Monday, July 6, 2015

சொத்து சேர்க்கலாம் வாருங்கள் - 5

நம்மிடையே  இன்றும் வழக்கத்தில் இருக்கிற பழமொழி "  ஒன்னு  பொன்னிலே போடணும் இல்லையென்றால் மண்ணிலே போடணும்  "  என்பதாக.  மேலோட்டமாக பார்க்கும் போது அது சரியென்றே தோன்றும்.  ஒரு 10 வருட  கால இடைவெளியில்   தங்கம் விற்ற விலையையும். இன்று  விற்கிற விலையையும் வைத்து  காம்பவுண்டிங் முறையில் கணக்கிட்டு பார்க்கும் போது, கிடைக்கின்ற முடிவு  தங்கத்தின் மரியாதையை  மங்க செய்வதாக தான் இருக்கிறது.


இன்றைய கால பெரும்பாலான  பொருளாதார நிபுணர்களும் மேதைகளும்  கூட,  தங்கத்தில் முதலீடு செய்வதற்கு ஆதரவாக இல்லை.  உலகமெல்லாம் அறிந்த  வாறன் பப்பெட் கூட முழுக்க முழுக்க, தங்கத்தில் முதலீடு செய்வதற்கு எதிரானவராகவே இருக்கிறார்.   சமீப காலமாக சிலர்,  நிகர சொத்து மதிப்பில்  5 % லிருந்து 7%  வரை தங்கமாக வைத்திருக்கலாம் என்பதாக  பரிந்துரை செய்கிறார்கள்.


மேலை நாடுகளில்,  தங்கத்தில் பரிவர்த்தனை செய்வது என்பது, ஒரு செலவு மிகுந்த செயல்.  எளிதில் பணமாக்க முடியாது,  நமது நாட்டில் அப்படியல்ல.  சமுதாய அந்தஸ்திற்கு ஒரு அடையாளமாக இருப்பதாலும்,  நினைத்த மாத்திரத்தில் பணம் புரட்டக்கூடிய தன்மையாலும், தங்கம் வாங்கப்படுகிறது.  தங்கம்  ஒரு  முதலீடு என்பதைவிட சேமிப்பு  என்று  கருதியே  வாங்கப்படுகிறது.  நாமும் சொத்து சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் போது,  முதலுக்கு மோசம் வந்து விடாமல் இருக்க,  இடைக்காலத்தில்  எதிர்படக்கூடிய எதிர்பாரா செலவுகளை  சமாளிக்க வென்று சிறு தொகையை, வங்கிகளில் ரொக்கமாக  வைப்பதை காட்டிலும், தங்கமாக  வைப்பது லாபகரமாக  இருக்கும் என்பதால், அதைப்பற்றி இங்கு நாமபார்க்கலாம்.                                                                                           

காசு விரையமாகாமல்  இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், எக்காலத்திலும் புதிதாக நகைகளோ, தங்க காசுகளோ வாங்காதீர்கள்.  பேங்குகளிலோ,  போஸ்ட்ஆபீஸ்களிலோ, தங்க காசுகள் வாங்கும் பொது,  செய்கூலி மற்றும் பிரிமியம் என்று சொல்லி,  நடப்பு  தங்க விலையுடன்,  ஒரு தொகை சேர்த்து விலை சொல்வார்கள்.  அந்த தொகை, அப்படியே நீங்கள் விற்க செல்லும் போது அம்போ!!!.   நீங்கள் விற்ற அடுத்த நிமிசமே,  வேறொரு வாடிக்கையாளருக்கு, அதே தங்க நாணயத்தை செய்கூலி பிரிமியத்துடன் விற்பதை காணலாம்.


வாங்குகிறது  தான் வாங்குகிறோம்,  புதிய டிசைனில் நகைகள் வாங்கினால்,  வீட்டுக்கார அம்மாவையும்  சந்தோஷ படுத்தலாமே என்று நினைக்கும் கனவான்களின்  கவனத்திற்கு ,   நல்ல பெயர் பெற்ற   நகைக்கடையில்   (அப்படி யாரும் இருக்கிறார்களா ?. !!,  இதற்கென்று ஒரு இடுகை பின்பு வரலாம் ) வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  நாளை  அவசர தேவை என்று அவர்களிடம் விற்க போனால், நீங்கள் ஏற்கனவே கொடுத்த  செய்கூலி, சேதாரம் மற்றும்  தங்கத்தின் நடப்பு விலையில் இருந்து  20 % லிருந்து 25 % வரை கபளீகரம் செய்யப்படும்.  ( உங்களுடைய  நம்பிக்கையை  பெறுவதற்காக,  வாங்குமுன் சொல்லப்பட்ட,  எப்ப திருப்பி கொண்டுவந்தாலும்  அன்றைய மார்கட் விலையில்  வாங்கி கொள்வோம் என்றவர்கள்  கூட, இதையே செய்வார்கள் ).  இப்பொழுது  அரசாங்கம்,  ஹால் மார்க்  ஒவ்வொரு நகையிலும் இடவேண்டும் என்று சொல்லியிருக்கிறது. சில கடைகளில் ஹால்மார்க் இட்ட நகைகளை விற்கிறார்கள்,  ஹால் மார்க்கில் குறிப்பிடும்  மாற்று இருக்குமா ?,  படைத்தவனுக்கே வெளிச்சம்.


