Tuesday, July 28, 2015

சொல்லுங்களேன் அய்யா........ . நான்தான் கிறுக்கனா ???????

வெகு  நாளாக எனக்குள்  ஒரு பெரும் கேள்வி,  இது எனக்கு மட்டுமா,  இல்லை பலரும் இப்படித்தான் உள்ளுக்குள் நினைக்கிறார்களா ?......  மண்டை கனம்  பிடித்தவன் என்று நினைத்து கொள்வார்களோ ?......  இப்பத்தான் ரெண்டெழுத்து எழுத ஆரம்பிச்சிருக்கிறான்,   அதுக்குள்ளயே  இப்படின்னா.?.... யாரிடம் கேட்பது என்று  ஒரு மினி குருஷேத்ரம்.

பிறகுதான் நினைவு வந்தது,  நான்  என்ன  பெரிய  பிளாக்கரா ?,  நானேதான்   தான் என்  பிளக்கை  ஒரு நாளைக்கு மூணு தரம்  யாரும் படிக்கிறாங்களா? என்று பார்க்கிறேன் ,  அப்படி வேறு யாரும் தப்பி தவறி வந்து விட்டாலும் ,  முகத்துக்கு  நேராவா  இருக்கிறோம் என்று தைரியபடுத்திக்கொண்டு  எழுத தொடங்கினாலும் கொஞ்ச வெடவெடன்னுதான்  இருக்கிறது,  நேரடியா சொல்லாம  கொஞ்சம் அதை இதை  சைட் டிஸ்சா  சொல்லி ஆசுவாச படுத்திகிட்டு, மெயின் கோர்சுக்கு  வருகிறேன்.

எங்க அப்பாவிற்கு என்னை எப்படியாவது நல்லா படிக்க வச்சுடனும்னு  ரெம்ப ஆசை ( பாவங்க எங்க அப்பா !!! ),  பத்தாவது படிச்ச உடனேயே,  பாலிடெக்னிக்லெ  சேர்ந்து படிக்கிறேன் என்றதுக்கு,  எங்க அம்மா கிட்ட போய்,    எம் புள்ளைய நான்  காக்கி சட்டை போட்டு பாக்கனும்னு ஆசை படலே,  கோட்டு  சூட் போடற  பெரிய ஆபீசரா  பாக்கனும்  என்று கறாரா  சொல்லிட்டாருங்க         ( பாவங்க எங்க அப்பா !!!! )  ரெண்டுக்குமே  கொடுப்பினை இல்லைங்க.

எங்கப்பா  ஆளினால்  அழகு ராஜா  மாதிரி,  அதிலே ஒரு கேரக்டர்   கவிஞர்,  ஆனா  என்கிட்ட எல்லாம் சொன்னது இல்லை.  (எங்க அப்பா தவறிப்போன பிறகு,  வீட்டை சுத்தம்  பண்ணும் போது,   ஒரு பொட்டி  நிறைய  பாட்டு எழுதின நோட்டு  இருந்திச்சு,    அது  என்னான்னு கேட்டப்ப  தான்  எங்கம்மா சொன்னாங்க).   அந்த நேரத்திலேதான்  ராணிமுத்து,  ஒரு ரூபாய்க்கு மாதம் ஒரு நாவல் விற்க தொடங்கினார்கள்.  மாதாமாதம்  வாங்கி வந்து தருவார்.  மூணாவது  மாசம் ஒரு சிக்கல் வந்திருச்சு,   நான்  அப்பதான்  ஆரம்ப பள்ளியில் ஆறாவது முடித்து,  உயர்நிலை பள்ளியில் சேர்ந்து  ஓராண்டு படித்து  முடித்து  எட்டாவது போய்கொண்டிருந்தேன்,   என் ஆரம்ப பள்ளி ஆசிரியை,  எங்கள் வீட்டு  அருகிலேயே குடியிருந்தார், அவர்  என்னிடம்  ராணிமுத்தை  படிக்க கேட்டார்,  நான் அவருக்கு கொடுக்க வேண்டியிருக்குமே என்று ஓடி  ஒளிந்து கொண்டிருந்தேன். அவர் எங்க அப்பா கிட்ட, 

" படிக்கிற இந்த சின்ன வயசில இந்த மாதிரி கதை புஸ்தகம் எல்லாம் வாங்கி கொடுத்தால் படிப்பு வீணாகி விடும் " 

போட்டு குடுத்திட்டாங்க என்று சொன்னால் மரியாதை இல்லை, எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியலே,  நீங்க புரிஞ்சுகிட்டா சரி.  இனி வாங்கி தருவாரா?.  நானும்  கெஞ்சினேன், கதறினேன்,   ஊகும்  வாங்கி கொடுப்பேனா என்று சொல்லி விட்டார்.   ஆசிரியர்கள்  மீது அப்படி ஒரு மரியாதை !!.  வாத்தியார் சொல்லை மீறி  வாங்கி தந்தால், அவருக்கு அவமரியாதை என்று கடைசிவரை  வாங்கியே தரவில்லை.  வாழ்க அந்த ஆசிரியை நாமம்.

