இடைவெளியில்,  வெவ்வேறு நாடுகளில் பதிப்பிக்கப்பட்டவை, ஒரே செய்தியை முன்னுக்குப்பின் முரணாக சொல்லி, நம்பக தன்மையை குறைக்கின்றன. மற்றும் சில ஜீரணிக்க முடியாத. மன முரண்டான செயல்களை சொல்லி .விவாதத்தை தூண்டுபவனாக உள்ளன. இன்னும் சில, கதம்பமாய் பல்வேறு, கிரந்த சாரங்களையும் தொகுத்து, புதியனபோல் சொல்பவனவாய் உள்ளன. சில தொன்மை தன்மை நிருபிக்கப்பட்டும், விமரசிகர்களால், முயலுக்கு மூன்றுகால் தான் என்பது போன்று , விமர்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சமீபத்திய செய்தியொன்று இங்கே சொடுக்கி பாருங்கள்

சில நூறு ஆண்டுகளுக்கு முன்னாள், " இன் செர்ச் ஆப்  கைடன்ஸ் அண்ட் லைட்   "  என்று சொல்லி உண்மையை தேடிய மனிதனின் கதை,  அவரே சொல்வதை கேளுங்கள்.

 ஈரானின் அஸ்பஹான்  என்ற  பகுதியில் ஜீ  என்ற ஊரை சேர்ந்தவன். என் தந்தை ஊரிலே பெரும் தனக்காரர், நாங்கள் நெருப்பை வணங்கக்கூடியவர்கள்,  நெருப்பை அணையாவண்ணம் காக்கும் பொறுப்பு எங்கள்  குடும்பத்தை சார்ந்தது.  என் தந்தையார் என்மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். வயது வந்த பெண்ணை காப்பது போல், வீட்டிற்குள்ளேயே பெரும்பாலும் வைத்திருப்பார். எங்களுக்கு சொந்தமான பண்ணையோன்று  ஊருக்கு சிறிது தள்ளி இருந்தது. வீடொன்று கட்டத்தொடங்கிய சமயம் , ஒருநாள் மிகுந்த வேலையின் காரணமாக, பண்ணைக்கு செல்லமுடியாமல், என்னை அங்குள்ள வேலையை பார்த்து வருமாறு அனுப்பினார்.

செல்லுமுன்பு,  மகனே நான் உன்மீது எத்தனை அன்பு வைத்து இருக்கிறேன் என்பது நீ அறியாதல்ல,  கவனமாக சென்று வா, இருட்டும் முன் வீடுவந்து சேர் என்று பலவாறு சொல்லி அனுப்பினார். நான் செல்லும் வழியில், திரளான மக்கள் ஓரிடத்தில் குழுமி ஏதோ  செய்து கொண்டிருந்தார்கள். என்ன வென்று பார்க்கலாம் என்று அருகில் சென்றேன்.  நான் இதுவரை பார்த்திராத முறையில் வணங்கி கொண்டிருந்தார்கள், எனக்கு புதுமையாக இருந்ததால் நான் என்னைமறந்து வெகு நேரம் அங்கேயே இருந்தேன். அருகில் உள்ளவர்களிடம், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன், அவர்கள்  நாங்கள் ஓரிறைவனை வணங்கககூடியவர்கள் என்று சொல்ல,  என் ஆவலை தூண்டும் பல செய்திகளை எனக்கு சொன்னார்கள்.  எனக்கு அவர்கள் சொன்ன விசயங்கள் மனதிற்கு பிடித்திருந்தது. அவர்களுடன் சேர்ந்திருந்து வந்த வேலையை சுத்தமாக மறந்து விட்டேன், இதற்கிடையில் இருட்டவும் தொடங்கி  விட்டது.

