Thursday, April 10, 2014

எம்.பி. மாமா அவர்களுடன் சில நாட்கள் .........., சில நினைவுகள்

எண்பதுகளில் என்று  நினைவு,  மக்கள் எல்லாம் திரைகடல் ஓடி திரவியம் தேட வாகான இடமாக  தேர்ந்தெடுத்து  படையெடுத்துக் கொண்டிருந்தது  வளைகுடா நாடுகள் தான்.  சவுதி அரேபியாவிற்கு  என்றால்  முன்னுரிமை.  தமிழகத்தின்  ஊர்கள்  தோறும் ஏஜெண்டுகள்.  நல்லவர்கள் பலர்,  ஏமாற்றுவோரும் எண்ணிக்கையில்  குறைவல்ல என்றிருந்த நேரம். முகம் தெரியாத  ஆளிடம்  பணத்தையும் பாஸ் போர்டையும் கொடுப்பதை விட தெரிந்தவர் யாராவது இருந்தால் கொடுக்கலாமே என்று எண்ணிக்கொண்டே நாட்களையும். மாதங்களையும் ஓட்டிக்கொண்டிருதேன்.
            அக்கால கட்டத்தில் சென்னையில் வேலை என்றால் நமதூர் காரர்களுக்கு பெரும்பாலும் அகமது கம்பனி  அல்லது நைனா கம்பனி தான்,   பெரிய அளவில்  உணவும், தங்க இடமும் கொடுத்து வேலையும்  நல்ல  சம்பளமும்  தருவார்கள்.   வருடத்தில்  15, 20 நாள்   வருட விடுப்பும் தருவார்கள்.  அதிலும்  சிறிது  படித்தவர்கள்  என்றால்  நைனா கம்பனிதான்  சரியாக  மாலை ஐந்து  மணியுடன்  வேலை முடிந்துவிடும்.  அந்தக்காலத்திலேயே  வருடக்கடைசியில்,  சம்பளத்திற்கு  ஏற்றார்போல்  போனசும் தருவார்கள்.  விடுப்பில் ஊருக்கு வருபவர்கள் புதிய வெள்ளைக்கைலி, சட்டை சகிதமாக வந்திரங்குவார்கள் கைலி  பழுக்கும் நேரத்தில்  சென்னை திரும்பிவிடுவார்கள்.   நானும்  நெய்னா  கம்பனியில்  காலம் கனியட்டும் என்று வேலை செய்து கொண்டு  வருடாந்திர விடுப்பிற்காக,  வெள்ளை கைலி, சன்லைட் சோப்பு சகிதமாக அதிரை வந்திறங்கினேன்.  என்னுடனே  பக்கத்துக்கு வீட்டுகாரர் ஒருவரும்  வந்தார். பேச்சுவாக்கில்,  தான் வெளி நாடு செல்ல பம்பாய்                                   செல்லப்போவதாகவும்  அன்று இரவே புறப்படுவதாகவும் சொன்னார். இரண்டு நாட்கள் கழித்து ஊரிலேயே அவரை பார்த்தேன், என்ன ஆச்சு பம்பாய் போகவில்லையா ?. என்று  கேட்டேன்.  போய் வந்தேன்,  வேலை முடிந்துவிட்டது இன்னும் இரண்டு நாட்களில் பயணம்  என்று சொன்னார்.  என்னால் நம்பவே முடியவில்லை.   அவனவன் ஆயிரக்கணக்கில் பணத்தையும், அட்டையையும் கொடுத்துவிட்டு மாசக்கணக்கில் காததுக்கிடக்கிறான்,  இவ்வளவு விரைவில் இவருக்கு எப்படி வேலை முடிந்தது என்று எண்ணிக்கொண்டே,  ஏஜண்ட்  யார் என்று கேட்டேன், எம்.பி.முகம்மது,  மாமா என்றுதான் எல்லோரும் சொல்வார்கள் என்று சொல்லி அட்ரஸ் கொடுத்தார்.   நானும் பம்பாய் செல்வதென்று  முடிவெடுத்தேன்.

