Thursday, June 25, 2015

சொத்து சேர்க்கலாம் வாருங்கள் - 4

 நம்ம அன்றாடம் காய்ச்சியிலிருந்து, அரசாங்க அலுவலர் வரை தினமும் நமது நேரத்தையும், உழைப்பையும்  கொடுத்து, பிரதியாக பணத்தை சம்பளமாக பெற்றுக்கொள்கிறோம்.  நம் குழந்தைகளுக்கும் கூட, உழைப்பின் மேன்மையை சொல்லிக்கொடுக்கிறோம்.  ஒரு காலத்தில்,  முன்னேறுவதற்கான ஒரே வழி  வொர்க் ஹார்ட் என்பதாக சொல்வார்கள், ஆனால் இன்றைக்கு  வொர்க்  ஸ்மார்ட் என்பதாக சொல்கிறார்கள்.  இன்றைய கால கட்டத்தில்  ஸ்மார்ட்டாக, புத்திசாலி தனமாக செயல் பட்டால்தான்  முன்னேற  முடியும், நம் இலக்கை அடையமுடியும்.  நாம்  பணத்திற்காக   உழைப்பது  மட்டுமின்றி, சிறுக, சிறுக சேமித்த  நம் சேமிப்பையும்,  நமக்காக உழைக்க  வைக்க  வேண்டும்.  வசதியானவர்களை  கேட்டால்  அவர்களுடைய  பணம் அவர்களுக்கு உழைப்பதை  சொல்லுவார்கள்.
           வருவாயில் 10% லிருந்து  20% வரை ஆக குறைவாக  சேமிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தோம். பெரிய வருமானக்காரர்களை  பொருத்தவரையில்  1 வருடத்திற்குள்ளேயே கூட,  ஒரு நல்ல தொகையை சேர்த்து கொள்ள முடியும்.  அதனை  இடங்கள், நிலங்கள்  வாங்குவது.  இடமிருந்தால், வாடகைக்கு கட்டிடங்கள் கட்டி விடுவது போன்று செய்து, பண வரவுகளை கூட்டி, அவைகளை முதலீடு செய்யலாம்.  இது  போன்ற  பெரிய முதலீடுகள்  செய்ய இயலாத நடுத்தர மற்றும்  சிறிய வருமானம் உடையோரும்  எப்படியெல்லாம்  சேமிப்பை முதலீடு செய்யலாம்  என்பது பற்றியதுதான்  இந்த தொடரே.
           சிறிய  வருமானக்காரர்களாய் இருந்தாலும் சரி, பெரிய வருமானக்காரர்களானும் சரி,  சேமிப்பை முதலீடு செய்யவேண்டும், அப்பொழுது தான்  சேமிப்பு வளரும். பேங்கில்  நிரந்தர வைப்பு நிதியில் வைத்தாலும், வளர்வது போல் தெரிந்தாலும், வளர்வதில்லை. நிதி முதிர்வு காலத்தில் வட்டியுடன் கிடைக்கும்  பணத்தைதைக்கொண்டு எதாவது பொருள் வாங்கப்போகும் போது, வைப்பு நிதி தொடங்கும்  போது  இருந்த விலையையும், தற்போது உள்ள விலையையும்  ஒப்பிட்டு பார்க்கும் போது தான் தெரியும். 
          நம் வீட்டு பெரியவர்கள்   " அந்த "  காலத்தை பற்றி சொல்லி கேள்விப்பட்டு இருப்போம்.  10 ரூபாயை கொண்டுபோய் பை நிறைய சாமான் வாங்கி வந்ததை பற்றி.  நம் காலத்தையே எடுத்துக்கொண்டாலும், 10 15 வருடத்திற்கு முன்பு 50 பைசாவிற்கு  விற்ற  டீ  இன்று ரூபாய்  7.  பலகாரம்   75 பைசாவிற்கு  விற்றது  ரூ 7, ரூ 8. எனக்கு தெரிய பவுன்(8 கிராம் ) ரூ 2,000 துக்கு விற்று இருக்கிறது.  இது நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்கும்.
