Wednesday, August 12, 2015

சல்லி முட்டி மில்லியனர்.....இறுதி பகுதி

இதற்கு முந்தய  பதிவில் சில்லறை காசுகளை மட்டும் சேர்த்து  இரெண்டொரு மாதங்களுக்கு ஒருமுறை சேறுகின்றவைகளை, சரியான திட்டமிடலுடன், தொடர்ந்து, ஒரு தீர்மானமான முறையில், அந்த சில்லரைகள நம்மைவிட்டு போனவைதான் என்ற எண்ணத்துடன், அவை கிடைத்த காலங்களில் மட்டும் முதலீடு செய்து, அதாவது 5 ஆண்டுகள் மட்டுமே முதலீடு செய்து, பிறகு ஒரு பைசா கூட மேலதிகமாக முதலீடு செய்யாமல் அப்படியே விட்டு, தற்பொழுது சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு அதனுடைய வளர்ச்சியை  பார்க்கும் பொது தலை சுற்றுகிறது.  கிட்டத்தட்ட ரூ 12 லட்சம்  + .  அதே கால கட்டத்தில்            ரூ 2000 பாக்கி இருந்த சேமிப்பு வங்கி  கணக்கை,  மறந்து இருந்து விட்டு,   ஊருக்கு திரும்பி வந்து என்னெவென்று பார்க்கும் போது,  கணக்கே இல்லை என்று  அதன் பிறகு வங்கியின் சில தேடல்களுக்கு பிறகு,  கணக்கில் இருந்த தொகை ரூ 4520.!!!.   இதில் நாம் புரிந்து  கொள்ள வேண்டிய  முக்கியமான விஷயம், எந்த இடத்தில் நம் பணத்தை " வேலைக்கு " அனுப்பி இருக்கிறோம் என்பது  தான்.

பதினைந்து ஆண்டுகளா?  என கேட்பவர்களுக்கு, வெளிநாடு போக்குவரத்தாய்  உள்ளவர்களை கேட்டுப்பாருங்கள்,  இதோ இப்பத்தான் வந்தது போலிருக்கும் பத்து ஆண்டுகள்,  பதினைந்து ஆண்டுகள் ஓடிப்போயிருக்கும்.  உள்ளுரிலேயே இருப்பவர்கள் என்றால்,   பெண் குழந்தைகள்,  வயதுக்கு வரும்போது பெற்றோர்கள்,   முதலில்  சொல்லுகின்ற வார்த்தை,  " இப்பதான் பொறந்த மாதிரியிருக்கு அதுக்குள்ளே வயசுக்கு வந்திருச்சு " என்பது தான். காலம்   பறந்து ஓடுகின்ற வேகம் நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

சில்லறை விஷயம் முடிந்து, பண விசயத்திற்கு வருவோம்.  இந்த பிளாக்கில் வரும் " சொத்து சேர்க்கலாம் வாருங்கள் " என்ற தொடரை படித்து அதற்கு   பின்னூட்டமிட்ட  " வலிப்போக்கன் " என்ற பதிவர் இதெல்லாம் அன்றாடம் காய்ச்சிகளுக்கு எப்படி  உதவும்என்பதாக கேட்டிருந்தார்.  அவரும் இதை  நேர்ந்தால்,  இனிப்பான நிகழ்ச்சியை படித்து  தன கருத்தை சொல்லட்டும் .

