Sunday, June 21, 2015

சொத்து சேர்க்கலாம் வாருங்கள் - 3

இரண்டு தொடர்களாக,   எப்படி எல்லாம் சேமிப்பது  என்பது பற்றி பார்த்துக்கொண்டிருக்கிறோம்.  சொத்து சேர்ப்பதை  நம் இலக்காக கொண்டிருக்கிற  நாம்.  நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை  ஏற்படுத்திக்கொண்டு, முன் யோசனையுடன்  செயல்பட்டால் மட்டுமே  எளிதில் நம்  இலக்கை  அடைய முடியும் . கையில் சேர்த்த பணம் ரூ 10,000 மோ, ரூ 20,000 மோ,  வைத்துக்கொண்டு, பேங்கில் நகை கடனோ,  வட்டி செலுத்துகிற  கடனோ  இருந்தால், நம்முடைய  முழு முயற்சியுமே  அர்த்தமற்ற தாகிவிடும்.  முதலில் செய்யவேண்டியது கடனை அடைப்பது தான். சிறிய உதாரணத்துடன் பார்த்தால் எளிதில் காரணம் விளங்கும்.
             பேங்கில் நகையை அடமானமாக கொடுத்து கடன்  வாங்கினால்,  9 %  வட்டி என்றாலும்,  வருடத்திற்கு ரூ 20,000 திற்கு வட்டி மட்டும்  ரூ 1845 கொடுக்க வேண்டி வரும்.  அதே நேரத்தில்  நம் பணம் அவர்களிடம் இருந்தால்  வெறும் ரூ 1000 மட்டுமே வட்டியாக தருவார்கள்..
               பேங்குகளில்  பொதுவாக  இத்தனை வட்டி என்று சொல்லும் போது  அது வருட வட்டியை தான் குறிக்கும்.  பேங்கை பொறுத்து, மூன்று மாதத்திற்கு  ஒருமுறையோ,  ஆறு மாதத்திற்கு  ஒருமுறையோ தான் வட்டியை முதலுடன் சேர்த்து கணக்கிடுவார்கள்.  இதையாவது  ஒரு வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.
                  இன்னும் மிகப்பெரிய மோசடி அடகுக்கடை, கந்து வட்டிக்காரர்கள் போன்ற தனியாரிடம் கடன் வாங்கும் போது தான் நடக்கும்.  இவர்கள்  சொல்லும்  2 வட்டி, 3 வட்டி என்பது  மாதாந்திர  வட்டி விகிதத்தை  குறிக்கும்.  வருட  வட்டி விகிதத்தை  12 ஆல் வகுத்து  2 வட்டி, 3 வட்டி  என்று சொல்லி,  குறைந்த வட்டி விகிதம் என்பது போன்ற பிரமையை உண்டாக்கி ஏமாற்றுகிறார்கள். உண்மையில் அது  24 % , 36% என்பதாகும். ஒரு மாதம் பணம் கட்ட வில்லை என்றால் கூட,  அந்த வட்டியையும்  முதலுடன் சேர்த்து  விடுவார்கள். தொடர்ந்து மாதா மாதம் கட்டினாலும் ரூ 20,000 திற்கு கிட்டத்தட்ட வட்டி மட்டும் ரூ 5,000, ரூ 7,500 ( 2 வட்டி, 3 வட்டிக்கு ) வந்துவிடும்.
                  வருடம் என்பது  கண்மூடி கண் திறப்பதற்குள்  பறந்தோடிவிடும். அனாயசமாக  2, 3, 5 வருடங்கள், கடந்து விடும் போது, கடைசியாக என்ன நடக்கும் என்று நீங்களே  சிந்தித்து பாருங்கள்.  ஏழை, எளியவர், மற்றும் விபரம் அறியா பாமரர்கள் தான் இவர்களால் ஏமாற்றப்பட்டு வாழ்கையை இழக்கிறார்கள்.  இறைவன் தான் நம் எல்லோரையும் இந்த பேராபத்தில்  இருந்து  காப்பாற்ற வேண்டும்.
                   ஏற்கனவே  இதைப்பற்றி  சொல்லியிருக்கிறேன் என்று  நினைக்கிறேன், வருமானத்தை அதிகரிக்க உபரி வருமானத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்பது போன்றே,  இருக்கும் வருவாயில் சிக்கனமாக இருந்து,  செலவினங்களை குறைப்பதும், ஒரு உபரி வருவாயை உண்டாக்கிக்கொள்வது போன்றது தான்.
                    நம் போன்ற  நடுத்தர குடும்பங்களின் சிரமங்களுக்கு மிகப்பெரிய காரணமே, நாம் நமது தகுதிக்கு மீறி செலவு செய்து, நமக்கென்று வாழாமல் பிறர் மெச்ச  வாழ வேண்டும்,  செலவு செய்ய வேண்டும் என்று நினைப்பதுதான்.