என்ன கரச்சலாய் போச்சு, எங்குதான் வாங்குவது என்று யோசிக்கிறீர்களா?. உடனடியான சேமிப்பு , ஒரு பவுனிற்கு ( 8 கிராம் ) குறைவாக  ரூ 1,000 தில் இருந்து ரூ 1,500 வரை சேமிப்பு செய்ய முடியும்.  (இந்த வாய்ப்பு மேலை நாட்டவர்களுக்கு கிடையாது.!!!! ).   நம் சொத்து சேர்ப்பது  என்பதின்  அடிப்படையே சேமிப்பு தானே.  மேலை நாடுகளில் தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டால் அது அப்படியே ஒரே இடத்தில்  இருக்கும்,  நம் தேசத்தில்  அப்படியல்ல,  ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற தங்கம்,  பெரும்பாலும் நகையாகத்தான் இருக்கும்  அதுவும்,  ஒரே இடத்தில் இல்லாமல்,  கை  மாறிக்கொண்டே இருக்கும். இதற்கு  நமக்கு மிகவும் உதவுபவர்கள், நம் தாய்க்குலங்கள் தான். அதிலும் குறிப்பாக நம்  இஸ்லாமிய சகோதரிகள் தான்.  இவர்களின்   பெருந்தன்மையால்  தான்,  நகைக்கடைகாரர்கள், ஊருக்கு ஊர் புதிய, புதிய கிளைகளையும்,  சிறிய ஊர்களில்  இருக்கிற, பொற்கொல்லர்கள்,  மாடி வீடுகள் கட்டுவதும்,  இளமையை வளைகுடா நாடுகளின் வெப்பத்தில் ஆவியாக்கி, உழைத்து  ஓடாய்  போன கணவன்மார்  தலையில் துண்டு போட்டுக்கொள்வதும்.


நாளை  தேவைக்கு என்று,  நாம் விற்கும் போது  நஷ்டம் அடையாமல் இருக்க,  கவனிக்க வேண்டிய  மிக முக்கியமான விஷயம், தங்கத்தின் மாற்றுதான்.  நமது நாட்டில் கிடைக்கின்ற தங்க நாணயமாக  இருந்தாலும்,  ஹால் மார்க் என்று சொல்லப் படுகிற,  தங்கத்தின் தரத்திற்கு இடப்படுகிற, கேரட் மார்க்  இடப்பட்ட நகைகளாக  இருந்தாலும், அவற்றின் தரத்திற்கு  எந்த கேரண்டியும்  சொல்லமுடியாது.  அரபு நாடுகளில் இருந்து  வருகிற தங்கம்,  அது என்ன உருவில் இருந்தாலும்,  ஹால் மார்க்கில் சொல்லப்பட்டிருக்கிற மாற்று அப்படியே இருக்கும்,  அதே போன்று சிங்கப்பூரில் இருந்து வரும் நகை களும், மாற்று குறையாமல் இருக்கும்.

இன்னொரு விசயத்தையும் தெளிவாக்கி கொள்வது மிக அவசியம், தங்கத்தில், புதியது  பழயது என்பதெல்லாம் இல்லை, உருக்கினால் மாற்று ஏற்கனவே இருந்ததைவிட கூடுமே தவிர குறையாது !!!!!.  வியாபாரிகள் சொல்வதை நம்பாதீர்கள்.

இன்று எல்லா ஊர்களிலேயும் வீட்டுக்கு ஒருவராவது வளைகுடா நாடுகளில் இருப்பார்கள், சில ஊர்களில் ஒவ்வொரு வீட்டிலும் 2, 3 பேர் கூட இருப்பார்கள்.  ஒவ்வொரு முறை ஊர் வரும்போதும், தங்கம் வாங்கிவர தவறுவதே இல்லை.  இவர்கள் வீட்டில் உள்ள பெண்களிடம்  கொடுத்துவிட்டு திரும்ப போய் விடுவார்கள்.  அந்தந்த வீடுகளின்  பொருளாதாரமே இப்பெண்களின் கையில் தான்.  நகை மோகம்  கொண்ட இவர்கள் அடிக்கடி டிசைன் மாற்று கிறேன்  பேர்வழி என்று  நம்பி  பழைய ( ? )நகைகளை கொடுத்து ஏமாறுவது , நாம் மேலே கண்டது  போன்ற நபர்களிடம் தான். 

