Tuesday, January 19, 2016

ஒய்வு பெற்ற பெருந்தகையீர்.........உங்களைத்தான்

ஒரு காலம் இருந்தது,  பெயரறியாத யாரும் எழுதிவிட முடியாது, அப்படியே எழுதினாலும பிரசுரிக்க முடியாது.  இன்று அப்படியல்ல,   எழுத படிக்க தெரிந்து,  சிறிது ஆங்கில அறிவும் இருந்து விட்டால்,  எழுதி  பிரசுரித்து விடலாம்.  பெரும்பாலான  அரசியல்வாதிகள் கூட  டுவிட்டரிலேயே அரசியல் நடத்துகிறார்கள்.   நம் பெருமை மிகு  பிரதமர் கூட, அறிவிப்புகளை அதிலே தான் செய்கிறார்.

இன்றைக்கு எத்துனை தமிழ் வலைத்தளங்கள், பெருமையாகவும் இருக்கிறது அதே நேரத்தில் மனதில் ஒரு சோகமும் இழையோடுகிறது.  மிக நல்ல மரியாதைக்கு உரிய வேலைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்,  எடுத்துக்கொண்ட  பொருளை பற்றி மிக சிறப்பாக சுவைபட நகைச்சுவை மிளிர   எழுதுகிறார்கள். ஆனால்  படிப்பவர்களுக்கு கிடைக்கின்ற அந்த உடனடி களிப்பை தவிர வேறேதாவது உருப்படியான விளைவைசமுதாய ஏற்றம் சார்ந்த, சமுதாய அக்கறை சார்ந்த மாற்றத்தை உண்டாக்க ஒரு காரணியாக இருந்திருக்குமா என்று கேட்டால்,  நேரமெடுத்து மிக மிக யோசித்து பதில் சொன்னாலும், இல்லை என்றே ஏமாற்றத்துடன் சொல்ல வேண்டி இருக்கும்.`

இன்றைக்கு நாட்டில் படித்தவர் என்று சொல்லிக்கொள்கிற எல்லோருக்குமே,  படிப்பிற்கு முதலிட்டு உதவியோர் மாண்புமிகு பொது ஜனம் தான்.  பலபேர் முன்னேற ஏணியாய் தோள் கொடுத்து இருந்த இடத்திலேயே இருப்பதும் அதே பொது ஜனம் தான். இந்த நிதர்சன உண்மையை நம்மில் எத்தனை பேர் உணர்ந்தவர்களாக இருக்கிறோம்?,  ஒத்துக்கொள்ளக்கூடியவர்களாக இருக்கிறோம்?. அதே படிப்பை தாங்களும் பெற்று, முறையாய் சிந்திக்க கூடிய திறனை பழகாத காரணத்தால், எந்தெந்த வகையிலெல்லாம் ஏமாற்றப்பட முடியுமோ அந்தந்த வழியிலெல்லாம்  ஏமாற்றப்பட்டு,  மானமிழந்து, மதியிழந்து  வாழ்க்கையை கடத்திக்கொண்டிருக்கிற மதிப்பிற்குரிய பொதுஜனம், நினைவிற்கு  வர வில்லையா?.

அலுவலிலே பல் திறன்கற்று, பல புரமோஷன் பெற்று, புகழோடு வாழ்ந்து  ஓய்வூதியத்துடன்  பணிமூப்பு பெற்ற,  பெருந்தகையோர்  தாம் பெற்ற அனுபவத்தை வைத்து, எப்படியெல்லாம்  பொதுஜனம்  சுரண்டப்படுகிறார்கள் என்று சொல்லி, பாவப்பட்டவர்கள் பிழைத்து வாழ வழி  சொல்லி தரலாமே !!!

பல்லாயிரவர் படித்தும் வேலையின்றி அன்றாடம் அல்லாடிக்கொண்டு இருக்கும் போது,   ஒய்வுபெற்று, ஓய்வூதியம் பெற்றும், பதவிசுகம் தலைக்கேறி பஞ்சமா பாதகம் செய்தோரை, உத்தமரென பறைசாற்றி, பதவிபிடித்து வாழ்வோரை, முகத்திரை கிழித்து நேர்படுத்த எழுதலாம்.

