Sunday, August 2, 2015

அறியாமையா ? பொறுப்பற்ற தன்மையா ? கேட்பார் யார் என்ற மமதையா ?......

இந்த தேசத்தில், சமூகத்தில்  யாருக்கும் மனிதாபிமானம் இருப்பதாக தெரியவில்லை,  ஒவ்வொருவருக்கும்,  அவரவர்களுக்கென்று சுயமரியாதை, சுதந்திரம், உரிமை   இருப்பதை யாரும் உணர்ந்தவர்களாக   தெரியவில்லை. 
       10, 15 ஆண்டுகள்  கல்விக்கூடங்களில் பொழுதை கழித்தவர்கள், தாம் ஏதோ இமாலய சாதனையை முடித்துவிட்டது  போலும், எல்லாம் அறிந்தது போலும் எண்ணிக்கொள்கிறார்கள், நடந்து கொள்கிறார்கள். இவர்கள் படித்த படிப்பின் லெட்சனம், அவர்கள் வேலை தேடும் போது தான்,  தனக்கு நடைமுறை வாழ்வில்  உபயோகமாக கூடிய  எந்த ஒரு நுட்பத்தையும், இத்தனை  கால கல்வி  பயிற்றுவிக்க வில்லை என்பது புரியும்.  இவர்களுக்கு,அரசு அலுவலகங்கள், வங்கிகள் போன்ற பொது மக்கள்  அதிகம் ஊடாடுகின்ற இடங்களில்  வேலை கிடைத்து விட்டால் போதும், அப்பப்பா......இவர்களின்  ஆட்டத்தை கேட்கவே வேண்டியதில்லை.
        எனது உறவினர் ஒருவர், படித்திருந்தாலும்  கிராமத்திலேயே வாழ்பவர், தன் மகனை  ஆங்கில மீடிய பள்ளியில் படிக்க வைத்திருந்தார்.  சரியாக படிக்கவில்லையென்று  வீட்டிற்கு கூட்டி வந்து விட்டார். அவரும் பாடங்கள் சொல்லிக்கொடுத்து  சரியாக படிக்கவில்லை என்பதற்காக தண்டிக்கவும் செய்வார்.  தண்டிக்கும் நேரங்களில் அவருடைய அம்மா
    "  நீந்தாப்பா  அவன் படிக்கலே, படிக்கலே என்கிறாய், சின்ன புள்ளையா இருந்தாலும், வகை வகையா எத்தனை  நோட்லே எழுதி வச்சிருக்கிறான், நல்லா இஙலீஷ் எழுதறான்,  நீ படிக்க சொன்னதும் கட கடன்னு படிக்கிறான்,  இந்த வயதிற்கு இதைவிட என்ன ?, நீ  கூட அவன் வயசில இவ்வளவு படிக்கலே, சும்மா சும்மா அவனை மாட்டடியா அடிக்காதே   "
 என்பார்கள்.

             படிப்பில்லாத  பெரியவர்கள், அவர்களை விட சிறிதளவு கூடுதலாக, ஓரளவிற்கு எழுத்துக்கூட்டி படிக்க தெரிந்தவர்களாக இருந்தால் கூட, அவர்கள்  மீது ஒரு ஈர்ப்பு ,அன்பு ,மரியாதை, பிரமிப்பு கொண்டிருக்கிறார்கள்.
           இப்படிப்பட்ட பாமரத்தனம் உடைய மக்கள், " படித்தவர்கள் " என்று இவர்களை  அய்யா, சார்  என்று மரியாதை தொனிக்க அழைப்பதை,  உண்மையிலேலே தாம் அத்தகைய தகுதிக்கு தகுந்தவர் தாமா ? என்று எண்ணாமல் மமதை கொண்டு,  அவர்களை படுத்துகிற பாடு,  துன்பம் சொல்லி மாளாது. நான் நேரிடையாக அனுபவித்த ஒரு நிகழ்ச்சி.
            சென்னையில் மண்ணடியில் உள்ள  ஒரு அரசுடைமையாக்க பட்ட வங்கி. வெள்ளிக்கிழமைகளில் கடுமையான கூட்டம் இருக்கும். தமிழ் மட்டுமே பேசும் வியாபாரிகள் நிறைந்த பகுதி, தமிழ் பேச தெரியாதவர்களை, உதவுவதற்கென்று உள்ள இடங்களில் போட்டிருக்கிறார்கள். மூன்று கேஷ் கவுண்டர்கள், ஒன்றில் லட்ச ரூபாய்க்கு மேலான  பரிவர்த்தனைக்கு, அடுத்தது வியாபாரிகளுக்கு மட்டும். இந்த கவுண்டரில் உள்ள   இருவரும், இனிமேல் வரப்போகிற வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கிறார்கள். மூன்றாவது  தான்  அப்பாவி  சனங்களுக்கானது. அதில் மற்ற இருவரும்  சும்மாவே இருக்கிறார்களே, நாம் மட்டும் இவ்வளவு வேலை பார்க்க வேண்டி இருக்கிறதே என்ற கோபமோ என்னவோ, முகத்தில் சிரிப்பே இல்லாமல்,  சிடு சிடு என்று ஒருவர். 15, 20 பேர் அதற்கான வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்,  நானும் அதிலே தான் நின்றேன்.
             மூன்றாவது கவுண்டரில் உள்ள காசாளர் வருகிற ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும், வெளியூர் வங்கியின் முழு முகவரி எழுதசொல்வது, முழு  முகவரி எழுதி  இருந்தால் பின் கோட் எழுத சொல்வது,  எண்ணால் மட்டும் எழுதியிருந்தால், எழுத்தாலும் எழுத சொல்வது. இப்படி  ஏதாவது ஒரு குறையை சொல்லி, திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்.  எல்லாம் சரியாக ஆனபின்பு, பணத்தை  குறைந்து  3, 4 முறை எண்ண வேண்டியது, இடையில் அவர் எழுப்புகின்ற,                றுமல் சத்தங்கள், முக்கல்கள், கண் உருட்டல்கள்,  ( அவருக்கு என்ன நோய் என்று தெரியவில்லை, பணத்தை கையில் கொடுக்க அச்சமாகவும் இருக்கிறது )  பார்த்தால்  தான்  நம்ப முடியும். சராசரியாக ஒரு வாடிக்கையாளருக்கு அவர் எடுத்துக்கொள்ளும் நேரம்  10 அல்லது 15 நிமிடம்.
            எனக்கோ அவசரம்,  டிராப்ட் எடுத்து 3 மணிக்குள் கொடுக்க  வேண்டும், கடைசியாக என் முறை வந்தது,  நான் எனக்கு முந்தி நின்றவர்களை அவர் படுத்திய பாட்டை பார்த்து எல்லாவற்றையும்  சரியாக எழுதிக்கொண்டு போனேன்.   பேஇன் ஸ்லிப்பை  2  முறை திருப்பி பார்த்தார், எல்லாம் சரியாய் இருந்தது, என்னிடம்