இப்படிப்பட்டவர்களும்,  மற்றும் பலதரப்பட்ட தேவைகளுக்காக நகை விற்போரும்,  நமது அண்டை  வீட்டிலோ, தெருவிலோ, ஊரிலோ  குடியிருப்பவர்களாக தான் இருப்பார்கள்.  இவர்களிடம் இருந்து தான் வாங்க வேண்டும்.  நகை விற்கிறோம் என்பவர்களின் நகையை, ஒன்றுக்கு இரண்டு பொற்கொல்லர்களிடமொ,  நகைகடைகாரர்களிடமோ ,  நகை விற்க போவதாக சொல்லி விலை கேட்டு,  அவர்கள்  தருவதாக  சொல்லும் விலையை விட, உருப்படிக்கு  ரூ 100, ரூ 200 கூடுதலாக கொடுத்து வாங்குங்கள். நகையின் தோற்றத்தை பொறுத்து இன்னும் சிறிது கூடுதலாக கொடுத்தாலும் கூட உங்களுக்கு நட்டம் வராது.  தயவு செய்து வயிற்றில் அடிப்பது போன்று  விலை கேட்டு வாங்காதீர்கள்.  வயிற்றெரிச்சலுக்கு இதில் என்ன  இருக்கிறது என்று நினைக்காதீர்கள், எந்த காரணத்திற்காக  விற்றாலும் யாரும் எதையும் அவசரத்திற்கு விற்கும்போது சந்தோசமாக விற்பதில்லை.  பிற்காலத்தில் செல்வம் சேர்ந்த பிறகு, அதற்கும் உங்களுக்கும் இருக்கிற உறவு,  எப்படியெல்லாம் செல்வம் சேர்த்தீர்கள் என்பதை  பொறுத்து தான் இருக்கும், இதை வார்த்தைகளால்  விளக்க முடியாது, அனுபவத்தில் தான் விளங்கமுடியும் .

மைக்ரோ சாப்டின் நிறுவனர் பில் கேட்ஸ்,  உலகின்  முதல் பணக்காரர்,  நீங்கள் உங்களுடைய செல்வத்தை  பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்ட  போது,  நான் ஏன் இவ்வளவு பணம் சம்பதிதேனோ ?.  என்று நினைப்பதாக  சொல்கிறார்.   காரணம்  ஆரம்ப  காலத்தில் எத்தனை தொழில் போட்டியாளர்களை நசுக்கி இருப்பார் ?. நசுக்க வேண்டும் என்றல்ல, தொழில் திறமை என்று வைத்துக்கொள்ளுங்களேன்!!!. இத்துணைக்கும்  பலகோடி டாலர்களை தான தருமங்களுக்கு அள்ளி இறைக்கிறார், அவரையொத்த  பணக்காரர்கள்  பலரை தூண்டி, அவரவர் வாழ்நாளில்  சம்பாதித்த  சொத்துக்களில்  முக்கால் வாசிக்கும்  மேல் தருமத்திற்கு எழுதிகொடுக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பிற்காலத்தில் நாமும் கூட இப்படிப்பட்ட தரும  சிந்தை உடையவராகும்  வாய்ப்பை, இறைவன் நாடினால், அடையலாம். 

தங்க நாணயங்களையும் இவ்வாறே,  நடப்பு சந்தை  விலையில்  இருந்து  5 % அளவில் குறைத்து வாங்கலாம்.

எதிர்பாரா, அவசர  தேவைகள்  என்பதாக ஒரு விஷயத்தை சொல்லி, தொட்டு விட்டு,  விட்டு விட்டோம், இதில் வைத்திய  செலவுகள்,  வாகனம் இருந்தால் பராமரிப்பு செலவுகள், கல்யாண சீர் செனத்தி  இன்னும் இதுபோன்ற செலவுகள். இதற்காக,  நமது  3 லிருந்து 5 மாத செலவு தொகையை ஒதுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.  இதற்கென்று ஒரு சிறு தொகையை மாதா மாதம்  ஒதுக்கு பவர்கள்,  இத்தொகை தங்கமாக இருக்கும் பட்சத்தில் வேறொரு லாபம் இருக்கிறது  பின்னால் அதுபற்றி  பார்க்கலாம்.

இன்னும் அடுத்தடுத்த  தொடர்களில்  மற்ற முதலீடு முறைகளை பற்றி பார்த்து கொண்டே, நம் இலக்கை அடைய சிறந்த முறையையும் இறைவன் நாடினால் தொடர்ந்து பார்க்கலாம்........       


  

1 comment:

  1. அடுத்தவேளை கஞ்சிக்கு வழியில்லாதவர்களின் இது பயன்படுமா...????

    ReplyDelete

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........