அப்பவெல்லாம்  கருக்கள்நேரத்திலேயே எழுந்து  ஒரு மைல் நடந்து சென்று, காலைக்கடனை திறந்த வெளியில் முடித்து,  வீடு வந்து சேர்வோம், பிறகு பள்ளிக்கு செல்வோம்.  மாலையில்  தவறாமல் செல்வது   பார்பர் ஷாப் ஒன்றுக்கு,  அங்கு  தினத்தந்தி இருக்கும்.  அந்த கடைக்காரர்தான்  என்னைப்போன்ற இளைஞர்களுக்கு அரசியல்  ஆசான்.  அவர் ஒரு பக்கா தி.மு.க. காரர்.  நான் முதலில் படிப்பது,  கன்னித்தீவு, தொடர் கதைகள்.   அவர்  தம்பி இன்னார், இன்ன இடத்திலே பேசியிருக்கிறார், படித்து சொல்லுங்க என்பார்,  நானும்  தி. மு. க. பெருந்தலைகள் போல், கரகரப்பு குரலில்  வல்லினம் மெல்லினம் சுத்தமாக படிப்பேன் ( அதாவது ) உரை ஆற்றுவேன். இதை கேள்விப்பட்டு என் அப்பாவிற்கு, உள்ளுக்குள் பெருமை  ( அப்பாவின் இன்னொரு முகம், தி.மு.க. தியாகி ( ? ),  நேருவுக்கு கருப்பு கோடி காட்டி ஜெயிலுக்கு போனவராக்கும் !!!! ).   அடுத்த  நிறுத்தம், அருகிலேயே உள்ள  நூல் நிலையம் தான்.  வார விடுமுறை நாட்கள் தவிர மற்ற எல்லா நாட்களும், மாலை  நேரங்களில்  2  ,  3 மணி நேரம் அங்குதான் ஜாகை.  " கண்டதை படித்து  பண்டிதன் ஆனாள்  சரி "  என்று  எங்கள் அப்பாவும்  ஒன்றும் சொன்னதில்லை.

அந்த காலத்தில் நூலகத்திற்கு ஆயுள் சந்தா 3 ரூபாய் தான்,   ஆனால் அதை வாங்குவதற்கு  தர வேண்டிய, சான்று கடிதங்கள் ஏராளம்.  புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துசென்று படிக்கலாம்,  ஒரு டோக்கனுக்கு  ஒரு புத்தகம் தான். எனக்கும்  என் அப்பா ஒரு டோக்கன் வாங்கி தந்தார்.   அப்பொழுது  புதிதாக வந்த நூலக அலுவலர்  ( நூலகர் அல்ல )  வெளியூர் காரர்.  நாங்கள் குடியிருந்த தெருவிலே தான், அவரும் குடி வந்திருந்தார்.  அவரிடம்  பையனை பார்த்து கொள்ளுங்கள்  என்று சொல்லி வைத்தார்.

பார்பர் ஷாப்பில் உரையாற்றியது மற்றும்  கண்டதை படித்ததில்  கிடைத்த டிரைனிங்,   காரணமாக எனக்கு விரைவாக படிக்கும் ஆற்றல் வந்திருந்தது,   என் நண்பன் மூலமாக எனக்கு பரிச்சயமான வேறொரு குடும்பம், அவர்களது  இரண்டு  டோக்கன், அவர்களுக்கும்   சேர்த்து புத்தகம் எடுப்பது என்று பழக்கமாகிவிட்டது. நான் விரைவில் படித்துவிட்டு புத்தகத்தை மாற்ற சென்றால்,  நூலக அலுவலர் வழியில் மடக்கி,  படித்தா விட்டாய் ? என்பார் , ஆம் என்றால், நன்றாய் படித்துவிட்டு வா என்று திருப்பி அனுப்பி விடுவார்.  இது என்னடா பெரிய கரைச்சலாய் போய்  விட்ட தென்று,  அவர்  இல்லாத நேரமாய் பார்த்து,  புத்தகம் எடுத்து வருவேன்.  நாளடைவில் அவரே புரிந்து கொண்டு  விட்டு  விட்டார்.