இருட்டியும் என்னை காணாததால், என்னை தேடி என் தந்தை ஆட்களை  அனுப்பினார். நான் அவர்களுடன் வீடு திரும்பியதும்,  ஏன்  இவ்வளவு நேரம் ஆனது என்று கேட்டார். நான் நடந்ததை சொன்னேன். அவர் அவர்களெல்லாம்  நம் முன்னோர்களின் மதத்தை எதிப்பவர்கள், கெட்டவர்கள்  என்பதாக சொன்னார்.  நான் அவர்கள்  தொழும்  முறை எனக்கு பிடித்திருக்கிறது, நம் மதத்தைவிட மேலான மதமாக தெரிகிறது என்றேன்.  நான் அவருடன்  வார்த்தையாடியதை வைத்து கோபமுற்று,  அவர்களுடன் சேர்ந்து விடுவேனோ என்று சந்தேகப்பட்டு அன்றிலிருந்து. என் கை கால்களை பிணைத்து ஓர் அறையில் அடைக்க தொடங்கி விட்டார்.

என் தந்தை அவர்களைப்பற்றி சொன்ன வார்த்தைகள்,  என்னை கைதியாக ஆக்கியது எல்லாமாக சேர்ந்து, என்னை மேலும் அவர்களின் " கிருஸ்துவ  மதத்தை " பற்றி மேலும் தெரிந்து  கொள்ள  வேண்டும் என்றஆர்வத்தை அதிக மாக்கியது. அவர்கள் தங்களுடைய  மத தலைமையகம்,  ஷாம் தேசத்தில் உள்ள பலஸ்தீனில் இருப்பதாக சொன்னார்கள்,  மிகவும் சிரமத்திற்கிடையில்,  என் நிலைமையை சொல்லி,  நான் ஷாம் செல்லப்போவதாகவும்  அதற்காக   அஸ்பஹானில்  இருந்து  உடனடியாக  புறப்படும் வணிக குழு  பற்றி தெரிந்தால்  தகவல் தெரிவித்து உதவுமாறு செய்தி அனுப்பினேன். சிறிது நாட்களில் அவர்களும் செய்தி அனுப்பினார்கள்.  நான் ஒருவாறாக என் வீட்டிலிருந்து தப்பித்து  வணிக குழுவினர் உதவியுடன்,  சிரியா என்ற தேசத்தை அடைந்தேன். பல்வேறு சிரமங்களுக்கு பிறகு,  எல்லோராலும் சிறப்பாக சொல்லப்பட்ட ஒரு வயதான பிஷப்  ஒருவரை சென்றடைந்தேன்.

அவருக்கு பணிவிடை செய்து அவரது மதத்தை பற்றி சிறிது காலம் கற்றுக்கொண்டிருந்தேன்,  அவர் அவ்வளவு நல்லவராக இல்லை,  ஏழை எளியவர்க்கு உதவ என்று சொல்லி மக்களிடம் வசூல் செய்கிற பணத்தையெல்லாம் அவர் தனக்காக சேர்த்துக்கொள்வதை நான் பார்த்திருந்தேன்.  சில காலத்தில் அவர் இறப்பெய்தினார்,  அவரது உடலை மக்கள் மிகவும் கண்ணியப்படுத்தும் வகையில் செயல் பட ஆரம்பித்தனர்,  நான் அவர்களிடம், இந்த பிஷப்பானவர் நீங்களெல்லாம் நினைப்பது போல் நல்லவர் அல்ல, உங்கள் எல்லோரையும் அவர் ஏமாற்றிக்கொண்டிருந்தார் என்பதாக சொன்னேன். எதைவைத்து நான் அப்படி சொல்கிறேன் என்பதாக கேட்டார்கள். நான் அவர்களை,  பிஷப் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துசென்று,  அவர் பணத்தை பதுக்கி வைத்திருந்த இடத்தை காண்பித்தேன்.  அதிலிருந்து  ஏழு  பாத்திரங்கள் நிறைய வெள்ளி தங்க நாணயங்களை கண்டெடுத்தனர்.  இதை கண்ட மக்கள் மிகவும் வெகுண்டு,  பிஷப்பின் உடலை சின்னாபின்னப்படுத்தினர்.