                    நமதூரில்  இன்றும் கூட ஒரு வியாபாரம் தொடங்கப்போகிறேன், பணம் கடனாக தாருங்கள் என்று,  உதவும் நல்ல உள்ளம் படைத்தவர்களிடம்   உதவி கேட்டால்  கிடைக்காது,  வெளிநாடு போகப்போகிறேன் என்றால் உடனே கிடைக்கும்.  பணமாக இல்லாவிட்டாலும்,   நகை இருக்கிறது என்று தருவார்கள். எனக்கும் ஒரு தாய் மனம் கொண்ட ஒரு  சகோதரி  நகை தந்து உதவினார்கள். இன்னும் சொல்லப்போனால் நான் கேட்கவே இல்லை,  என் நிலைமை தெரிந்து,  ஏன் ஊரிலேயே இருந்தால் உங்கள் பொறுப்புக்களை நிறைவேற்றமுடியுமா ?  வெளிநாடு  செல்ல வேண்டியதுதானே என்று கேட்டார்கள்.  பணம் நிறைய தேவைபடுகிறது,  என்னிடம் அந்த அளவு பணம் இல்லையே  என்று சொன்னதற்கு , அப்படி சொல்லாதீர்கள் "அலலாஹ் இருக்கிறான்"   என்று சொல்லி தானே தந்தார்கள்,  வல்ல நாயன் அந்த சகோதரிக்கு ஈருலகிலும் அளப்பரிய தன நற்பேறுகளை வழங்குவானாக  ஆமீன்.  இப்படி ஈர நெஞ்சம் படைத்தவர்கள் அதிரையின் தெருவெல்லாம் நிறைந்திருந்ததால்  தான் அலலாஹ் அவர்களின் மனம் போல்,  அதிரையின் மண்ணையும் ஈரமாக்கி வைத்திருந்தான்,  பத்தடி ஆழத்தில்  நீர் சுரந்தது!!!!!!!.  இன்று ?.......  ,   ஒரு பெரியார்,  தான் வழக்கமாக சவாரி செய்யும்  குதிரை   இடக்கு செய்தால்,  தம்மில் இன்று என்ன தவறு நேர்ந்தது என்று அன்றய செயல்களை சிந்தித்து பார்ப்பார்களாம்,  நாம் எப்படி இருக்கிரோம்?.....அவர்களிடையே இருந்த அதே அல்லாஹ்வுடைய கலாமும்,  நபிகளாரின் வழிமுறையும் நம்மிடமும் இருக்கிறதே?.....  எங்கே தவறு செய்தோம்?....... இடம்மாற்றி மனதில் இருந்ததை  பரணியில்  ஏற்றிவிட்டோமா?.......சிந்தனை செய்வோம். அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் போதுமானவன்.

                  பம்பாய் விக்டோரியா டெர்மினஸ்ல்  வந்திறங்கி  பைதோனி என்று சொல்லக்கூடிய இடத்திற்கு செல்வதற்கு பட்டபாட்டில் தான்  தி. மு. க. காரர்கள் தமிழர்கலுக்கு செய்த துரோகம் தெரிந்தது.  இந்தியாவில் தமிழ் நாடு  தவிற,   எந்த ஒரு மாநிலத்திலும்  ஹிந்தியோ,  உறுதோ தெரியவில்லை என்றால்  ஒன்றுமே செய்யமுடியாது.  அரைகுறையாக ஹிந்தி தெரிந்தாலும்  இராணுவத்தின் தரைப்படையிலேயாயினும் வசதியற்றவர்களுக்கு வேலை கிடைக்கும்.   தமிழ்,  சென்னை சென்ட்ரலுடன்   விடைபெற்றுக்கொள்ளும்.  தான் ஆட்சியில் அமர சிறுவர்களையும், இளைஞர்களையும் தி. மு. க. கிளப்பிவிட்டு பயன்படுத்திகொண்டது.  பம்பாயில் ஆங்கிலம்  பேச தெரிந்தாலும் பிரயோஜனமில்லை,  காரணம் பதில் எல்லாமே ஹிந்தியில் தான் சொல்வார்கள்.  முஸ்லிம்களுக்கு உர்து மிகவும் அவசியம்  காரணம் அரபிக்கு அடுத்து அதிகமான இஸ்லாமிய நூற்கள் அதில் தான் உள்ளது. எம்.பி.மாமா அவர்களிடம் பணம்,  பாஸ்போர்ட் கொடுத்தாகிவிட்டது. எனக்கு முன்பே,   வெளிநாடு செல்ல மாமா  அவர்களிடம்  வந்திருந்தவர்களிடம் சொல்லி எனக்கு தங்க இடம் ஏற்பாடு செய்ய சொன்னார்கள்.