ஒரு சிறு நகரத்தின் ஒரு கோடியில், "  டைரி  குயீன் "என்று   சொல்லுகின்ற  ஐஸ் கிரீம் கடை ஒன்றை   நாயரும் அவரது மனைவியும் நடத்திவந்தனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் ஆணொன்று பெண் ஒன்று. அதிலிருந்து வருகின்ற வருமானம், செலவு சம்பளம் வாடகை போக,  அவர்களுடைய வீட்டு செலவுகளுக்கு இழுத்துக்க பறிச்சுக்க என்பது போல் ஓடிக்கொண்டு இருந்தது.  சிலகாலம் நடத்திய நாயர்,  இப்படியே இருந்தால் நம்  எதிர்காலம்   என்னாவது என்று கவலை கொண்டு,  தங்களுடைய  கடை கணக்கு வழக்குகளை பார்த்துவந்த  ஆடிட்டரிடம் சொல்ல அவர்,  ஏதாவது கொஞ்சம் காசை எடுத்து, உங்க ரிடயர்மெண்டு காலத்திற்கென்று ஒதுக்கி,  ஏதாவது ஒங்களுக்கு தெரிஞ்ச கம்பனியிலே போடுங்க என்று சொல்ல,  இவர் அந்த அளவுக்கு எங்க வருமானம் வருது ?, உங்களுக்கு தெரியாததா ?, என்று கேட்க  ஆடிட்டர,  500 , 1000 இல்லாட்டியும் ,  50, 100 கூடவா ஒதுக்க முடியாது முயற்சி  பண்ணுங்க என்று சொல்லி அனுப்பினார்.

வீட்டிற்கு வந்த நாயருக்கு ஒரே யோசனை, மனைவியை அழைத்து ஆடிட்டர் சொன்ன விவரங்களை சொன்னார்.   மனைவி,  நம்மால்  தொழிலில் இருந்து பெரிய தொகையெல்லாம் எடுக்க முடியாது,  அப்படியே  சிறிய ததொகையை எடுத்தாலும்,   ஒரே தடவையாகவும் எடுக்க முடியாது  அதனால்,  கணக்கபிள்ளையிடமே  சொல்லி,  வாராவாரம் ரூ 10  எடுத்து நல்ல கம்பனியா பார்த்து போடச்சொல்லுங்க என்று யோசனை சொல்லி அவ்வாறே  முடிவும செய்தனர்.

நாயர் மனைவியிடம், கணக்கப்பிள்ளை நமக்கு தெரிஞ்ச கம்பனியா பார்த்து போடுங்க  என்று  சொல்லிவிட்டார், எனக்கு இதைபத்தி திரும்ப பேச வெட்கமாய் இருக்கிறது,  எனக்கு இந்த கடைய விட்டா வேறே ஒன்னும் தெரியாது என்று புலம்பிகொண்டிருந்தார். வார முடிவில்  அடுத்தவாரம் கடைக்கு தேவையான  பொருட்கள் என்னவென்று பார்க்கும் போது,  ஒரு யோசனை வந்தது.  மனைவியை  அழைத்து,  நம்ம  விக்கிற ஐஸ்கிரிமுக்கு வேண்டிய " டாப்பிங் ",  " குகீஸ் "   அப்பிடீன்னு எதனை வகையான சாமான் இருக்கிறது,   நம்மை போல்   எத்தனை ஐஸ்கிரீம்  கடை இருக்கிறது, அது இல்லாமே  சினிமா தியேட்டர், கடல்கரை  இந்தமாதிரி பல இடங்க லிலே இருக்கிற எல்லா கடைக்கும் வேண்டிய  சரக்கு எல்லாவற்றையும்,  மார்ஸ் கேண்டி,  ஹெர்ஷி புட்ஸ் என்ற ரெண்டே ரெண்டு கம்பனி தான் சப்ளை செய்கிறது , இது மட்டுமில்லாமே வகை வகையான் சாக்ளட்களும் தயார் பண்ணி விற்கிறார்கள்,  ரெண்டு கம்பனியில்,  ஹெர்ஷி புட்ஸ் கம்பனி மட்டும் தான் பங்கு சந்தையில் பங்கு விற்கிறது.  எனக்கு இதை விட்டா,  தெரிஞ்ச கம்பனின்னு ஒன்னும் தெரியவில்லை.  நாம அந்த கம்பனியிலே  பங்கு வாங்கினா என்ன ?  அதை பத்தி நீ என்ன நினைக்கிறாய் ? என்று கேட்க, அக்கம்  பக்கத்திலே யாருமில்லையே என்று கவனமாக பார்த்துக்கொண்ட நாயர் மனைவி,  ஓடிவந்து நாயரை கட்டிபிடித்து ஒரு  " உம்மா "  கொடுத்து நெட்டி முறித்து, எண்டே நாயருக்கு எத்தனை அறிவு என்றார். நாயருக்கு தலைகால் சிறிது நேரத்திற்கு புரியவில்லை.  அடுத்தநாள் நாயர்  ஆடிட்டரிடம், விவரம் சொல்லிவிட்டு வந்தார். ஆடிட்டரும் வாரம் தவறாமல் கம்பனிக்கு பணத்தை அனுப்பிக்கொண்டும், சில காலங்களுக்கு பிறகு கிடைக்க ஆரம்பித்த,  டிவிடண்ட் , போனஸ் எல்லாவற்றையும் திரும்பவும் புதிய பங்கு வாங்க திருப்பி கம்பனிக்கே அனுப்பிக்கொண்டும்   இருந்தார்