சிறிது நாட்களில் வேறொரு பிஷப் நியமிக்கப்பட்டார், இவர் மிகவும் பழுத்த பழமாக இருந்தார். நான் கண்டவர்களிலேயே இவர் மிகவும் நல்லவராகவும், நேரம்தவறாமல் தொழுபவராகவும், ஏழைகள் மீது அன்பு பாரட்டக்கூடியவராகவும் இருந்தார்.  சிலகாலம் அவருடனேயே இருந்து,  அவர்டைய மதத்தை பற்றி கற்றுக்கொண்டிருந்தேன். சிறிது நாளில் அவரும்  நோய்வாய் பட்டு   படுத்த படுக்கை ஆகி விட்டார்,  நான் அவரிடம் , என்னுடைய மார்க்க கல்வியை நான் தொடர விரும்புகிறேன்,  தங்களுக்கு  தெரிந்த அறிஞர் யாரும் இருந்தால் சொல்லுங்களேன் என்றேன். மிகவும் யோசனைக்கு பின்னால்,

மகனே......இந்த பகுதியிலே உண்மையான கிருத்துவத்தை பின்பற்றக்கூடிய மக்களும் அறிஞர்களும் இல்லாமலாகி  விட்டார்கள்,......  எங்களை  போன்ற ஒருவர்,    ஈராக் என்ற நாட்டில்  மோசல் என்ற ஊரில் இருப்பதாக கேள்விப்பட்டேன், முடிந்தால் அவரிடம் சென்று கல்வி கற்று  கொள்ள  பார் என்பதாக சொல்லி, சிலநாட்களில் அவரும் இறந்து விட்டார்.

நான் சந்தித்த எல்லோருமே மிகவும் வயதான பழங்களாகவே இருந்தார்கள்.மொசலுக்கு சென்று சிலகாலம் கல்வி கற்று, அவருடைய இறப்பிற்கு பிறகு,  அவரால் பரிந்துரை செய்யப்பட்ட   நசீபி என்ற ஊரைச்சேர்ந்த  மற்றொரு பிஷப்பிடம்  சென்று  இன்னும் சிலகாலம் கல்வி பயின்றுஅவருடைய இறப்பிற்கு பின்னால், அவரால் பரிந்துரை செய்யப்பட்ட  பைஜாண்டின் - துருக்கி ய நாட்டை சேர்ந்த  அமூரியா என்ற ஊரில் உள்ள பிஷப்பை சென்றடைந்தேன்.  இவ்வூரில்  சில காலம் கூடுதலாய் இருந்த தாலும்,  தொழில் வாய்ப்புக்கள் உள்ள இடமாகவும் இருந்ததால், வியாபாரம் ஒன்று  செய்து கொண்டே கல்வியும் கற்றுக்கொண்டிருந்தேன்.

அமூரிய நகரத்து பிஷப்பும் நோய்வாய்ப்பட்டார், அவருடைய இறுதிகாலம் நெருங்கியது போல் தெரிந்ததால் அவரிடமும்,  நான் கல்வி கற்றுக்கொள்ள தகுந்தவரை அடியாளம் காட்ட சொன்னேன், அவர்

மகனே........மக்கள் மனம்போன போக்கில் வாழ தலைப்பட்டு விட்டார்கள், வழி காட்டக்கூடிய  அறிஞர்களும் இல்லாமலாகி விட்டார்கள்.  இறை அறிவிப்பின்படி  புதிதாக ஒரு தீர்க்க தரிசி தோன்றக்கூடிய காலம் நெருங்கி விட்டது என்று சொல்லி நிறுத்தினார்.

எங்கே தோன்றுவார் ?  அடையாளங்கள் எதுவும் உண்டா ? என கேட்டேன்

கருமையான எரிமலை குன்றுகளுக்கு இடையில் உள்ள,  ஈச்சன் சோலைகள் நிறைந்த பகுதியில்  தோன்றுவார். தானப்பொருட்களை உண்ணமாட்டார், பரிசாக கொடுப்பவைகளை மட்டும்  உண்பார், இரு தோள் களுக்கும் இடையில் பின்புறத்தில் தீர்கதரிசிக்கான அடையாள சின்னம் காணப்படும் என்பதாகசொல்லி, சில காலங்களில் அவரும் இறையடி சேர்ந்தார்.