அந்த  நூலகத்தில்  உள்ள பெருபாலான புத்தகங்களை நான் படித்திருப்பேன்,  வரலாற்று  நவீனங்கள் மட்டுமின்றி,  பல தரப்பட்ட விஞ்ஞான நூற்களும் அவற்றில் அடங்கும்.  சாண்டில்யன், கல்கி, நா. பா , மு.வ  போன்றோரின் நூற்கள் மட்டுமின்றி,  இன்று எனக்கு  உடனடியாக  நினைவுக்கு வராத  சில  ஆசிரியர்களின் நூற்கள்  என்று  பட்டியல் நீளும்.

சிறிய  ஊராக இருந்தாலும்  அக்காலத்திலேயே,  எங்களூரில் கலைக்கல்லுரி ஒன்றிருந்தது,  அதனால் " படிப்பாளிகள் "  ஞாயமான  அளவில் இருப்பார்கள், அவர்கள் குடியிருக்கும்  பகுதிக்கு மிக அருகில் நூலகம் அமைந்து இருந்ததால்.   எந்நேரமும் நூலகத்தில் கூட்டம்,  அமரக்கூட  சமயங்களில்  இடம் கிடைக்காது,  இத்துணைக்கும்  25 , 30 பேர்  அமரும் கொளளளவு  கொண்டது.  அப்பப்ப வரக்கூடிய  வார, பருவ இதழ்களை படிக்க கூட்டம் அலைமோதும்.  ஏற்கனவே  படித்துகொண்டிருப்பவரிடம்,  சொல்லி வைத்து     ( அட்வான்ஸ் புக்கிங்  !!!! ) அவர் படித்து முடித்ததும் வாங்கி படிப்போம்.  அந்த  "வெய்டிங் " நேரத்தில்,  பெரும்பாலும் தீண்டப்படாமல்  கிடக்கும்  ஆங்கில தினசரிகளை  புரட்டி கொண்டிருப்பேன்,   அதனால் தானோ என்னவோ,  சில காலங்களுக்கு பிறகு  அறிஞர் அப்துர் ரஹீம்,  டாக்டர்  எம். எஸ். உதய மூர்த்தி  போன்றோரின்  சுய முன்னேற்ற புத்தகங்கள்  படித்து,  அதில்  அவர்கள்  மேற்கோள் காட்டும் ஆங்கில மூல  ஆசிரியர்களின்  புத்தகங்களை வாங்கி படிக்கும் அளவிற்கு " தைரியம் "  வந்தது போலும்.  இதனால்  வந்த ஒரு " சைட் எபெக்ட் "  என்று பார்த்தால்,  கவனம் இருவேறு இடங்களில்   இருந்ததால்,  வார்த்தைகள் நினைவு இருந்தாலும்,  வார்த்தைகளில்  ஒரொரு எழுத்துக்களை   "சாப்பிட்டு " விடும் நிலைமை ஏற்பட்டு விட்டது.  தற்காலத்தில் கான்வெண்டுகளில்  3 ஆம் வகுப்பில் படிப்பவர் மெச்சும் அளவில் கூட,  என்  ஆங்கில புலமை இல்லாமலாகிவிட்டது !!!!!!!

சாண்டில்யன், கல்கி போன்றோரின் படைப்புக்கள், இரண்டு மூன்று பிரதிகள் இருந்தாலும்,  ஒவ்வொன்றும்  பல பாகங்களை கொண்டு இருக்குமாதலால் கிடைப்பது சிரமமாய் இருக்கும், சொல்லி வைத்து எடுத்து செல்லுவோம். மு.வ ,  கி .வா.ஜா,  போன்றோரின் படைப்புக்களை  எழுத்திற்காக படிப்போம் என்ற பக்குவம் இல்லாமலிருந்தாலும், அவர்தம்  புகழ், பெருமையின் காரணமாக எடுத்து சென்று படிப்பதுண்டு.

சாண்டில்யனின் கதைகளை பலமுறை திரும்ப திரும்ப படித்திருக்கிறேன், கல்கியின்  பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற வற்றைய்ம் பல முறை படித்திருக்கிறேன், அதிலும்  பொன்னியின் செல்வன் படித்தது தான் அதிகம். இன்றும் கூட பொன்னியின் செல்வனை கணினியில் டிஜிடல் காப்பி யாக வைத்துக்கொண்டு,  குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் படித்து, மனதிற்கு கிளு கிளுப்பை  ஏற்படுத்திக் கொள்வதுண்டு.

