Tuesday, January 19, 2016

ஒய்வு பெற்ற பெருந்தகையீர்.........உங்களைத்தான்

ஒரு காலம் இருந்தது,  பெயரறியாத யாரும் எழுதிவிட முடியாது, அப்படியே எழுதினாலும பிரசுரிக்க முடியாது.  இன்று அப்படியல்ல,   எழுத படிக்க தெரிந்து,  சிறிது ஆங்கில அறிவும் இருந்து விட்டால்,  எழுதி  பிரசுரித்து விடலாம்.  பெரும்பாலான  அரசியல்வாதிகள் கூட  டுவிட்டரிலேயே அரசியல் நடத்துகிறார்கள்.   நம் பெருமை மிகு  பிரதமர் கூட, அறிவிப்புகளை அதிலே தான் செய்கிறார்.

இன்றைக்கு எத்துனை தமிழ் வலைத்தளங்கள், பெருமையாகவும் இருக்கிறது அதே நேரத்தில் மனதில் ஒரு சோகமும் இழையோடுகிறது.  மிக நல்ல மரியாதைக்கு உரிய வேலைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்,  எடுத்துக்கொண்ட  பொருளை பற்றி மிக சிறப்பாக சுவைபட நகைச்சுவை மிளிர   எழுதுகிறார்கள். ஆனால்  படிப்பவர்களுக்கு கிடைக்கின்ற அந்த உடனடி களிப்பை தவிர வேறேதாவது உருப்படியான விளைவைசமுதாய ஏற்றம் சார்ந்த, சமுதாய அக்கறை சார்ந்த மாற்றத்தை உண்டாக்க ஒரு காரணியாக இருந்திருக்குமா என்று கேட்டால்,  நேரமெடுத்து மிக மிக யோசித்து பதில் சொன்னாலும், இல்லை என்றே ஏமாற்றத்துடன் சொல்ல வேண்டி இருக்கும்.`

இன்றைக்கு நாட்டில் படித்தவர் என்று சொல்லிக்கொள்கிற எல்லோருக்குமே,  படிப்பிற்கு முதலிட்டு உதவியோர் மாண்புமிகு பொது ஜனம் தான்.  பலபேர் முன்னேற ஏணியாய் தோள் கொடுத்து இருந்த இடத்திலேயே இருப்பதும் அதே பொது ஜனம் தான். இந்த நிதர்சன உண்மையை நம்மில் எத்தனை பேர் உணர்ந்தவர்களாக இருக்கிறோம்?,  ஒத்துக்கொள்ளக்கூடியவர்களாக இருக்கிறோம்?. அதே படிப்பை தாங்களும் பெற்று, முறையாய் சிந்திக்க கூடிய திறனை பழகாத காரணத்தால், எந்தெந்த வகையிலெல்லாம் ஏமாற்றப்பட முடியுமோ அந்தந்த வழியிலெல்லாம்  ஏமாற்றப்பட்டு,  மானமிழந்து, மதியிழந்து  வாழ்க்கையை கடத்திக்கொண்டிருக்கிற மதிப்பிற்குரிய பொதுஜனம், நினைவிற்கு  வர வில்லையா?.

அலுவலிலே பல் திறன்கற்று, பல புரமோஷன் பெற்று, புகழோடு வாழ்ந்து  ஓய்வூதியத்துடன்  பணிமூப்பு பெற்ற,  பெருந்தகையோர்  தாம் பெற்ற அனுபவத்தை வைத்து, எப்படியெல்லாம்  பொதுஜனம்  சுரண்டப்படுகிறார்கள் என்று சொல்லி, பாவப்பட்டவர்கள் பிழைத்து வாழ வழி  சொல்லி தரலாமே !!!

பல்லாயிரவர் படித்தும் வேலையின்றி அன்றாடம் அல்லாடிக்கொண்டு இருக்கும் போது,   ஒய்வுபெற்று, ஓய்வூதியம் பெற்றும், பதவிசுகம் தலைக்கேறி பஞ்சமா பாதகம் செய்தோரை, உத்தமரென பறைசாற்றி, பதவிபிடித்து வாழ்வோரை, முகத்திரை கிழித்து நேர்படுத்த எழுதலாம்.

பஞ்ச்ப்பராரிகளுக்கு பரிந்து பேசுவதாய் நடித்து,  அழையா விருந்தாளியாய் அரசியலுக்கு வந்து, தியாகம் செய்வதாய் சொல்லிக்கொண்டு, கிடைக்கின்ற இடைவேளியில்ளெல்லாம் பணம் பண்ணுவோர், உலகத்தில் உள்ள அத்துணை வசதிகளையும் பல ஆயிரம் சம்பளமும் பெற்றுக்கொண்டு,  பஞ்சை பராரிகலாய் வாழுவோர் முன்பு, கூச்சமின்றி சம்பள உயர்வு வேண்டும் நாடாளுவோர் பற்றி சொல்லலாம் !!!! 

தினமும் தனக்கு லாபம் உண்டோ இல்லையோ, தவறாமல் மாமூல் கட்டும், சுமை தூக்கிகள், சிறு  தலை சுமை வியாபாரிகள்,  இப்படி எத்தனையோ பேர் பற்றி எழுதலாமே!!! நீங்கள் அறியாததா ?  அய்யா பணத்தாலும், செயலாலும் செய்யமுடியாவிட்டாலும் எழுத்தாலாவது வழிகாட்டுங்கள்.

  ஒய்வு பெற்ற பெருந்தகையீர்.........உங்களைத்தான்

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........