பஞ்ச்ப்பராரிகளுக்கு பரிந்து பேசுவதாய் நடித்து,  அழையா விருந்தாளியாய் அரசியலுக்கு வந்து, தியாகம் செய்வதாய் சொல்லிக்கொண்டு, கிடைக்கின்ற இடைவேளியில்ளெல்லாம் பணம் பண்ணுவோர், உலகத்தில் உள்ள அத்துணை வசதிகளையும் பல ஆயிரம் சம்பளமும் பெற்றுக்கொண்டு,  பஞ்சை பராரிகலாய் வாழுவோர் முன்பு, கூச்சமின்றி சம்பள உயர்வு வேண்டும் நாடாளுவோர் பற்றி சொல்லலாம் !!!! 

தினமும் தனக்கு லாபம் உண்டோ இல்லையோ, தவறாமல் மாமூல் கட்டும், சுமை தூக்கிகள், சிறு  தலை சுமை வியாபாரிகள்,  இப்படி எத்தனையோ பேர் பற்றி எழுதலாமே!!! நீங்கள் அறியாததா ?  அய்யா பணத்தாலும், செயலாலும் செய்யமுடியாவிட்டாலும் எழுத்தாலாவது வழிகாட்டுங்கள்.

  ஒய்வு பெற்ற பெருந்தகையீர்.........உங்களைத்தான்

Saturday, December 5, 2015

எத்துனை காலம் தான் இப்படியே இருக்கப்போகிறதோ

இன்றைக்கு இந்தியர்களுக்கு கிடைத்திறுக்கிற வலைத்தள வசதிகள், வரப்பிரசாதமா ? அல்லது சாபமா ? என்று தலையை பிய்த்துக்கொள்ளும் அளவிற்கு நம்மை பலவகை குழப்பங்களுக்கு ஆளாக்கும் விசயங்கள் வலம்  வந்து கொண்டிருக்கிறது.  பலர் பலவிசயங்களை ஆதார பூர்வமாக எழுதினாலும்,  அவைகளை சீர் தூக்கி பார்க்காமல் கண்மூடித்தனமாக ஒட்டு மொத்தமாக ஒதுக்கித்தள்ளும் தன்மை விவரமறிந்தவர்களாக கருதப்படுகிற, படித்தவர்களிடத்திலும் இருப்பதை  பார்க்கும் போது என்ன  சொல்வது என்றே சொல்லத்தெரியவில்லை.

சுதந்திர போராட்ட காலம் தொட்டே,  சுய நலம் கருதி ஒருவருக்கொருவர், ஒருசாராருக்கு மறுசாரார் செய்த செயல்களின், இருட்டிக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் ஆதாரங்களுடன் வெளிவரும்போது,  ஊழலும் வஞ்சகமும் இந்த நாட்டின் பிறப்பிலேயே உருவாகி  விட்டதோ என்ற எண்ணத்தை  உருவாக்கு கிறது.


பழம் தின்று கொட்டை போட்ட பழம்பெரும், வயதான தலைவர்கள் பலரிருக்க காங்கிரசின் தலைமை பொறுப்பேற்று நாடாண்ட திருமதி இந்திராகாந்தியை பற்றி,  எப்படி அவரால் இப்படி வரமுடிந்தது என்ற கேள்விகள் அக்கால ஊடகங்களில் வலம் வந்த போது,  பெருந்தலைகளின் பலதரப்பட்ட ரகசியங்கள் கோப்பு வடிவில் அவரிடம் இருந்ததாக செய்திகள் வந்தன.  அதே போல் தான் சிரித்தே அறியாத நரசிம்ம ராவின்  சிறுபான்மை அரசு,  ஆடாமல் அசையாமல் ஐந்தாண்டுகாலம் அரசோச்சியது பற்றியும் பேசப்பட்டது.  இப்படிபட்ட இரும்புக்கரம் கொண்டவர்கள்  மறைவிற்கு  பின்னால்,  கட்டுண்டு இருந்தவர்கள்  அவரவர்க்கு ஆதரவான அரசோ, வேண்டியவர்களோ ஆட்சிக்கு வரும்போது,  ரகசிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டு,  பிடி கழன்று விடுதலையாகி !!!  விடுகிறார்கள்.  பின்னால் அடக்கியாளும்  திறனற்றவர்கள் பதவிக்கு வரும் போது, அவர்களை பெருசுகள் ஆட்டிப்பார்க்க முனைகிறார்கள்.