                           ஐந்து நிமிட நடை தூரத்தில், ஜக்கரியா  மஸ்ஜித் தெருவில் குஜராத் முசாபார்கானாவில்  வார வாடகையில் இடம் கிடைத்தது.  அங்கே ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தான் மதராசிகளுக்கு இடம் தருவார்கள் அல்லது  ஏற்கனவே  தங்கி இருப்பவர்கள் யாராவது  அறிமுகப்படுத்த  வேண்டும்  காரணம்  மதராசிகள் தினமும் குளிப்பார்கள், தண்ணீர் அதிகம் செலவு செய்வார்கள் என்பதுதான்.  தினமும்  சுபுகிற்கு பிறகு  மாமா அவர்கள் வீட்டிற்கு எதிரே உள்ள டீக்கடையில் எல்லோரும் சந்திப்பார்கள்.  எல்லோருக்கும்  டீ கிடைக்கும்,  மாமா அவர்கள் தான் தன் கணக்கில் வாங்கிக்கொடுப்பார்கள்.  ஆங்கில தினசரி ஒன்று வாங்கி முதல் பக்கத்தை மட்டும் பார்ப்பார்கள்.  அங்கேயே  யார்,  யார் எங்கெங்கே போகவேண்டும் என்று சொல்வார்கள்.   தான் அவர்களை எத்தனை மணிக்கு வந்து சந்திப்பேன் என்றும் சொல்வார்கள்,  எல்லோரும் சென்றதும் ஆங்கில தினசரி என் கைக்கு வரும்.  சரியாக ஆங்காங்கே சொன்ன  நேரத்திற்கு  சென்று இண்டர்வியுவிற்கு அழைத்துச செல்வார்கள்.

                        இங்கே நான் கண்ட ஒரு நெருடலான செய்தியை சொல்லித்தான் ஆகவேண்டும்,  எல்லோரும் முதலில் வந்ததும் பணமும், பாஸ்போர்டும் கொடுப்பார்கள்.  அப்பப்ப தன் தேவைகளுக்கு,  செலவிற்கு பணம் வாங்கிக்கொள்ளுவார்கள்,  மாமா அவர்கள் ஒருபோதும் எழுதி வைப்பது கிடையாது.  வேலை முடிந்து  புறப்படும் முன்,  கணக்கு பார்க்கும் போது எவ்வளவுடா நீ வாங்கியிருக்கிறாய் ?  என்று கேட்பார்கள்,  பலர் கொடுத்ததை விட கூடுதலாகவே வாங்கியிருப்பார்கள் ஆனால் மாமா அவர்கள் தரவேண்டியிருக்கிறது என்றே சொல்வார்கள்.  மாமா அவர்கள் காசு மற்றவர்களிடம் சென்றிற்குமே அன்றி,  யாருடைய காசும் அவர்களிடம் இருந்திருக்காது.  கடைசி காலங்களில் பண முறைகேடு செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதாக கேள்விப்பட்டு மனம் மிகவும் வேதனை அடைந்தது.  அவர்கள் தொழில் செய்த காலங்களில்,  மாமா நினைத்திருந்தால் நிறைய சம்பாதித்திருக்கலாம்.  சென்னையில் விசாவிற்கு மற்றவர்கள் பதினைந்தாயிரம் வாங்கிகொண்டிருந்தபோது மாமா அவர்கள் பனிரெண்டாயிரம் தான்  வாங்கினார்கள்.  சில நேரங்களில் தன் செலவிலேயே டாக்சியில் அழைத்துசெல்வார்கள்.   வாழ்ந்து, நொடித்த குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் சிலரை,  கொடுத்த  பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு,  பாக்கியை சம்பாதித்த பின்பு தா என்று சொல்லி அனுப்பிவைத்தத்தையும் கண்டிருக்கிறேன்.  பணத்தை வைத்து விட்டுத்தான்  புறப்பட வேண்டும் என்று யாரையும் சொல்லி நான் காணவில்லை.