நான் என் தேடுதலை துவங்க வென்று இருந்த அனைத்தையும் விற்று தயாராய் இருக்கும் போது, ஒரு அரபு வணிகக்குழு ஒன்றை சந்தித்தேன்.  அவர்களிடம் என்னையும் அவர்களுடன் அழைத்து செல்லும்படி கேட்டேன். அவர்கள் அதற்கென்று பெரும் தொகை ஒன்றை கேட்டார்கள், நான் என்னிடம் இருந்த எல்லாவற்றையும் கொடுத்து அவர்களுடன் பயணப்பட்டேன். சிறிது நாட்கள் பயணத்திலேயே, என்னை அவர்கள்   " அல்  வாதல் குறா "  என்ற கோத்திரத்தை சார்ந்த  யூதனிடம் விற்று அவனுக்கு அடிமையாக்கி விட்டார்கள்.  அவன் தன உறவினனான  " பனு  குறைளா "  என்ற கோத்திரத்தின் மதீனாவை சேர்ந்த யூதனுக்கு விற்று விட்டான்.

 மதீனாவை கண்டதும், முதல் அடையாளங்கள் ஒத்திருந்ததால், இந்த இடத்தில் தீர்க்க தரிசி தோன்ற கூடும் என்று என் மனது எனக்கு சொன்னது.
 எனக்கு எந்நேரமும் வேலை இருந்ததால், ஏற்கனவே  தோன்றி மக்களுக்கு அழைப்பு கொடுத்துக்கொண்டிருந்த விஷயம் எனக்கு தெரியாது.

ஒருநாள் நான் ஈச்ச மரத்தில் ஏறியவனாக, அதன் தலைப்பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தேன்.  என் முதலாளியின் உறவினன் ஒருவன்,  அங்குள்ள  " அல் கஸ்ரஜ் " என்ற கூட்டத்தாரை  திட்டியவனாக,                                  நபி ( தீர்கதரிசி)  என்று ஒருவர் தன்னை அறிவித்து கொள்வதாகவும்  அதனை அவர்கள்   ஏற்று கொண்டார்கள் என்பதாகவும்  சொன்னான்,  இதை காதில் வாங்கிய நான் மரத்தில் இருந்து கீழே விழுந்து விட்டேன். எழுந்து ஓடோடிவந்து என்ன செய்தி என்று கேட்டதற்கு,  என் முகத்தில் ஓங்கி குத்து குத்தி  நீ போய்  உன் வேலையை பார் என்று விரட்டி விட்டான.

அன்றே  என் வேலைகளை முடித்து விட்டு, உணவு தயாரித்துக்கொண்டு,  என் இருப்பிடமான மதீனாவின் எல்லையை ஒட்டிய கூபாவை விட்டு புறப்பட்டேன்.  மதீனா சென்று  அவரை பார்த்து முகமன் கூறி. என் கையில் இருந்த உணவை கொடுத்து, இந்த தானப்பொருளை தங்களுக்காக கொண்டுவந்தேன் என்று சொல்லி கொடுத்தேன்.  அவர் தம்  தோழர்களை அழைத்து, அவர்களிடம் கொடுத்து உண்ணுமாறு சொல்லி அனுப்பினார்.  அடுத்தநாளும் அவ்வாறே உணவு கொண்டு சென்று கொடுத்து என்புரத்தில் இருந்து தங்களுக்கு பரிசு என்பதாக சொல்லி கொடுத்தேன், முன்புபோலவே தன தோழர்களை அழைத்து, அவர்களுடன் சேர்ந்து தானும் உண்டார்.  நான் கடைசியாக  கல்வி பயின்ற பிஷப் சொல்லிய, தீர்க்க தரிசிகளுக்கான  மூன்று அடையாளங்கள்  இவரிடம் இருக்கக்கண்டேன்.  இன்னும் கடைசியாக சொன்ன அடையாளமும் இருக்குமானால்,  இவரே  தீர்க்க தரிசியாக இருப்பார், இவர் காட்டும் வழியே உண்மையான இறைமார்க்க மாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே என் இருப்பிடம் சென்றேன்.