இவ்வாறாக பலகாலம் நடந்து கொண்டே வந்தது, கால மாற்றங்கள் பல ஏற்பட்டு நாயரின் கடையும் காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் அடைந்தது. வருமான ஏற்றத்தாழ்வுகளாலும், சிறிய தொகை என்பதாலும் எல்லோரும் மறந்து விட்டனர். ஆனால் பணம் ரூ 10 மட்டும் தொடர்ந்து போய்கொண்டே இருந்தது. சில காலத்திற்கு பிறகு நாயர் இறந்து போனார்.  நாயரின் மனைவி மக்களின் துணையுடன் சிறிதுகாலம் நடத்தினார். அவரும்  இறந்ததிற்கு பின்னாள்  மகனும் மகளும் நடத்தினர்,  அவர்களுக்கும் குழந்தை குட்டிகள் என்றாகி,  பெரியவர்களாகி,  வெவேறு ஊர்களுக்கு சென்று விட்டனர்.  வயதான காலத்தில் இனிமேலும் நம்மால் நடத்த முடியாது என்ற சூழ் நிலைக்கு வந்து, அண்ணனும் தங்கையும் கடையை விற்க முடிவு செய்தனர்.  ஆடிட்டரின் கம்பனிக்கு போய் தம் முடிவை சொன்னனர்.

சொல்லி இரெண்டொரு வாரங்களில், ஆடிட்டர் ரூ 50000 திற்கு யாரோ கேட்பதாக சொன்னார்.  மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், ஆளுக்கு ரூ 25000 என்பது ஒரு ஞாயமான தொகை தான் போகட்டும் என்று  மனதை  தேற்றிக்கொண்டு,  விற்று விடுமாறு சொல்லி விட்டனர். அடுத்த இரெண்டொரு நாட்களில், அண்ணன் தங்கை இருவரையும் வரச்சொல்லி ஆடிட்டர் ஆபீசில் இருந்து ஆள் வந்தது .

நெடுநாளைய  பழக்கமானதால், ஆடிட்டர் பழைய விஷயங்களையெல்லாம் பேசிவிட்டு, ரூ 50000 திக்கான செக்கை கொடுத்தார்.  மனதில் ஒரு இனம்புரியாத சோகத்துடன் இருவரும் போய்  வருகிறோம் என்று சொல்லி வணங்கி கிளம்பினர்.  ஆடிட்டர்  எங்கே கிளம்பி விட்டீர்கள் ?  உங்களுக்கு சேர வேண்டிய உங்களின் பெற்றோரின் ரிடயர்மண்ட்  கணக்கு இன்னும் பாக்கி இருக்கிறது  என்று சொல்ல,   இருவரும்,   ஒ,  அந்த  பத்து ரூபாய் கணக்கா ?  அதிலே என்ன பெரிசாய் வந்துவிட போகிறது,  நீங்களே  இருக்கிற காசுக்கு செக்கை அனுப்பி விடுங்கள்  என்று சொல்லி கிளம்ப போனார்கள்.   ஆடிட்டர்  ஒரு நிமிஷம் இருங்கள் என்பதாக சொல்லி,  பைலில் இருந்து ஒரு பேப்பரை உருவி இருவரிடமும்  கொடுத்தார்.