இந்த பழைய விசயங்களை அசைபோட காரணமானவை, சில தளங்களில் வெளியான புதிதும் பழையதுமான தகவல்கள் தான். சில ஆண்டுகளுக்கு முன்னாள் ராஜீவ் காந்தி பெயரில் இருந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கி கணக்கு பற்றி ஒருவர் சாமியாடினார், அவர் வழி பற்றி இன்னும் சிலர் எழுதவும் செய்தனர். இடையில் என்ன நடந்தது ?  ஏன்  அதன் பின்பு பேச்சு மூச்சே காணோம் ?  பெட்டிகள்  கை மாறியதா ?  இல்லை  சாமியாடிகளின் குடிமி,  ராஜீவ் படுகொலை விசாரணை கமிஷன் மூலம் கிடைத்த ஆதாரம், எதிர் தரப்புக்கு கிடைத்ததா யாருக்கு தெரியும் ?.  இன்றும்  கூட ஆள்பவர்களை,   80000 கோடி  நிலக்கரி ஏல வரவு  பிளஸ்  அலைக்கற்றை ஏலவரவால், நாட்டில்  வருமான வரியையே நீக்க முடியுமே ?  என்று கோடிகாட்டி,  விரைவில்  எனக்கு பதவி தராவிட்டால் என்பது போல,  ஒரு செய்தியை குருவி சொன்னது.  இவர்கள் எல்லாம்  சேர்ந்து நம்மை வைத்து அரசியல் சதுரங்கம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே கருப்பு பணத்தை கொண்டுவந்து, ஒவ்வொரு குடிமகனின் பெயரிலும்  ரூ 15 லட்சத்தை போடப்போவதாக,  உணர்ச்சி வசப்பட்டு சொல்லி,  ஆப்பு பிடுங்கிய குரங்காக  நொந்து நூடுல்ஸாகி போனவர்கள்,  இன்னும் என்னவெல்லாம் ட்விட்டர் குருவி கூச்சளிடுமோ என்று கவலை கொன்டிருக்கிரார்கள்.

இந்த தேசத்தில்  தினசரி வாழ்க்கையையே பெரிய இமாலய சாதனையாக செய்து கொண்டிருப்பவர்கள்,  வெள்ளந்தியாய் யார் என்ன சொன்னாலும்,  மேடையேறி மைக் பிடித்து, செயற்கையாய் குரல் உடைய, நான் உங்களுடைய வீடுகளை சந்திர மண்டலத்தில் கட்டித்தரப்போகிறேன் !!  உங்களுடைய வாழ்நாளில் யாருமே இப்படியொரு வாக்குறுதியை கொடுத்து பார்த்திருக்க மாட்டீர்கள் !!!  என்றுசொல்லும் பொது நம்பி வாக்களிக்கிறார்கள். சொல்பவர்கள்,   இதெல்லாம் எத்தனை நாட்களுக்கு இந்த முண்டங்களுக்கு நினைவிருக்க போகிறது என்று நினைத்தவர்கள், தைரியமாக ஒருபடி  மேலே போய்,  " அப்படியெல்லாம் ஒரு உணர்ச்சி பெருக்கிலே பேசுவது தான் "  என்று தெனாவெட்டாக பேசியதின் விளைவு,  பீகாரில் பேரிடியாய் தலையில் இறங்கி விட்டது.

இப்படி ஒருவர்க்கொருவர் அவரவர் செய்த கிரிமினல் காரியங்களின் ஆதாரங்களை வைத்துக்கொண்டு மிரட்டி காரியங்களை சாதித்துக்கொண்டும், கல்லாக்களை நிறைத்துக்கொண்டும் இருக்கிறார்கள்.   இந்த  67, 68 கால் சுதந்திர இந்தியாவில்  சுருட்டலும் சுரண்டலும் தான் சொல்லிக்கொள்ளும் அளவில் இருக்கிறதே தவிர,  மக்களின் நிலைமை சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை,  இன்னும் எத்துனை காலம் தான் இப்படியே இருக்கப்போகிறதோ தெரியவில்லை.