மூன்றாம் முறை சந்திக்க சென்ற பொது அவர்  இடுகாட்டில் இருப்பதாக அறிந்து அங்கு சென்றேன்,  ஒரு  பிணம் அடக்கம் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது,  நான் பின்புறமாக நின்று அவருடைய  முதுகுப்புறத்தை காண முயன்று கொண்டிருந்தேன்.  என்னுடைய எண்ணத்தை அறிந்தவர்போல்  தன மேலங்கியை சரி செய்ய, முழுதுமாக நீக்கினார். நான் கண்ணார,  என் கடைசி குரு  பிஷப் சொன்ன நபி என்பதற்கான அடையாளத்தை இரு தோள்களுக்கு இடையில் கண்டேன்.

நான் என் உடல் நடுங்க கண் கலங்கியவனாக  ஓடோடிச்சென்று  நபிகளின்  காலடியில்  விழுந்து முத்தமிட்டவனாக இருந்தேன், உடனடியாக என்னை எழ சொல்லி என் கதையை கேட்டு, தன தோழர்களுக்கும் சொல்லச்சொன்னார்கள். தன தோழர்களை நோக்கி இவருக்கு உதவி செய்யுங்கள் என்பதாகவும் சொன்னார்கள்.

என்னை விடுதலை செய்வதற்கு " முக்தளபாக் " என்ற தண்டத்தொகை எவ்வளவு தர வேண்டும் என்று கேட்டதற்கு,   செழித்து வளர்ந்து கொண்டிருக்க கூடியனவாக 300 பேரிச்சை கன்றுகளும், 40 அவுன்ஸ் அளவினான தங்கமும் வேண்டும் என்பதாக என் முதலாளி சொன்னான்.

அங்குள்ள தட்ப வெட்ப நிலையில்,  300 செழிப்பான கன்றுகளை பெற வேண்டுமானால் எத்துணை கன்றுகளை பயிரிட வேண்டியிருக்கும் இது நடக்கிற காரியமா என்று கலங்கி நின்றேன்,

நபிகளார் இடத்திற்கு சென்று என் விடுதலைக்கான விலையை சொன்னேன்,  கருணையே உருவாய் தெரிந்த அவர்கள் தம் தோழர்களை நோக்கி, உங்கள் சகோதரர்க்கு விடுதலை பெற உங்களால் ஆனதை  செய்யுங்கள் என்றார்கள். என்னிடம்,  செடிகளை நட 300 குழி வெட்டிவிட்டு என்னிடம் வந்து சொல்லுங்கள் என்பதாக சொன்னார்கள்.  சில நாட்களில்  நபி தோழர்கள்,  10, 5, 15 போன்ற பல்வேறு எண்ணிக்கையில் ஈச்ச நாற்றுக்களை கொண்டு வந்து கொடுத்தார்கள்.  நானும்  குழிகள் தயாரானதும், நபிகளாரிடம்  சென்று சொன்னேன்.   நபிகளார் தாமே  300 நாற்றுக்களையும், தம் திருக்கரங்களால் நட்டார்கள்,  சிறிது நாட்களில் அவை வேர்பிடித்து செழித்து வளரத்தொடங்கின.

ஒருநாள் அவர்களுக்கு சிறிதளவு தங்கம் நன்கொடையாக கிடைத்தது,  எங்கே அந்த பார்சி தேசத்து மனிதர் என்று கேட்க, என்னை வந்து சிலர் அழைத்து சென்றனர்.  தங்கத்தை என்னிடம் கொடுத்து,  உம கடனை அடைத்து விடுதலை பெற்றுக்கொள்ளும் என்பதாக சொன்னார்கள்.  நான் போதாதது போல் இருக்கிறதே என்று சொல்ல, நீர் எடுத்து சென்று நிறுத்து கொடும், போதுமானதாக இருக்கும் என்பதாக சொன்னார்கள்.  ஐயத்துடன் சென்ற என் ஆச்சரியத்தை அதிகரிக்கும் விதமாக,  நிறுத்த போது தேவையை விட கூடுதலாகவே   இருந்தது.

அந்த தீர்க்கதரிசி, நபி  முஹம்மது  ( சல்லல்லாஹு அலைகிவசல்லம் ), இந்த நிகழ்ச்சியை, வரலாற்றை சொல்லும் நான்  ஸல்மான்  பார்சி  ( ரலி )








.


No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........