Saturday, May 30, 2015

சொத்து சேர்க்கலாம் வருகிறீர்களா?

சொத்து சுகங்கள் சேர்ப்பது என்பது இன்றைய கால கட்டத்தில் மிகவும் சுலபமான விஷயம். ரேசன் கடையை  சுற்றி வருபவர்கள் கூட தினசரி காசு  (பணம் ) பார்த்து விடுகிறார்கள். இந்த முறையில் தான் சம்பாதிக்க வேண்டும் என்றில்லாமல்,  நம்மை சுற்றி இருப்பவர்களை பற்றி கவலையே இல்லாமல் பணம் சேர்க்கிறார்கள். நமக்கு  சம்பாதிப்பதற்கும், களவாடுதற்கும் உள்ள வித்தியாசம் மறந்து போய் விட்டது, இரண்டையுமே  சர்வசாதரணமாக,  சம்பாதித்தல் என்றே சொல்கிறோம். இங்கே  அம்மாதிரியான விசயங்களை பற்றி நாம் பார்க்கப்போவதில்லை,  இரத்த வியர்வை சிந்தி  உழைத்து சம்பாதித்து, வாழ்வில் உயர முடியாமல் உழன்று கொண்டிருப்பவர்களுக்கு, நேரான வழியில் சொத்து சேர்க்க நான் கண்ட, எனக்கு முன் கண்டவர்கள் சொன்ன வழியை பகிர்ந்துகொள்ளபபோகிறேன். எல்லோருக்கும்  இதில் உடன்பாடு இருக்கும் என்று  சொல்லமுடியாது. இது ஒரு நிருபணம் செய்யப்பட்ட வழி முறை. இன்றைக்கு  தொடங்கினோம்,  நாளைக்கே அல்லது மறுவருடமே சொத்து சேர்ப்போம் என்பது போன்றதும்  இல்லை. " சிறுகககட்டி பெருக வாழ்தலே "  என்ற அடிப்படையில் தான். 

 சில ஏமாளிகள் ( ? )  கடல் கடந்து சென்று இளமையை தொலைத்து, தனிமையில் வாடி வதங்கி, சம்பாதித்து அனுப்பி வைக்கின்ற பணத்தை  சரியாக நிர்வகித்து, பிரயோஜனம் செய்து கொள்பவர்கள் மிகக்குறைவே. பல வருடங்கள்  வெளிநாடுகளில் இருந்துவிட்டு,  போதும் இனி இந்த வாழ்க்கை என்று திரும்பி வந்தவர்கள்,  ஒரு சில மாதங்களிலேயே  மீண்டும் பாஸ்போர்டை கையில் எடுத்து வெளிநாடு செல்ல முயற்சிப்பதை கண்டு மனம் நொந்திருக்கிறேன். சிலர்  நான்கு, ஐந்து    ஆண்டுகள் சம்பாதித்து  ஊர் வந்து  கையில் இருந்த இருப்பு கரைந்ததும்,  வீட்டில் உள்ளோரிடம்  பணம் கேட்கும்போது,  நீ  புறப்படும்போது  வாங்கிய கடனே இன்னும் அடைபடவில்லை என்று சொன்னவர்களையும் கண்டு வேதனைபட்டிருக்கிறேன். சிங்கப்பூர் சென்று பல காலம் நன்கு வாழ்ந்தவர், வாதமடித்து திரும்பி வந்து ,  பிட்சைஎடுத்து காலம் தள்ளுவதை கண்டிருக்கிறேன்.

       பல ஊர்களில் இன்று கொத்து வேலை செய்பவர்கள், சர்வசாதரணமாக மாதம் இருபத்தைய்ந்தாயிரம் சம்பாதிக்கிறார்கள். முதுமை அடைந்தும் வேலை செய்தால் தான்  உணவு  என்ற நிலைமையில் இருக்கிறார்கள். இன்னும் எத்தனையோ வகையான தொழில் செய்பவர்கள், இதே நிலைமையில் தான் இருக்கிறார்கள். இதற் கெல்லாம் காரணமென்ன?. சேமிப்பு  இல்லாதது தான்.

      நன்றாக சம்பாதிக்கின்ற காலத்திலேயே சேமிப்பு இருந்ததென்றால், ஆயிரம் இரண்டாயிரம் என்றல்ல, அம்பது  நூறு கூட  ரெம்ப துரத்திற்கு வரும். திட்டமிடலும், தொடர்ச்சியாக திட்டமிட்டபடி செயலற்றுதலும் தான், லச்சதிற்கும் கோடிக்கும் வழி வகுக்கும்.   தொடர்ந்து  இன்னும் இது பற்றிய விசயங்களை அலசுவோம்