                         நானும், சில நண்பர்களும் மாலை நேரங்களில் முகமதலி ரோட்டில் விக்டோரியா டெர்மினஸ் வரை நடை பழக சென்று வருவதுண்டு, அப்படி செல்லும்போது ஒருநாள் ரோட்டோரத்தில் ஒருவன் எங்களை விசிலடித்து அழைத்தான், நண்பர் ஒருவர் என்ன வென்று கேட்டார். அவன் ஒரு ரொலெக்ஸ் வாட்சை காண்பித்து விலைக்கு வேண்டுமா ?. என்று கேட்டான்,  நண்பர் விலை கேட்டார்,  ஆயிரம் ரூபாய் சொன்னான்,  நண்பர் வாங்கப்போவதாக எங்களிடம் சொன்னார்,   நாங்கள் டுப்ளிகட்டாக இருக்கும்  வேண்டாம் என்று சொன்னோம்.  நண்பர் எனக்கு வாட்ச் வாங்கி விற்று பழக்கம் இருக்கிறது அதைப்பற்றி தெரியும்,  அது ஒரிஜினல் தான்.  முன்னூறு ருபாய்க்கு தந்தால் வாங்குவேன் என்று சொல்லி விலைகேட்டார்,  அவனும் சம்மதித்தான்.  பணத்தை பெற்றுககொண்டு வாட்சை பொட்டலம் போட்டுக்கொடுத்தான்.  நண்பர் கையில் கொடு என்று கேட்டார். இல்லை, இல்லை  இது திருட்டு சாமான், போலீஸ் பார்த்தால் உன்னை பிடிக்கும்,  உன் முன்னாடியே மடித்துத்தருகிறேன்  இடையில்  எங்கேயும்  பிரித்துப்பார்காதே  வாங்கிக்கொண்டு  போய் வீட்டில் பிரித்துப்பார்  என்று சொல்லி,  அவர் முன்பாகவே வாட்சை காண்பித்து  பேப்பரில்  மடித்து தந்தான்.  நாங்களும்  திருட்டு  சாமான் என்று  பயந்து கொண்டே ஓட்டமும் நடையுமாக  ரூமுக்கு வந்து சேர்ந்தோம்.  ரூமில் நண்பர் பொட்டலத்தை பிரித்துப்பார்த்து மயங்கி விழுந்தார். பொட்டலத்தில் இருந்தது வெறும் களிமண் கட்டி.

                       மாமாவுடன்  சில இண்டர்வியுவ்களுக்கு சென்றேன், ஒன்றும் சரியாக அமையவில்லை.  எனக்கு தெரிந்த  வேறு ஆளிடம்  கொடுக்கலாம்  என்று  சொல்லி, மாமா  அவர்களே    வேறு  ஆளிடம்  கொடுத்தார்கள்,   இன்று  நாளை  என்று சொல்லியே  ஐந்து  மாதங்களை  ஓட்டிவிட்டான்.  பணத்தையும்  பாஸ்போர்டையும்  தா என்று  கேட்டாலும், தர மாட்டேன்  என்கிறான்.  ஒரு வழியாக  பாஸ்போர்ட்டையும்  பணத்தையும்  பிடுங்கி ( ? )  ஆகியாகிவிட்டது  ( இது  ஒரு  தனிக்கதை ).   ஒரு வழியாக  மீண்டும்  மாமா  அவர்களுடன்  பல கம்பனிகளுக்கு  படையெடுப்பு,  எனக்கு  முன்பே  வந்தவர்கள்  சிலர் புறப்பட்டும்  போனார்கள்.  கடைசியாக  ஒருநாள்  சொடஸ்கோ என்ற கம்பனிக்கு  ஆள்  எடுக்கிறார்கள்,  படித்த  ஆள் வேண்டும்  என்கிறார்கள் என்று சொல்லி  அழைத்து  சென்றார்கள்.  