ஸ்டேட்மெண்ட்  பேப்பரை படித்த இருவராலும் ஒன்று பேச முடியவில்லை, அதில் அவர்கள் பெற்றோர் பெயரில்  ஹெர்ஷி புட்  கம்பனியின்  226040 பங்குகள் இருப்பதாகவும்.  அந்த பங்குகளின் அன்றைய மதிப்பு ரூ 10,669,088 என்பதாகவும் அதிலிருந்து, வருடத்திற்கு கிடைக்கும் டிவிடன்ட் வருமானம் மட்டும் ரூ 2,89331,  அதாவது மாதம்  ரூ 24,111.  இதில் இந்த டிவிடன்ட் தொகை தொகையை மீண்டும் புதியதாக ஷேர்  வாங்க கம்பனிக்கே அனுப்புவதாகவும்,  இனி என்ன செய்ய வேண்டும் என்பதாக கேட்டார்.

50 ஆண்டுகளில் ரூ 10 அடைந்த வளர்ச்சியை பார்த்தீர்களா இது தான்  காம்பவுண்டிங்   சக்தி.  இது கற்பனை நிகழ்ச்சி அல்ல, உண்மையில் நடந்தது. நடந்த இடம் அமெரிக்கா,  சம்மந்த பட்ட ஆட்களின் பெயரை மட்டும், இந்திய பெயராக மாற்றியுள்ளேன்.  சல்லி முட்டி சம்மந்த பட்டவரை  ரூபாய்  ரூபாய் தான்,   நாயர் கதையில் வருவது மட்டும்  அமெரிக்க  டாலர் $ $ $. இன்றும் அந்த கம்பனி வளர்ந்து கொண்டிருக்கிறது, 

இந்த இந்திய சல்லி முட்டி மில்லியனர் அமெரிக்க பங்கு சந்தை மில்லியனர்,  இருவரின் கதையிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளப்போகும் படிப்பினை என்ன?

எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும், போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்டு,  தொந்தரவு செய்யாமல் விடப்பட்டால்,  காம்பவுண்டிங் இன் சக்தியால,   மிகப்பெரிய புதையலாய் மாறக்கூடும். இவ்வாறான அபரிமிதமான வளர்ச்சியை பெற்று தரக்கூடிய வாகனங்கள் தான்,  பங்கு முதலீடுகள், ரியல் எஸ்டேட், வாடகை கட்டிடங்கள்,......மற்றும் இவை போன்றவை,

வாரம் ரூ 50 ,ரூ 100 மட்டுமே மிஞ்சக்கூடிய,  சிறு தொழில் முனைவர்கள் கூட  பெரும் தனவந்தர்களாக ஆகக்கூடிய சக்தியை தம் கைகளில் வைத்திருக்கிறார்கள் என்பது மட்டுமின்றி,  இது ஒரு  ராக்கட் சயன்ஸ் அல்ல என்பதும் தான்.

 



 

 



 

1 comment:

  1. the tipster tipster tipster - TIPS OF TIPSTER
    The titanium dental implants and periodontics tipster tipster tipster tipster tipster is a reliable titanium powder tipster and the tipster's primary responsibility is microtouch titanium trim as seen on tv to follow the most ion titanium hair color trusted tipsters. หาเงินออนไลน์ We are not

    ReplyDelete

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........