மேற்கண்ட கதை மாந்தர்களுடன் ஒரு நெருக்கமான ஈர்ப்பு ஏற்பட காரணம், நான் முன்பே  குறிப்பிட்டு இருக்கிற, என் நண்பன் மூலம் பழக்கமான குடும்பம்.  அவர்கள் வீட்டில் அலுவலகங்களில் வேலை பர்ர்ப்பவர்கள் இருந்தார்கள், அவர்கள் வீட்டில் உள்ள பெண்களின் பொழுது போக்கிற்கென்று  எல்லா மாத, பருவ இதழ்களையும் வாங்குவார்கள்.  மற்றவர்கள் போலன்றி அவைகளை  படித்து முடித்து விட்டு , கடலை காரரிடம் எடைக்கு போடாமல், கதைகளை  மட்டும் சேர்த்து  " பைண்ட் "  செய்து வைத்து, ஒரு சிறு நூலகமே அவர்கள் வீட்டில் இருந்தது.  அந்த தொகுப்பில் இருந்து பல கதைகளை படத்துடன் பார்த்து படித்திருப்ப து  தான்.

காலக்கிரமத்தில்,  ஊரைவிட்டு,  நாட்டை விட்டு உழைக்க வென்று வெளியேறி, தமிழை தொடர்பு  மொழியாக மட்டுமே பலகாலம் கொண்டு,  படிப்பதை,  சுவைப்பதை முழுதுமாக நிறுத்தியாகி விட்டது.  பணத்தையும் இலக்கையும் மட்டுமே குறியாய் கொண்டு  உழைத்து கொண்டே இருந்து விட்டு,  சிறிது  ஆசுவாச படுத்திக்கொண்டு தொடர்வோமே என்று நிமிர்ந்த நேரத்தில் தான் நினைவு வந்தது  தாய் மொழியும், நாடும்.

பழைய நினைவுகளை தூசு தட்டி எழுப்பி,  சாண்டில்யனோடும் கல்கியோடும் கை கோர்த்து நடக்க தொடங்கினால்,  அய்யய்யோ........ என்னவாயிற்று எனக்கு,  நான்  நான்தானா........  எனக்கு கிறுக்கு எதுவும் பிடிக்க வில்லையே  கையில் எடுத்தால் முடிக்கும் வரை விடாமல் படிக்க வைக்கும் அந்த காந்த சக்தி எங்கே  காணமல் போனது ?.......,  முட்டாத்தனமாய் தெரியுதே ............ சே .. எனக்கென்ன தகுதி இருக்கிறது ?  இவர்கள் எழுத்தை சுண்டிபார்க்க ......  எடத்தை காலிபண்ணு என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, தேள் கொட்டிய திருடனாய்,  வீட்டை விட்டு வெளியேறி நடந்தேன்.

காந்தா ராவ்,  எம்.ஜி .ஆர்., வீரப்பா போன்றோரின் சினிமா ஓட்டி, எந்நேரமும் திருவிழா கடையாய்  திகழ்ந்த இடம்,  யாரும் நல்ல விலை கொடுக்கும் ரியல் எஸ்டேட்காரர் கண்னில்  பட மாட்டோமாஎன்று நின்று கொண்டு,  சும்மா இல்லாமல்  எதோ வந்தாலும் சரியென்பது போல்,  முற்காலங்களில் வீட்டில் சென்று பயிற்சி எடுக்கத்தூண்டும் வீர வசனங்கள் நிறைந்த படம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.   எதுகையும், மோனையும் வசனத்தில் இருந்தது ஆனால் பொருள் இருந்ததா என்றால் இல்லை,  அடடா........... இதென்னடா கோளாறு........   இதையெல்லாம் போய்  பேசிபேசி பார்த்தோமே  அட கடவுளே ........ ,  இதுக்குத்தான்  எல்லாத்துக்கும்  ரிஷி மூலம், நதி மூலம் பார்க்கக்கூடாது என்றார்களோ ?.   பழ மொழிகளெல்லாம் நறுக்கு தெறிச்ச மாதிரி சின்னதா சொல்லி இருக்காங்களே,  ஒருவேளை கொஞ்ச நாள் கழித்து படித்தால், கிறுக்கு தனமாய் தோன்றும் என்று தான்,  சின்னதாய் சொல்லி அவனவன் இஷ்டத்துக்கு விளக்கம் சொல்லிக்கொள்ளட்டும்  என்று விட்டுவிட்டார்கள ?.   மண்டையை பிச்சுக்க  தோணுதே அய்யய்யோ..........

கொஞ்ச நாள்  எதையும் பேசாமல் எனக்குள்ளே வைத்திருந்தேன். நான்தான் கிறுக்கனா ?.  அல்லது எந்தவிதமான சார்பும் இன்றி சிந்தித்தால் எல்லோருக்குமே இப்படித்தான் தோன்றுமா?, விடை அறியத்தான் இந்த பதிவு.

சொல்லுங்களேன் அய்யா, நான்தான் கிறுக்கனா ??????

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........