                           இரெண்டொரு  மாதங்கள் தான்  குஜராத் முஸாபர் கானாவில் தங்கியிருந்தேன்,  அதற்குமேல்  தங்க  பொருளாதாரம்  இடந்தரவில்லை.   செம்பூர்  தாண்டி  ஒரு ஏரியாவில் சில நண்பர்களுடன் தங்கியிருந்தேன்.  தினமும்  காலையில்  அங்கிருந்து  ரயிலில்  வருவேன்.   அங்கிருந்து  பைதோனி வர சரியாக  ஒரு மணி நேரமாகும்.  ரயிலில்  நான் இருந்த ஏரியாவில்  இருந்து  நகருக்கு  வேலைக்கு வருபவர்கள் கூட்டம் கடுமையாக இருக்கும். உட்கார இடம் கிடைக்காது,  எல்லோரும்  சீட்டுக்கட்டு  வைத்திருப்பார்கள், ஆங்காங்கே  நிற்பவர்கள்  நான்கு நான்கு பேராக நின்றுகொண்டே சீட்டு  விளையாடுவார்கள்,  தத்தமது  ஸ்டெசன வந்ததும்  கலைந்து சென்று விடுவார்கள். தெரிந்தவர்களாக  இருக்க  வேண்டும் என்ற அவசியம் இல்லை,  சீட்டாட தெரிந்தால் போதும்.  அடிக்கடி கை தட்டி கூப்பிடுவது போன்ற  சத்தம் கேட்கும்,  யாரும் யாரையும் கூப்பிடுவது இல்லை அது,   தம்பாக்கு போடக்கூடியவர்கள், புகையிலையும் சுண்ணாம்பையும் உள்ளங்கையில்  வைத்து,  மற்றொரு கையின் பெருவிரலால் கசக்கி, கசக்கி  தூசி தட்டுவது போல் தட்டும்போது வரும் சத்தம் தான் அது,  எனக்கு  சீட்டாடவும் தெரியாது, தம்பாக்கு பழக்கமும்  கிடையாது.  நேரம்  போக வேண்டுமே என்று ஆங்கில நாவல் வாடகைக்கு  எடுத்து,  ரயிலில்  போகும் போதும் வரும் போதும் படித்துக்கொண்டிருப்பேன். 

                              எனக்கு முன்பு இண்டர்வியு சென்றவர்கள், அங்கே என்ன படித்திருக்கிறாய் ?  இங்லீஷ்  பேச தெரியுமா? போன்ற கேள்விகளை கேட்டதாக சொன்னார்கள்.  நானும்  கையில்  நாவல் சகிதமாக உள்ளே போனேன்,   இண்டர்வியு  செய்பவர்  என்னை  மேலிருந்து கீழாக  ஒரு முறை பார்த்து விட்டு,  நீ  என்ன வேலைக்கு  போகிறாய் தெரியுமா?  என்றார்.   கிளீனர்  வேலைக்கு  போகிறேன் என்றேன்,  உன்னை சமயத்தில்  கக்கூஸ்  கழுவவும் சொல்வார்கள்,  நீ  முடியாது என்று சொல்லி திரும்பி வந்தால் உன் பணம் கிடைக்காது, மறு பணம் கட்டாமல் திரும்ப எங்கேயும்  நாங்கள் உன்னை  அனுப்பி வைக்க மாட்டோம்,  என்று சொன்னார்.  பிறகு  நீ எதுவும் கேட்க விரும்புகிறாயா? என்றார்.  நான்  எந்த வேலையும் செய்யத்தயார், சம்பளத்தை குறைத்தால் என்ன செய்வது ?  என்றேன்.  நிச்சயமாக அப்படி ஒன்றும் நடக்காது என்றார். உடனேயே  மெடிகலுக்கு சீட்டு தந்தார்.  அவர்  சொன்னது போலவே சம்பளத்தை  குறைக்கவில்லை,  ஆனால்   ஒரு மூன்று மாதம் கக்கூஸ்  கழுவினேன்,   கிட்டத்தட்ட  எட்டு ஆண்டுகள் அந்த கம்பனியில் வேலை பார்த்தேன்,  அதில் எண்ணிப்பார்த்தால்  அந்த மூன்று மாதங்கள் தான் நான் மிக மிக  சந்தோசமாக இருந்த நாட்கள்.
                              