Sunday, November 22, 2015

கம்யுனிஸ்ட்காரர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இன்றைக்கு ஒரு அரை நூற்றாண்டுகலுக்கெல்லாம்  முன்பு பார்த்தோம் என்றால், அடித்தட்டு மக்களுக்கு ஒரு பாது காப்பாக இருந்த ஒரு கட்சி கம்முனிஸ்ட்.   கட்சிகாரர்கள் என்று இல்லை, யாராகிலும் எந்த பிரச்சினை களுக்கும், அவர்களது கட்சி ஆபிசுக்கு சென்றால் போதும், பாதுகாப்பு தான்.  ஒவ்வொரு வட்டத்திலும், விவரம் அறிந்த வழக்கறிஞர் ஒருவர் இருப்பார், அவரே வந்து உதவி செய்வார்.   சம்பந்த பட்டவர்களுக்கு  சட்டம் சொல்லி, உரிமையை  சொல்லி தருவார்,  போலீஸ்காரர்கள் கூட கமுனிஸ்ட் தொடர்பு என்றால் யோசித்தே செயல் படுவார்கள்.  பலருக்கு தனித்து செயல் படுவதை விட கூட்டாக செயல் பட்டால் சக்தி அதிகம் என்று காட்டி தந்தார்கள்.  ஞாயத்திற்கு போராடுபவர்களாக இருந்தார்கள்.

அண்ணாதுரை  முதல்வர் ஆனதும், சிறுக சிறுக தனியார் பஸ் கம்பனிகளை எல்லாம்  அரசுடமை ஆக்கினார்.  லாபம்  கொழித்த தொழில் அரசு கைக்கு மாறியது,  தொழிலாளிகள்  எல்லாம் அரசு ஊழியர் ஆனார்கள்.  பல்வேறு தொழில் சங்கங்கள் உருவானது. அவர்களுக்கு எது செய்தாலும் நம்மை வேலையை விட்டு தூக்க முடியாது என்ற மமதை தலைக்கேறியது.  நீண்ட தூர பயணிகள்  A/C பயணக்கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் போது,  இடைவழியில் நடத்துனர், டிரைவர் மாறும் போது,  சாதாரண கட்டண வண்டிகளில் ஏற்றி விட,  A/C  கட்டணத்தை திருப்பி தாருங்கள் அல்லது  A/C  வண்டியில் ஏற்றிவிட சொன்ன பயணிகளை தரக்குறைவாக பேசியது மட்டுமின்றி, கூடுதலாக வாதிட்டவர்களை  அடிக்கக்கூட போனார்கள், காரணம்  சங்கங்களின் பின் பலம்.  வண்டியில் இடமிருந்தால்,  அமர்ந்து பயணம் செய்ய லாயக்கு அற்ற இருக்கை இருந்தாலும், பயணியை ஏற்றிக்கொண்டு  டிக்கெட்டும் கொடுத்து,  குறை சொல்லி வாதிடும் பயணியுடன் சண்டை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.  அப்பொழுது அதிகம் இருந்தது கமுனிஸ்ட் சங்கங்கள் தான், ஞாயம் யார் பக்கம் இருந்தாலும் கட்சி சங்க உறுப்பினர் பக்கமே பேச தொடங்கினார்கள். பல்லாயிரம் ரூபாய் நஷ்டத்தில் ஓடினாலும்,  தொழிலாளிகளுக்கு சம்பளமும்  விழாக்கால போனசும் வேண்டும்.  பணம் கொழித்த தொழில் இப்படியானதே என்று யாருக்கும் கவலை இல்லை,   மக்கள் பணம் என்ன ஆனது என்று கேட்பார் யாரு மில்லை.  ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் விளங்காது என்பது போல்,  அரசு தொட்ட தொழில் எதுவும் விளங்காது என்பதற்கு இலக்கணமாய் ஆகி போனது அரசு போக்குவரத்து கழகங்கள்.  போக்குவரத்து கழகங்கள்  இழக்கும்  பணம்,  அதில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் பணமும் தான் என்று அவர்களுக்கு உணர்த்துவார் யார் ? வருவாயை உயர்த்தி நஷ்டத்தை லாபமாக்கி, கூடுதல் சம்பளமும் போனசும் தாருங்கள் என்று உரிமையோடு கேட்க சொல்லிக்கொடுப்பவர்கள் யாரிருக்கிறார்கள் ?.  ஒருவேளை நாளை ஓட்டுபொறுக்கிகள்,  இழுத்துமூடினால் விட்டு விடுவார்களா ?  அவர்களுக்கு சொல்பவர் யார் ?.