           செய்தித்தாள்களில்  வர்த்தக பக்கத்தை  புரட்டினால் அதில் பணவீக்கம் என்று பேசப்படுவதை  பார்க்கலாம். பணவீக்கம் இல்லையென்றால் பொருளாதாரம் சுழலாது, மிகவும் கூடினால் விலை வாசி  தாறுமாறாய் போய்விடும்.  அரசாங்கங்கள்  இதனை  5% க்கு மேல் போக விடாமல் இருக்க முயற்சிக்கின்றன.  மேலை நாடுகளில், 3% 4% ஆக இருக்கிறது. நமது நாட்டில் தற்பொழுது  8% ஆக இருக்கிறது, சில நேரங்களில் 12% வரை சென்று இருக்கிறது.
           இந்த பணவீக்கம் நம்மை என்ன செய்யும் ?   எத்தனை சதவீதமாக இருக்கிறதோ, அத்தனை சதவீதம் நம் பணத்தின் வாங்கும் சக்தி, வருடா வருடம் குறைந்து  கொண்டே  போகும். உதாரணத்திற்கு  இன்று  நாம் ரூ 1,000 த்திற்கு  அயர்ன் பாக்ஸ் ஒன்று  வாங்குவதாக வைத்து கொள்ளுங்கள்,  அதே அயர்ன் பாக்சை  5 வருடங்கழித்து வாங்கச்சென்றால், கிட்டத்தட்ட
ரூ 1,320  கொடுக்க வேண்டி இருக்கும் (அதுவும் பணவீக்கம் 8%ஆகஇருந்தால் ). இந்த கூடுதல்  ரூ 320 ஐ  விலைவாசி கூடுதல் என்றும் சொல்லலாம் அல்லது  ரூ 1,000 த்தின் வாங்கும் சக்தி  மதிப்பு   ரூ 320  குறைந்து விட்டது என்றும் சொல்லலாம்.
           நம்முடைய சேமிப்பு பணத்தை அப்படியே கையில் வைத்திருந்தால்  ஐந்து வருடம் கழித்து, பணம் என்னவோ அது அப்படியே இருக்கும் ஆனால், அதனுடைய வாங்கும்  சக்தி குறைந்து விடும்.  அதனால் தான் நாம், நம் பணத்தை முதலீடு செய்யும் பொது, அதிலிருந்து கிடைக்கும் வருவாய்  பணவீக்கத்தை விட, இரண்டு மடங்குக்கு மேல் வருமாறு பார்த்து  முதலீடு செய்ய வேண்டும்.  இன்றைக்கு உள்ள பெரும்பாலான பொருளாதார வல்லுனர்கள், அப்படிப்பட்ட வருமானம், பங்கு சந்தையில் முதலீடு செய்வதில் இருந்து தான் கிடைக்கும் என்பதாக சொல்கிறார்கள்.
            நாமும்  பெரும்பாலும் ஷேர் மார்க்கட்டில் முதலீடு செய்வதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.  இதுதான்  புதிதென்று இல்லாமல் எத்துணையோ தளங்கள் ஏற்கனவே  இருக்கின்றன.  இந்த தளத்தில் சேமிப்பை முதலீடு செய்து சொத்து சேர்ப்பது எப்படி என்பதற்கான விவரங்கள்  என்னவெல்லாம்  ஒரு முதலீட்டாளருக்கு  தேவையோ  அவைகளை பற்றி பார்க்கலாம்.
            
         இதில் நான் பல ஆண்டுகளாக, கூடுதலான ,  கல்விக்கட்டணம்  கொடுத்து படித்தவைகளையும். இன்று இத்துறையிலே  ஜாம்பவானகளாய் இருப்பவர்களின், வாய் மொழிகளையும் திரட்டித் தர முயல்கிறேன்
..
இறைவன் நாடினால் மீண்டும் தொடர்வோம்.........

                  

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........