                               மெடிக்கல் முடித்து வந்து மாமா அவர்களிடம் சொன்னேன்,   அவர்கள்  நான்  மூன்று  நாட்களுக்காக  அமா டிராவல்ஸ்  ஆட்களை  அனுப்பிவைக்க சென்னை செல்லுகிறேன், நான் பாஸ்போர்ட்  பணமெல்லாம் கொடுத்து விட்டேன், நான் திரும்பி வரும்போது உங்களுக்கு எல்லா வேலையும் முடிந்துவிடும்  பாக்கி  பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லி சென்றார்கள்.  மூன்றாம் நாள் மெடிகல் ரிசல்ட் வந்தது, வாங்கி கொண்டுபோய்  டிராவல்ஸில் கொடுத்தேன்.  மேஜையில்  மூன்றெ  பாஸ்போர்ட் இருந்தது அதில் ஒன்று என்னுடையது, பணம்  ஐயாயிரம் கொடு என்று கேட்டார்கள் ,  நான்  முகமது மாமாவிடம் கொடுத்துள்ளேன் என்று சொன்னேன்.   இப்ப  பணம் தந்தால்  விசா  இன்றே அடிப்பேன்,  நாளை மறுநாள் பயணம் என்றார்கள்.  என்னிடம் பணம் இல்லை என்றதும்,  வேறு பாஸ்போர்டை வைத்து  என் முன்னேயே  விசா அடிக்க அனுப்பிவிட்டார்கள். நான் மனமுடைந்து வீடு சென்று விட்டேன்.

                            மூன்று நாள் கழித்து  மாமா வந்தார்கள்,  வழக்கம் போல் சந்திக்க சென்றேன், பார்த்தவுடன் விசா அடிச்சாச்சா ?,   என்று  கேட்டார்கள்.  நடந்த விவரங்களை சொன்னேன்.  ஊர்  பாணியில் வசைமாறி  பொழிந்தார்கள்,  என்னோடு வாங்க  கேட்கலாம் என்று சொல்லி அழைத்துசென்றார்கள்.  என்னை வெளியே நிற்க சொல்லிவிட்டு  உள்ளே சென்று பத்து நிமிடங்கள் கழித்து  திட்டிக்கொண்டே  வெளியே வந்தார்கள்.  என்னிடம்,  என் காசை  வச்சுக்கிட்டே இப்படி பண்ணி விட்டான்,  சரி  நீங்க ஒன்னு  செய்யிங்க, அமா டிராவல்சுக்கு லெட்டர் தர்றேன் உடனே போங்க உங்களை டாலி கிளார்க் வேலைக்கு எடுப்பார்கள் என்று சொன்னார்கள்.  நான் ஒன்றும் சொல்லாமல் நின்றேன்.  என்ன பதில் சொல்லாமல் நிற்கிறீர்கள் என்றார்கள்.   நான் சொன்னேன்,  மாமா  நான் இங்கு வந்து ஆறு மாதமாகிவிட்டது,  நகையை  அடகு வைத்து  பணம் கொண்டுவந்தேன்  வட்டியும், செலவு செய்த காசும் நட்டம், ஆறு  மாதம் வேலையையும் விட்டு விட்டேன் அதுவும் நட்டம், அல்லாஹ் வுடைய  நாட்டம் இல்லை போலிருக்கிறது, தயை செய்து  நான்  செலவுக்கு வாங்கியது போக எவ்வளவு இருக்கிறதோ அதையும் பாஸ்போர்டையும்  தந்து விடுங்கள், நான் ஊர் போகிறேன், என் நசீபுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள் யாரிடமும் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்றேன். இது தான் உங்கள் முடிவா?. என்று கேட்டார்கள்.  ஆம்  என்றேன். சிறிது நேர  மவுனத்திற்கு பிறகு, எனக்கு இன்னும் மூன்று நாள் டயம் தருகிறீர்களா? என்று கேட்டார்கள்.  நான்  ஆறு மாதம் இருந்துவிட்டேன் இன்னும் மூன்று நாள் பெரிதல்ல,  ஆனால் மூன்று நாளில் ஒன்றும் ஆகாவிட்டால், நான் சொன்ன மாதிரி தயைசெய்து செய்துவிடுங்கள் என்று சொல்லி சென்றுவிட்டேன்.