                   இன்றைய  கால கட்டத்தில் போனோ  பைக்கோ இல்லாத வீடுகளே இல்லையென்று  சொல்லலாம்.  அதே   செல் போனையும்,  பைக் கையும்  உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.  ஒவ்வொரு  வீட்டிலும் ஆகக் குறைவாக  இரண்டு  செல்போன்களாவது  இருக்கும்.  குறைந்த விலையுள்ள ஒரு  போனின்  விலை ரூ10,000 என்று வைத்துக்கொள்ளுங்கள்,  ஒரு 5 வருடங்கள் உபயோகிப்போமா?. மாதா மாதம்  சந்தா கட்டவேண்டும் ?   ரூ 100 கட்டுவோமா ?. இந்த பணம் நம்மை விட்டு போனது   போனதுதான். 5 வருடம் கழித்து  போனை தலையை சுற்றி வீசப்போகிறோம் அல்லது வேறொரு போன் வாங்குவோம். இதை அப்படியே முதலீடு செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?  ஒரொரு போனுக்கும்  செலவு செய்த தொகை,  5 வருடத்தில் ரூ 27,000 மாகவும், 10 வருடத்தில் ரூ 58,000 மாகவும் ஆகியிருக்கும்.  தத்தமது குடும்பத்தில் எத்தனை  போன் இருக்கிறது என்று  ஒரு சின்ன கணக்கு போட்டு,  எவ்வளவு மாதா, மாதம் செலவாகிறது என்று சிந்தித்து பாருங்கள்.
                    பைக்கை  எடுத்து கொண்டால்  பல்வேறு மாடல்கள்,  ரூ 50,000 திலிருந்து, ரூ 1,25,000 வரை இருக்கிறது. ரூ 75,000 திற்கு பைக் வாங்குவதாக வைத்துக்கொள்ளுங்கள்.
ரூ 10,000  டவுன்  கட்டுவதாக வைத்துக்கொள்ளுங்கள்.  மாதா, மாதம் ரூ 2400 வீதம்  5 வருடத்திற்கு  கட்டவேண்டியிருக்கும். சராசரியாக  ஒரு வண்டி லிட்டருக்கு 45 கி.மீ கொடுப்பதாக எடுத்துக்கொண்டால்,
ரூ 60 விலையில், கி.மீ க்கு  ரூ 1.33  பெட்ரோலுக்கு செலவாகும்.  தினம் சராசரியாக 50 கி.மீ  வண்டி ஓட்டினால்,   நாள்  ஒன்றிற்கு   பெட்ரோல் செலவு ரூ 66.50 வரும். இதற்கு மேல் இன்சூரன்சு இருக்கிறது, வருசத்திற்கு  ரூ 1000 என்றாலும், 5 வருசத்திற்கு  ரூ 5,000  ஆகிறது.  இதே தொகையை முதலீடு செய்திருந்தால், 5 வருட முடிவில் உங்களுக்கு கிடைத்திருக்ககூடிய  தொகை எவ்வளவு தெரியுமா ?. கிட்டத்தட்ட  ரூ  ( 2,13,091 + 1,61,528 + 6,801 = 3,81,420 ). இதில் 5 வருட முடிவில்  பைக்கை விற்றால் கிடைக்க கூடியது  ரூ 20000 இருக்குமா?.  பைக் வாங்கியதில் நட்டம் ரூ 3,61,420. இதில், உங்கள் உழைப்பில் வந்த  பணத்தில்  எரித்து கரியாக்கியது மட்டும்  ரூ 1,61,528.
                 இதில் போன் அல்லது  பைக்  வாங்குவதை சரியென்றோ, தப்பென்றோ சொல்லவரவில்லை.  அவரவர் சூழ்நிலைக்கும், வசதிக்கும், தேவைக்கும்  ஏற்ப வாங்கி கொள்கிறோம். எப்படியெல்லாம் நம் உழைப்பு விரையமாகிறது,  உழைக்கின்ற காலத்தில்  சரியான   திட்டமிடல் இல்லாவிட்டால்,  ஒய்வு கால வாழ்கையும், நம்  குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கையும் பாதிக்கபடகூடும் என்பதை  சொல்லிக்காட்டத்தான்.
                 தெருக்கோடியிலே  இருக்கிற காக்கா கடையிலேயோ,  நாடார்   கடையிலேயோ  சில்லரையாக  மளிகை சாமான் வாங்குவதை விட்டு,  சிறிது சோம்பல் படாமல், மொத்தக்கடையில் வாங்கினால்  25% இல் இருந்து 30% மிச்சப்படுத்தலாம். மாதத்திற்கு மளிகை சாமானில் மட்டும் ரூ 150, 200 மிஞ்சி, அதை சேமித்தால் எவ்வளவாகும். யோசனை  செய்து பாருங்கள்.  ஒரு கவிஞன் சொன்னது போல்,
"தினம் கஞ்சி,கஞ்சி என்றால் பானை நிறையாது, சிந்தித்து முன்னேற வேண்டுமடி " என்று .  எது செய்தாலும் சிந்தித்து செயல் படுவது மிக சிறப்பை கொடுக்கும்.
               கையில்  பணம் வைத்திருக்கும் சிலருக்கு  இதை படித்ததும்,  நாமும் வட்டி தொழில் செய்தால்  என்ன என்று தோன்றும்,  நண்பர்களே  அந்த எண்ணத்தை தயவு செய்து  விடுங்கள், அதை போன்ற தொரு கொடுமையான தொழில் ஒன்றும் இல்லை, பல பேருடைய  வாயிற்று எரிச்சலை கொட்டிக்கொள்ள வேண்டியிருக்கும்.  வட்டிக்கு விடுபவர் வீடுகளில் பாருங்கள்,  ஒவ்வொரு  வீட்டிலும் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் நிச்சயம் இருப்பார்.  அவரை பெற்றவர்களின்  வேதனையை  எண்ணிப்பாருங்கள், அவர்கள் சாகும் வரை வேதனை அவர்களை விட்டு  போகாது.  எத்தனையோ  தொழில்கள் இருக்கின்றன, குறைவாக சம்பாதித்தாலும்  நிம்மதியாக இருக்கலாம், இறைஅருளும் இருக்கும்.

இறைவன் நாடினால் மீண்டும் தொடர்வோம்.......      



                   

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........