டிராப்ட் கமிசனை, சேர்த்து  எழுதி கூட்டி போடணும்,  இது கூட தெரியாதா?
உங்க அப்பா அம்மா மாதிரி, எங்க அப்பா அம்மா என்னை படிக்க வைக்களைங்க!!!!
அவரால் ஒன்றும் பேச முடியவில்லை, பணத்தை விறு விறு எண்ணி, கையெழுத்து போட்டு, செல்லானில்  ஸ்டாம்ப்  அடித்து கையில் கொடுத்து விட்டார்.

15 நிமிடங்கள் பொறுத்திருந்தேன், லஞ்சுக்கு மூட ஐந்தே நிமிடம் இருந்தது,  டைப் ரைட்டருக்கு முன்பு உட்கார்ந்து ஒருவர்  பேப்பர் படித்துக்கொண்டிருந்தார், இட ஒதுக்கீட்டில் வேலை பெற்றவர் போலிருக்கிறது. நான் அவரிடம்

அய்யா  அவசரமா டிராப்ட் வேணும், லஞ்சுக்கு மூடிட்டா, ரெண்டு மணிக்கு மேல்  ஆயிடும், கொஞ்சம்  எடுத்து வந்து அடிச்சு தாருங்களேன்.
கேஷ் கட்டியாச்சா ?  இங்கே செல்லான் வரும்.

கேஷியர் அவருக்கு பின்னாலே உள்ள டிரேயில், கேஷ் கட்டிய  செல்லானை  வச்சுட்டார். கொஞ்சம் எடுத்திட்டு வந்து அடிச்சு தாருங்களேன்.
அவன் அங்கெ வச்சா நான் போயி எடுக்கணுமா?  இது என்ன பேன்குன்னு நெனப்பா, உங்க வீடுன்னு நெனப்பா என்று தடித்த குரலில் கேட்டார்
இதற்கிடையில்,  என்னையும் மூன்று வாடிக்கையாளர்களையும் உள்ளே வைத்து, கேட்டை அடைத்து விட்டார்கள். உள்ளே இருந்து திறந்து விடாமல் இருக்க அருகில் துப்பாக்கி சகிதமாக ஒரு காவலர்.

எங்களை மாதிரி ஆளுங்க பணம் போட்டு, எடுத்தான் தான்யா உங்க பேன்க்!!!!!, என்னைய்யா கஸ்டமர் சர்வீஸ் பண்ணுறீங்க ?, யார்யா  மேனேஜர் ?  என்று உரக்க சொல்லிக்கொண்டு, மேனேஜர் அறையை நோக்கி நடக்க தொடங்கியதும், காவலர் ஓடிவந்து குறுக்கே தடுத்தார்.

மேனேஜர் வெளியே வந்தார், லஞ்சுக்கு கிளம்பிய, கிளார்க் ஒருத்தர் சீட்டுக்கு திரும்பி வந்து, செல்லானை எடுத்து வந்து, கவுண்டர் சயின் போட்டு, டைப்ரைடர் காரரிடம் கொடுக்க, அவர் டிராப்டை டைப் அடித்து, மேனேஜரிடம் கையெழுத்து வாங்கி என்னிடம்  கொடுத்து,    என்னை கையோடு கூட்டி போய் கேட்டை திறந்து, வெளியே கொண்டு போய்  விட்டார்.

வெளியே மழை பெய்து கொண்டிருந்தது, நான் சிறிது நேரம் மழை விடட்டும் என்று ஒதுங்கி நின்றேன்,

டைபிஸ்ட் பின்புறமிருந்து,  சார், கார்பரேசன்காரன்  மோசமானவன்,  3 மணிக்குள்ளே பணம் கட்டிடணும், இன்னைக்கு விட்டா  திங்க கிழைமை தான்.  மழையை பாக்காமெ ஆட்டோ எடுத்துகிட்டு போங்க....... 
 

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........