                                 மூன்று நாட்கள் அவர்களிடம் தலையையே காட்டவில்லை, மறுநாள் வழக்கம் போல் பார்க்கச்சென்றேன்.  உங்களுக்கு  அதே கம்பெனிக்கு விசா அடிச்சாச்சு பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார்கள்.  எல்லோரும் போனபிறகு, மாமா  விசாவை பார்க்க முடியுமா? என்று கேட்டேன்,  என்னை நம்பவில்லையா? என்று கேட்டார்கள்.  நான் பட்ட பாட்டில் என்னையே என்னால் நம்ப முடியவில்லை, மன்னித்துக்கொள்ளுங்கள் என்றேன். சரி என்று கூட்டிக்கொண்டு போய் காண்பித்தார்கள். அட்டையில்  விசா இருந்தது. வெளியே வந்ததும் மாமா விசா காப்பி வாங்கி தாருங்கள் என்றேன். விசா காப்பியை  அவிச்சா திங்கப்போகிறீர்கள், இந்த கம்பெனி,  பெரிய கம்பெனி விசா காப்பி எல்லாம் தரமாட்டார்கள் என்று சொன்னார்கள். அவர்களுக்கு  போக்குக்காட்டிவிட்டு, அவர்கள் போனதும்  நான் கம்பெனிக்குள் சென்றேன். என்னை  இண்டர்வியு  செய்தவர்  இருந்தார்  அவரிடம்  விசா காப்பி வேண்டும் என்றேன்,  அவரும் மாமா மாதிரியே கேட்டார்.  நான் சொன்னேன்,  பணம் கடன் தான் வாங்க வேண்டும், விசா காப்பியை காண்பித்தால் தான் என்னை  நம்புவார்கள் என்றேன். அவர் மறு பேச்சு பேசாமல்,  யாரிடமும் காண்பிக்காமல் காப்பி எடுத்துக்கொண்டு  வா என்று சொல்லி ஒரு கவரில் போட்டு  விசா அடித்த பாஸ்போர்ட்டை தந்தார். காப்பி எடுத்துக்கொண்டு  திருப்பிக்கொடுத்தேன்.        

                                   இன்றும், மாதக்கணக்கில்  முடியாததை, மூன்றெ நாட்களில் எப்படி முடித்தார்கள் என்று எண்ணிஎண்ணி வியக்கிறேன். எத்துனை மனிதர்களுக்கு  இதுபோன்று உதவி செய்தார்கள? அல்லாஹ் அவர்களுடைய ஆஹிரத்துடைய  வாழ்கையை  சிறப்பாக்கி வைக்கட்டும்.     
                      

                     

 

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........