தானும் வாழ்க்கையில் ஒரு மனிதனாக வேண்டும், சாதிக்க வேண்டும் என்று சொல்லி, மனைவியின் நகைகளை விற்று,  வங்கிகளுக்கு கடன் பெற வென்று நடையாய் நடந்து, தனது வாழ்க்கையையே பணையம் வைத்து தொழில் தொடங்கி, தொழிலாளியோடு தொழிலாளியாய் உழைத்து வளர்ந்த போது,  அன்று என் முன்பு சைக்கிளில் வந்தாய் இன்று காரில் வருகிறாய், எனக்கு கூடுதல் சம்பளமும் போனசும் தா, இல்லை என்றால் தொழிலை இழுத்து மூடு என்று சொல்கிற தொழிலாளிக்கு, ஞாயத்தை எடுத்து சொல்லாத கமுநிஸ்ட், தொழில் சங்கங்களே, பழைய கமுநிஸ்ட் களே  எங்கே போனீர்கள் ?.

இந்த கம்பனியின்  ஒவ்வொரு நட்டும்  போல்டும், எனக்கு தெரியும்,  என் உழைப்பினால் வளர்ந்தது இந்த கம்பனி என்று சொல்லும் தொழிலாளி,  உழைப்புக்கு சம்பளம் வாங்க வில்லையா ?  தொழில் அறியா உனக்கு தொழில் கற்று தந்து, வேலையும் கொடுத்தவராயிற்றே ?  தொழில்முனைவர் தன வாழ்க்கையையே பணயம் வைத்தாரே ? ஊன் உறக்கம் இன்றி சுற்றி அலைந்து நீ உருவாக்கிய பொருளை விற்று காசாக்க அலைந்தாரே ?  உனக்கு சரியான நேரத்தில் சம்பளமும் தந்தாரே ?  என்று  ஞாயம் உரைக்க  ஏன்  மறந்தீர் காம்ராட்களே ?    உன்னை  வேலைக்கு தான் சேர்த்தார் பங்காளியாக அல்ல என்று சொல்ல ஏன் தயங்கு கிறீர்கள் !  இப்படி மூடிக்கிடக்கின்ற, அழியும் நிலையில் இருக்கிற தொழில்கள எத்தனை ?

வலது, இடது என்று மட்டுமே என் போன்ற அனுதாபிகள் அறிந்த கம்முநிஸ்ட் இன்று எத்தனை வகை ?  ஒற்றுமையாய்  போராடுவதன் மேன்மையை உணர்த்தியவர்கள் இன்று,  சிறு சிறு குழுவாய் ஆகி போனீர்களே ?  படித்த பல அனுதாபிகள்,  நாட்டில் தொழில் கெட்டதிற்கு,  கமுநிஸ்ட் களும் சங்கங்களும் தான் என்று பொறுமும்  அவப்பெயரை நீக்க முயல மாட்டீர்களா ?

கோவன் என்றொரு நட்சத்திரம் உதித்துத்தான் இருக்கிறது, போதாது.  சட்டம் இருக்கிறது சட்டபுத்தகங்களிலே, உறங்கி கிடக்கிறது,  உயிரூட்ட  பொது நல வழக்கு தொடர்ந்து உயிரூட்ட, தன்னலமற்ற வழக்குரைஞர்கள் எங்கே?.  தேடி கண்டுபிடித்து  முன்னிறுத்த மாட்டீர்களா ?. கட்சி சார்பற்ற அனுபவம் மிக்கவர்களை அடியாளம் காட்டுங்களேன்.

இன்று நாட்டில் உங்களுக்கான தேவை அதிகமிருக்கிறது, ஒன்று சேருங்கள், தொழிலாளி வர்க்கத்துக்கு உண்மையை உரக்க சொல்லி உணர வையுங்கள் , தொழில் துறையை மேன்மையாக்கி நாடும் நாமும் நலம்பெற வளம்பெற முயலுங்கள், உண்மையான சுயநல மற்ற  கமுநிஸ்ட் டால் தான் இது முடியும்  !!!!!,  வீறு நடை கொண்டு ஒன்று பட்டு எழுந்து வாருங்கள் தோழர்கள